2020 ரமளான் - சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000: இஸ்லாம் - பாகம் 8

முந்தைய 200+ சின்னஞ்சிறு கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். இந்த தற்போதைய கட்டுரையில், "இஸ்லாம்" என்ற தலைப்பில் 30 கேள்வி பதில்களைக் காண்போம்.

உலகம் முஸ்லிம்களை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை, முஸ்லிம்கள் உலகை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. முஸ்லிமல்லாத மக்களுக்கு முஸ்லிம்கள் ஒரு புரியாத புதிராகவே உள்ளார்கள்.  எல்லோருக்கும் புரியும் விஷயம் முஸ்லிம்களுக்கு மட்டும் புரிவதில்லை, அதே போன்று முஸ்லிம்கள் பேசுவதை அகராதிகள் வைத்துக்கொண்டு தான் புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது.

முஸ்லிம்களை புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், முஸ்லிம்கள் பின்பற்றும் இஸ்லாமை நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும். முஸ்லிம்களின் நம்பிக்கை என்ன? பழக்க வழக்கங்கள் என்ன? அவர்களின் கலாச்சாரம் என்ன? அவர்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில்களைக் கண்டால் தான், அவர்களை புரிந்துக் கொள்ளமுடியும்.

நான் ஏன் முஸ்லிம்களையும், இஸ்லாமையும் புரிந்துக்கொள்ளவேண்டும்? என்று கேள்வி கேட்கவேண்டாம். நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும்,  ஒரு குறிப்பிட்ட மக்களை புறக்கணித்துவிட்டு, இந்த உலகில் நிம்மதியாக நாம் வாழமுடியாது என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளவும். நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.

சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000: இஸ்லாம் (211 – 240) - பாகம் 8

கேள்வி 211:  முஸ்லிம் என்றால் யார்?

பதில் 211:   இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுகிறவர்களை முஸ்லிம்கள் என்பார்கள். இஸ்லாமுடைய இறைவனின் பெயர் "அல்லாஹ்" என்பதாகும். முஹம்மது என்பவர் அல்லாஹ்வின் தூதர் (தீர்க்கதரிசி) என்றும் இவர்கள் நம்பவேண்டும். குர்‍ஆன் என்பது இஸ்லாம் மதத்தின் வேதமாக முஸ்லிம்களால் கருதப்படுகின்றது.

கேள்வி 212: முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள் மற்றும் முஹம்மதியர்கள், வித்தியாசம் என்ன?

பதில் 212:இந்த மூன்று வார்த்தைகளும் முஸ்லிம்களையே குறிக்கிறது. இஸ்லாம் என்பது ஒரு மதம், இதனை பின்பற்றுகிறவர்களை "இஸ்லாமியர்கள்" என்றும் முஸ்லிம்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

முஹம்மது என்பவர் அல்லாஹ்வின் இறைத்தூதர் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு " முஹம்மதியர்கள்" என்ற பொதுவான பெயரில் முஸ்லிம்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள். சமீப காலமாக "முஹம்மதியர்கள்" என்ற வார்த்தை கைவிடப்பட்டு முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றது.

கேள்வி 213: அரேபியர்கள் அனைவரும் முஸ்லிம்களா?

பதில் 213: இல்லை, அரேபியர்கள் அனைவரும் முஸ்லிம்கள் அல்ல. அரேபியா என்பது ஒரு தீபகர்ப்பம். இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பழங்குடியினர்கள் அரேபியர்கள் என்று இஸ்லாமுக்கு முன்பும் அழைக்கப்பட்டு இருந்தார்கள். அக்காலத்தில் அரேபிய பகுதியில் அரபி பேசும் கிறிஸ்தவர்களும், யூதர்களும் கூட வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள்.

ஏழாம் நூற்றாண்டில் அந்த அரேபிய பழங்குடியினரில் தோன்றிய முஹம்மது, முழு அரேபியாவை ஆக்கிரமித்து, அதனை இஸ்லாமிய மயமாக மாற்றினார். அவருக்கு பிறகு அடுத்து வந்த கலீஃபாக்கள் கூட பல மத்திய கிழக்கு நாடுகள் மீது யுத்தம் செய்து அவைகளை ஆக்கிரமித்தார்கள், இஸ்லாமை பரப்பினார்கள். இன்று அரேபியர்கள் என்றால் அனைவருக்கும் "முஸ்லிம்கள்" தான் ஞாபகத்திற்கு வருகிறது.

உலக முஸ்லிம்கள் ஜனத்தொகையில் அரபி பேசுபவர்கள் 15% உள்ளதாக கூறப்படுகின்றது. மீதமுள்ள முஸ்லிம்கள் (85%) அரபி பேசாத மற்ற உலக நாடுகளில் வாழ்பவர்கள் ஆவார்கள்.  தங்கள் தங்கள் நாட்டின் தாய் மொழியை பேசுகிற முஸ்லிம்கள் இவர்கள் ஆவார்கள். தமிழ் மற்றும் மளையாலம் பேசும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், உருது பேசும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தொழுதுக்கொள்ளும் போது மட்டுமே அரபியில் தொழுதுக்கொள்வார்கள், மற்றபடி இவர்களுக்கு அரபி மொழி பேசவும் வராது, இவர்களுக்கு புரியாதும் கூட. இமாம்கள் என்றுச் சொல்லக்கூடிய அறிஞர்கள் மட்டுமே அரபி மொழியை பேசமும் புரிந்துக்கொள்ளவும் செய்வார்கள்.

இந்தியர்கள் என்றால் "இந்துக்கள் மட்டும்" என்றுச் சொல்வது எப்படி தவறோ! அது போல அரபியர்கள் என்றால் வெறும் முஸ்லிம்கள் என்றுச் சொல்வது தவறு. அரபி பேசும் முஸ்லிமல்லாதவர்களும் (கிறிஸ்தவர்களும், யூதர்களும்,..) இருக்கிறார்கள்.

கேள்வி 214: முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையேயுள்ள சம்மந்தம் என்ன?

பதில் 214:  யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சம்மந்தமுள்ளது, ஆனால் முஸ்லிம்களுக்கும் மற்ற இருவருக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை.

கேள்வி 215: இஸ்லாமுக்கும் யூத கிறிஸ்தவர்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறதே (ஆபிரகாம், இஸ்மாயீல், எருசலேம்...)? நீங்கள் இல்லை என்றுச் சொல்கிறீர்களே!

பதில் 215:

நபர்கள்:

யூதர்களின் தகப்பன் ஆபிரகாம் (கி.மு. 2000). ஆபிரகாமுக்கு 2000 ஆண்டுகள் கழித்து இயேசுக் கிறிஸ்து யூதராக வந்தார், அவரை பின்பற்றுகிறவர்கள் கிறிஸ்தவர்கள். 

இயேசுவிற்கு 600 ஆண்டுகளுக்கு பிறகு அரேபியாவில் 'முஹம்மது' என்ற பெயரில் ஒருவர் வந்து, ஆபிரகாம், இயேசுவின் வழியில் வந்த நபி என்று தன்னைப் பற்றி கூறிக்கொண்டார். இவர் உண்டாக்கிய மதம் தான் இஸ்லாம். இந்த மூன்றும் ஆபிரகாமிய மதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வேதங்கள்:

யூதர்களின் வேதம் பைபிளில் உள்ள பழைய ஏற்பாடு. கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டையும் பின்பற்றுகிறார்கள், புதிய ஏற்பாட்டையும் பின்பற்றுகிறார்கள். முஸ்லிம்களின் வேதம் குர்‍ஆன். முந்தைய வேதமாகிய பைபிளை (பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள்) நம்புகிறோம் என்று முஸ்லிம்கள் சொல்வார்கள், ஆனால் அதனை படிக்கமாட்டார்கள், அவைகள் மாற்றப்பட்டுவிட்டது என்று குற்றம்சாட்டுவார்கள்.

குர்‍ஆனில் பைபிளின் நிகழ்ச்சிகள் மறுபதிவு செய்யப்பட்டிருக்கிறது, இதனால் தான் பைபிளில் வரும் நபர்களின் பெயர்கள், நிகழ்ச்சிகள் குர்‍ஆனிலும் வருகின்றது.

சொந்தம் கொண்டாடுதல்: 

குர்‍ஆன் யூத கிறிஸ்தவர்களின் பல விவரங்களை சொந்தம் கொண்டாடுகின்றது.

 • யூத கிறிஸ்தவர்களின் வேதங்களை குர்‍ஆன் சொந்தம் கொண்டாடுகிறது.
 • பைபிளின் இறைவனாகிய "யெகோவா தேவனை" குர்‍ஆன் சொந்தம் கொண்டாடி, அல்லாஹ் தான் யெகோவா தேவன் என்று சொல்கிறது.
 • பைபிளின் தீர்க்கதரிசிகளை குர்‍ஆன் சொந்தம் கொண்டாடுகிறது. 
 • கடைசியாக‌ எருசலேமையும் இஸ்லாமின் மூன்றாம் புனித பூமி என்றுச் சொல்லி, இஸ்லாம் சொந்தம் கொண்டாடுகிறது.

இஸ்லாம் யூத கிறிஸ்தவர்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, "நீங்கள் தவறு, நான் தான் சரி" என்றுச் சொல்கிறது. இங்கே தான் யூத கிறிஸ்தவர்களுக்கும் நெஞ்சு எரிகிறது. யூதர்களும் கிறிஸ்தவர்களும் முஹம்மதுவை ஒரு நபியாக ஏழாம் நூற்றாண்டிலிருந்தே ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆக, இஸ்லாம் பைபிளின் இறைவனை எடுத்துக்கொண்டது, நபிமார்களை எடுத்துக்கொண்டது, வேதங்களை எடுத்துக்கொண்டது, கடைசியாக எருசலேம் நகரத்தையும் எடுத்துக்கொண்டது.

அதே நேரத்தில் பைபிளில் உள்ள பல சத்தியங்களை, கட்டளைகளை மாற்றிச் சொல்கிறது. அதனால், பைபிளின் படி முஹம்மது ஒரு கள்ள நபி, குர்‍ஆன் யெகோவா அனுப்பிய வேதமில்லை. பைபிளின் இறைவனாகிய‌ யெகோவா, குர்‍ஆனின் இறைவன் அல்லாஹ் இல்லை.

இப்போது புரிகின்றதா, யார் யாரை சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்று!

கேள்வி 216: இஸ்லாமின் மூன்று புனித நகரங்கள் யாவை?

பதில் 216: முஸ்லிம்கள் மூன்று நகரங்களை புனிதமாக கருதுகிறார்கள்:

1) மக்கா: முஹம்மது பிறந்த ஊர், மற்றும் காபா என்ற ஆலயம் இருக்கும் இடம். இந்த காபா உள்ள திசையை நோக்கி முஸ்லிம்கள் தொழுகிறார்கள்.

2) மதினா: முஹம்மது மக்காவிலிருந்து உயிர் தப்பச் சென்ற இன்னொரு ஊர். இந்த இடத்தில் இஸ்லாமின் முதல் மசூதி உள்ளது. இஸ்லாம் வளர்ந்தது இந்த ஊரிலிருந்த போது தான்.

3) எருசலேம் நகரம்: முந்தைய வேதக்காரர்களான யூத கிறிஸ்தவர்களின் புனிதப் பட்டணம். இந்த பட்டணத்தை முஹம்மதுவிற்கு அடுத்த ஆட்சி புரிந்த உமர் அவர்கள் முற்றுகையிட்டு ஆக்கிரமித்தார்கள்.

உலக அரசியிலும் மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் சண்டைகள் இந்த நகரத்தையும், இஸ்ரேல் மண்ணையும் சுற்றியே நடப்பதை செய்திகளில் காணலாம்.

கேள்வி 217: முஸ்லிம்கள் ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழுகிறார்கள்?

பதில் 217: முஸ்லிம்களில் இரண்டு பெரிய பிரிவுகள் உள்ளன. சன்னி பிரிவினர், ஷியா பிரிவினர். 

சன்னி பிரிவினர் ஒரு நாளைக்கு ஐந்த வேளை தொழுகிறார்கள்.

ஷியா பிரிவினர் ஒரு நாளைக்கு மூன்று வேளை தொழுகிறார்கள். 

இந்த மூன்று வேளைகளில் ஐந்து தொழுகைகளையும் சேர்த்து இவர்கள் தொழுது விடுகிறார்கள் என்று ஷியா பிரிவினர் கூறுகிறார்கள்.

கேள்வி 218: முஸ்லிம்களில் தினமும் மூன்று முறை மட்டும் தொழுபவர்கள் இருக்கிறார்களா?

பதில் 218: மேலே சொன்னது போன்று, ஷியா முஸ்லிம் பிரிவினர் மூன்று வேளை தொழுகிறார்கள். அதே போன்று "குர்‍ஆன் மட்டும்(Quran Only Muslims)" என்று ஒரு முஸ்லிம் குழுவினரும் இருக்கிறார்கள். இவர்கள் மூன்று வேளை மட்டுமே தொழுகிறார்கள். இவர்களின் கூற்றுப்படி குர்‍ஆன் மட்டும் தான் வேதம், ஹதீஸ்கள் மற்றும் இதர இஸ்லாமிய புத்தகங்களை அவர்கள் ஏற்பதில்லை.

குர்‍ஆனை மட்டும் நம்பும் இவர்கள் ஏன் மூன்று மட்டும் தொழவேண்டும்? என்று கேள்வி கேட்டால், இதற்கு பதில் "குர்‍ஆன் சொல்வது வேறும் மூன்று வேளை தொழுகை மட்டும் தான்" என்பதாகும்.

ஒரு முஸ்லிம் செய்யவேண்டிய கடமையை கூட குர்‍ஆன் தெளிவாகச் சொல்வதில்லை என்பது கசப்பான உண்மை.

கேள்வி 219: இஸ்லாமின் படி அல்லாஹ்விற்காக கட்டப்பட்ட முதலாவது மஸ்ஜித்(மசூதி, வணக்கஸ்தலம்) எது?

பதில் 219: இன்று மக்கா நகரில் காணும் காபா என்ற ஆலயம் தான் அல்லாஹ்விற்காக முதலாவது கட்டப்பட்ட ஆலயம் என்று இஸ்லாம் சொல்கிறது. பைத்துல்லாஹ் என்றும் காபாவை அழைப்பார்கள். பைத் என்றால் வீடு, ஆகையால் பைத்துல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் வீடு என்று இதன்  பொருள்.

 

கேள்வி 220: காபாவை கட்டியது யார்?

பதில் 220: அரபி மொழி வார்த்தை "காபா" என்றால் “கனசதுரம் (Cube)” என்று பொருள். மக்கா நகரில் உள்ள பெரிய மசூதியின் நடுப்பகுதியில் ஒரு கனசதுர வடியில் இது கட்டப்பட்டுள்ளது. இந்த காபாவை முதன் முதலில் ஆதாம் கட்டியதாகவும், அதன் பிறகு இப்றாஹீமும் இஸ்மாயீலும் கட்டியதாக இஸ்லாம் சொல்கிறது, இதற்கு சரித்திர ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இந்த காபாவில் 360 சிலைகளை வைத்து மக்கா பழங்குடியினர் வணங்கிக்கொண்டு இருந்தனர், இவர்களில் முஹம்மதுவும் ஒருவராவார். முஹம்மது மக்காவை கைப்பற்றிய பிறகு, அந்த சிலைகள் அனைத்தையும் காபாவிலிருந்து அகற்றிவிட்டார்.

முஸ்லிம்கள் முதல் 12+ ஆண்டுகள் எருசலேம் திசையை நோக்கி தொழுதார்கள், அதன் பிறகு தங்கள் வணக்கதிசையை (கிப்லா) காபாவிற்கு மாற்றிவிட்டார்கள். அன்றிலிருந்து இன்று வரை உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும், எந்த நாட்டில் இருந்தாலும், அவர்கள் மக்காவை/காபாவை நோக்கி தொழுகிறார்கள்.

கேள்வி 221: காபா மற்றும் எருசலேம் ஆலயத்திற்கு இடையே 40 ஆண்டுகள் இடைவெளியா?

பதில் 221: முஹம்மது ஒரு சரித்திர தவறை செய்துள்ளார், அதாவது சாலொமோன் என்ற அரசர் எருசலேமில் கட்டிய ஆலயத்திற்கும், காபா கட்டப்படுவதற்கும் இடையே 40 ஆண்டுகள் என்றுச் சொல்லியுள்ளார். முதலாவது முஹம்மது கூறியவற்றை படிக்கவும்:

ஸஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3366 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

அபூ தர்(ரலி) அறிவித்தார்

நான் (நபி(ஸல்) அவர்களிடம்),'இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள்,'அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்" என்று பதிலளித்தார்கள். நான்,'பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள்,'ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா" என்று பதிலளித்தார்கள். நான்,'அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது" என்று கேட்டேன். அவர்கள்,'நாற்பதாண்டுகள்' (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,'நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது" என்று கூறினார்கள்.

மேலும் அதே ஸஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3425 என்ற ஹதீஸையும் படிக்கவும், இந்த ஹதீஸின் முடிவுரையில் சில மாற்றம் உண்டு, ஆனால், சரித்திர விவரம் ஒன்று போலவே உள்ளது:

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3425

அபூ தர்(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' (ஜெரூசலம் நகரிலுள்ள 'அல் அக்ஸா' பள்ளி வாசல்)" என்று பதிலளித்தார்கள். நான், 'அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது" என்று கூறினார்கள். பிறகு, 'உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுது கொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு ஸஜ்தா செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்" என்று கூறினார்கள்.

நாம் தோராயமாக கணக்கிட்டால், ஆபிரகாம் வாழ்ந்த காலகட்டம் கி.மு. 2000 ஆகும், சாலொமோன் வாழ்ந்த காலம் கி.பி. 950 ஆகும். முஹம்மதுவின் கூற்றுப்படி, ஆபிரகாம் காபாவை கட்டினார் (புகாரி - பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3365), அதன் அடித்தளத்தை "ஆபிரகாம் அமைத்தார்" (புகாரி - பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3368). ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்பது பைபிளுக்கு முரண்பட்ட கருத்தாகும். உண்மையாகவே ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள் என்று கேட்டால், இதுவரை யாரும் இதற்கு சரியான பதிலை தரவில்லை. இந்த கட்டுரையை பொருத்தமட்டில், ஆபிரகாம் மக்காவிற்கு சென்றாரா இல்லையா என்பது முக்கியமல்ல, “ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்று முஹம்மது நம்பினார்” அதனால் அவர் அப்படி கூறியுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. எருசலேமில் முதல் ஆலயத்தை கட்டியது சாலொமோன் ஆவார்.

ஆபிரகாமுக்கும், சாலொமோனுக்கும் இடையே இருப்பது 40 ஆண்டு கால இடைவெளி இல்லை, கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளியாகும். இந்த முரண்பாடு குர்‍ஆனின் முரண்பாடு இல்லை, இதை ஏன் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், இது ஹதீஸில் காணப்படுகிறது. அதாவது முஹம்மதுவின் மூளை எதனை சரி என்று நம்பியதோ அதுதான் குர்‍ஆனிலும் உண்டு, ஹதீஸ்களிலும் உண்டு. குர்‍ஆனில் அனேக சரித்திர பிழைகள் உண்டு, அது போலவே, முஹம்மதுவின் சொல்லும் செயலும் அடங்கிய ஹதீஸிலும் அனேக சரித்திர தவறுகளை காணலாம்.

கேள்வி 222: கிஸ்வாஹ் (Kiswah) என்றால் என்ன?

பதில் 222: காபா என்பது ஒரு கனசதுர வடியில் உள்ள ஒரு கட்டிடம் என்று பார்த்தோம். இந்த கட்டிடம் மீது போர்த்தப்பட்டிருக்கும் ஆடைக்கு பெயர் தான் கிஸ்வாஹ் அல்லது கிஸ்வா ஆகும். ஒவ்வொரு வருடமும், புனித யாத்திரை செய்யப்படும் நாட்களில், 9ம் நாள் துல்ஹஜ் மாதம், இந்த கிஸ்வா துணி மாற்றப்படுகின்றது. இந்த ஆடை தயாரிப்பிற்காக சௌதி அரசு பல இலட்சங்கள் செலவிடுகிறது.

கேள்வி 223: இந்துக்கள் கோயில்களையும், மரங்களையும் சுற்றி வருவது போன்று, முஸ்லிம்கள் ஏன் காபாவை சுற்றி வருகிறார்கள்?

பதில் 223: முந்தைய காலங்களில் காபாவைச் சுற்றி மக்கள் நிர்வாணமாக தவாஃப் (சுற்றி வருதல்) செய்ததாக சொல்கிறார்கள். அதன் பிறகு அது நிறுத்தப்பட்டு, இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு மக்கள் அதை சுற்றி வந்துள்ளனர்.

ஏன் நீங்கள் இப்படி சுற்றுகிறீர்கள் என்று கேட்டால், அல்லாஹ் குர்‍ஆனில் சொல்லியுள்ளான், முஹம்மதுவும் அதனை செய்துள்ளார், எனவே நாங்களும் செய்கிறோம் என்றுச் சொல்வார்கள். 

பார்க்க குர்‍ஆன் 22:26 & 22:29 மற்றும் புகாரி ஹதீஸ் எண் 328:

22:26. (நபியே!) இப்ராஹீமை நம்முடைய வீட்டின் சமீபமாக வசிக்கும்படிச் செய்து (அவரை நோக்கி) "நீங்கள் எனக்கு எவரையும் இணையாக்காதீர்கள். என்னுடைய (இந்த) வீட்டை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும், அதில் நின்று, குனிந்து, சிரம் பணிந்து தொழுபவர்களுக்கும் அதனைப் பரிசுத்தமாக்கி வையுங்கள்" என்று நாம் கூறிய சமயத்தில்,

22:29. பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தரித்து, குளித்துத்) தங்கள் அழுக்குகளைச் சுத்தம் செய்து, தங்களுடைய நேர்ச்சைகளையும் நிறைவேற்றி, கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள்.

328. 'ஹஜ்ஜின்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் ஸஃபியாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது' எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள் 'அவள் நம்மைப் பயணத்தைவிட்டு நிறுத்தி விடுவாள் போலிருக்கிறதே! உங்களுடன் அவள் தவாஃப் செய்யவில்லையா?' என்று கேட்டார்கள். 'தவாஃப் செய்துவிட்டார்' என (அங்கிருந்தோர்) கூறினார்கள். 'அப்படியானால் புறப்படுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

காபா ஒரு விக்கிரத ஆராதனை ஆலயமாக இருந்தது, கோயில்களை சுற்றிவருதல் பழமையான தெய்வ வழிப்பாட்டு முறையாக இருந்ததால், அதையே முஹம்மது இஸ்லாமிலும் புகுத்தியுள்ளார்.

இஸ்லாமுக்கு முன்பாக இருந்த பலபழக்க வழக்கங்கள், விக்கிர ஆராதனை தெய்வ வழிப்பாட்டு முறைகளை முஹம்மது இஸ்லாமின் சட்டமாக மாற்றியுள்ளார், அவைகளில் காபாவை சுற்றுவதும் ஒன்றாகும்.

கேள்வி 224: காபாவின் உள்ளே என்ன இருக்கிறது?

பதில் 224: காபாவிற்கு உள்ளே 360 கற்சிலைகள் இருந்ததாக இஸ்லாம் சொல்கிறது. அந்த சிலைகளையே முஹம்மதுவும் வணங்கிக்கொண்டு இருந்தார். அவர் அல்லாஹ்வின் நபி என்று மாறிய பிறகு மக்காவை ஆக்கிரமித்தபோது, காபாவில் இருந்த அந்த சிலைகள் அனைத்தையும் அழித்துவிட்டார். இப்போது காபாவில் ஒன்றுமில்லை.

நவம்பர் 2016ம் ஆண்டு கூகுள் இந்த காபாவின் உள்ளே படம் எடுத்து இருக்கிறது, அதனை 360 டிகிரி பார்க்கும் படி செய்துள்ளது. இதனை பார்க்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: 

முஸ்லிமல்லாதவர்கள் மக்கா நகருக்குள் சென்று காபாவை பார்க்க முடியாது, எனவே, மேலே உள்ள தொடுப்பை சொடுக்கி ஒரு முறை பார்த்து விடுங்களேன்!

கேள்வி 225: ஒரு முஸ்லிம் ஐந்து வேளை தொழுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?

பதில் 225: ஒரு முறை தொழுகைக்கு 5 லிருந்து 8 நிமிடங்கள் வரை பிடிக்கும். தொழும் போது சிலர் நிதானமாக, சிலர் சிறிது வேகமாக குர்‍ஆன் வசனங்களை ஓதுவார்கள். இதனை கவனத்தில் வைத்துசொன்னால், அதிகபட்சமாக 10 நிமிடங்களுக்குள் ஒருவேளை தொழுகை முடிந்துவிடும்.

இது மட்டுமல்லாமல், தொழுவதற்கு முன்பாக உளு என்றுச் சொல்லக்கூடிய "மத சுத்திகரிப்பு" உண்டு, அதில் கை கால்களை, முகங்களை கழுவுவதற்கு இன்னொரு 5 நிமிடங்கள் பிடிக்கலாம்.

கூட்டி கழித்துப் பார்த்தால், ஒரு தொழுகைக்கு 15 நிமிடங்கள் பிடிக்கலாம். ஐந்துவேளை என்று கணக்கிட்டால் 15 x 5 = 75 நிமிடங்கள் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக‌ பிடிக்கும்.

கேள்வி 226: நாய் குறுக்கே வந்தால் தொழுகை முறிந்துவிடுமா? 

பதில் 226: தொழுகை என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல். மனிதன் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இறைவனை துதித்து, புகழ்ந்து அவரை போற்றி தன் விண்ணப்பங்களை தெரிவிக்கும் ஒரு செயலாகும். ஒரு வேளை மற்றவர்கள் நம் கவனத்தை முறித்தாலும், இதற்காக இறைவன் கோபித்துக்கொள்ளமாட்டான். 

நாய்கள் குறுக்கே வரக்கூடாது என்று விரும்புகிறவர்கள் வீட்டிற்குள் கதவை மூடிக்கொண்டு தொழட்டும், அதற்காக நாய்களைக் கொள்வது சரியான செயலாகுமா? தொழுகையின் இலக்கணத்தை சரியாக புரிந்துக்கொள்ளாத முஹம்மது எப்படி தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? 

நாய்கள் தொழுகையை முறித்துவிடும் என்று முஹம்மது கூறியுள்ளார், கறுப்பு நாய்களை கொல்லவேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

ஸஹீஹ் முஸ்லிம் எண் 882:

882. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிறநாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள். 

கேள்வி 227: முஸ்லிம் ஆண்கள் 4 திருமணங்கள் வரை செய்துக்கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கும் குர்ஆன் வசனம் எது?

பதில் 227: குர்‍ஆன் 4:3ம் வசனம் பலதார மணத்திற்கு அனுமதி அளிக்கிறது

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

கேள்வி 228: நாங்கள் இயேசுவை நம்புகிறோம், நேசிக்கிறோம் என்று முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் சொல்கிறார்களே! இதனை கிறிஸ்தவர்கள் எப்படி எடுத்துக்கொள்வது?

பதில் 228: நாங்கள் இயேசுவை நேசிக்கிறோம் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். எந்த இயேசுவை? என்று நாம் கேள்வி கேட்கவேண்டும்? 

இந்த கூகுள் தொடுப்பை சொடுக்கிப்பாருங்கள், முஸ்லிம்கள் இயேசுவை நேசிக்கிறோம் என்றுச் சொல்லி பொய்ப்பிரச்சாரம் செய்வதை காணலாம்.

இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பற்றி நற்செய்தி நூல்களில்  விவரித்துள்ளார்கள். இவர்கள் இயேசுவோடு நடந்தார்கள், அவரோடு உட்கார்ந்து சாப்பிட்டார்கள், அவரோடு பேசினார்கள், அவர் செய்த அற்புதங்களை தங்கள் கண்களால் கண்டார்கள். அவர்கள் இயேசுவை முழுவதுமாக அறிந்திருந்தார்கள்.

இதே போல, இயேசுவிற்கு 600 ஆண்டுகளுக்கு பிறகு வந்த குர்-ஆனிலும் இயேசுவைப் பற்றி சிறிது விவரிக்கப்பட்டுள்ளது. குர்-ஆனின் ஆசிரியருக்கு உண்மையான இயேசு யார் என்று  தெரியாது,  அவர் இயேசுவை பார்த்ததும் இல்லை, இயேசு வாழ்ந்த இடத்திலும் காலத்திலும் அவர் வாழ்ந்தது இல்லை.

இதன் அடிப்படையில் பார்த்தால், குர்-ஆன் சொல்லும் இயேசுவும் பைபிள் விவரிக்கும் இயேசுவும் வித்தியாசமானவர்கள். முஸ்லிம்கள் விளம்பரப்படுத்திய அந்த வாசகம், மக்களை குழப்புவதாக உள்ளது. கிறிஸ்தவர்கள் நம்பும் அதே இயேசுவை நாங்களும் நம்புகிறோம் என்ற பொய்யான அறிக்கையை அவர்கள் பதித்து இருந்தார்கள்.

ஆனால் உண்மையென்ன? பைபிளின் இயேசு ‘தேவ குமாரனாக இருக்கிறார், திரித்துவத்தின் இரண்டாம் நபராக இருக்கிறார், அவர் சிலுவையில் அறையப்பட்டார், மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார், மனித இனத்தின் பாவநிவர்த்தியாக இருந்தார்’. குர்-ஆனின் இயேசு எப்படிப்பட்டவர்? குர்-ஆன் இயேசுவின் திரித்துவ தெய்வீகத்தையும், அவரது மரணம்,  உயிர்த்தெழுதல் மற்றும் பாவநிவர்த்தியை மறுக்கிறது. இவைகள் வெறும் மேலோட்டமான வித்தியாசங்கள் என்று கருதக்கூடாது, இவைகள் அடிப்படை வித்தியாசங்களாகும். கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுத்தால், நீங்கள் உண்மையான இயேசுவை மறுதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பைபிள் சொல்லும்  இயேசுவை முஸ்லிம்கள் நம்பவில்லை? அவர்கள் நம்பும் இயேசு இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட ஒரு டூப்ளிகேட் இயேசு ஆவார். குர்‍ஆனில் சொல்லப்பட்ட இயேசு பைபிளில் சொல்லப்பட்ட இயேசு அல்ல.

ஒருவேளை கிறிஸ்தவர்கள் "நாங்கள் முஹம்மதுவை நம்புகிறோம், அவரை மதிக்கிறோம், ஆனால் அவரை ஒரு நபியாக நம்பமாட்டோம்" என்றுச் சொன்னால், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?  

முஸ்லிம்கள் நம்மிடம் வந்து "இஸ்லாம் வெளிப்படுத்தும் முஹம்மதுவை நீங்கள், நம்பவேண்டும், உங்கள் கற்பனையில் உதித்த முஹம்மதுவை நம்பக்கூடாது" என்றுச் சொல்வார்கள். இதே போலத்தான், "பைபிள் வெளிப்படுத்தும் இயேசுவை முஸ்லிம்கள் நம்பவேண்டும், முஹம்மதுவின் கற்பனையில் உண்டான இயேசுவை நம்பக்கூடாது".

முஸ்லிம்களின்  கூற்றுக்களைக் கேட்டு ஏமாறவேண்டாம் என்று கிறிஸ்தவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும்  படிக்கவும்:  முஸ்லிம்கள் இயேசுவை நேசிக்கிறார்களா?

கேள்வி 229: முஸ்லிம்கள் தாடியை வைத்து மீசையை எடுக்கிறார்களே! இதன் பின்னணி என்ன?

பதில் 229: ஒருவரது மீசையும், தாடியும் அவருக்கே சொந்தம், அவைகளை அவர் என்னவாவது செய்யலாம் தவறில்லை. இதே போல, ஒரு மார்க்கத்தின் அடிப்படையில் நம் வெளிப்புற தோற்றத்தை நாம் மாற்றிக் கொள்ளலாம், இதிலும் தவறில்லை. ஆனால், மற்ற மதத்தவர்களுக்கு எதிராக நாங்கள் நடந்துக் கொள்கிறோம் என்று காட்டிக்கொள்ள இப்படி செய்வது, கேவலமானதாகும். அமைதி மார்க்கம் என்றுச் சொல்லிக்கொள்ளும் இஸ்லாமின் இறைத்தூதர் இப்படி கேவலமான கட்டளைகளை கொடுத்துள்ளார். சமுதாயத்தின் ஒற்றுமையை குலைக்க, சமுதாய மக்களிடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை உருவாக்க, மற்ற மதத்தவரிடம் வெறுப்புணர்வை வெளிப்படையாக காட்டிக் கொள்ள வித்திட்டவர் இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது ஆவார். இவைகளை இஸ்லாமின் புனித நூல்கள் புகாரி, முஸ்லிம் மற்றும் அஹ்மத் போன்றவைகளில் காணலாம், இதோ அந்த ஆதாரங்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  (ஸஹீஹ் புகாரி எண்: 5892)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.-இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 434)

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே, வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள்; மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி),

நூல்: அஹ்மது (21252)

இதர மார்க்க மக்களின் ”தீய பழக்கவழக்கங்களை செய்யாமல் இருங்கள்” என்று முஹம்மது கட்டளையிட்டிருக்கவேண்டும். மீசையை வளரவிடுவதில் என்ன தவறு இருக்கிறது? தாடியை ஒட்ட கத்தரிப்பதில் (ட்ரிம் செய்வதில்) என்ன தவறு இருக்கிறது? இதில் அல்லாஹ்விற்கு எதிரான பாவம் என்ன இருக்கிறது?  முஹம்மதுவின் ஒரே நோக்கம், முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக செயல்படவேண்டும் அவ்வளவு தான். இதைத் தான் முஸ்லிம்கள் இன்றும் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். என்னே அறியாமை! முஸ்லிம்களின் மனதில் மாற்று மதத்தவரைப் பற்றிய விஷ வெறுப்புணர்வை இப்படிப்பட்ட கட்டளைகள் விதைத்துவிடுமல்லவா?

இப்படிப்பட்ட தீய செயல்களைச் செய்யும்படி முஹம்மது கட்டளையிட்டுள்ளார் என்று பெரும்பான்மையான முஸ்லிம்களுக்குத் தெரியாது.  தங்கள் மசூதிகளில் இமாம்கள், பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று நம்பி இவர்கள் மீசையை எடுத்து தாடி வைக்கிறார்கள். ஆனால், உண்மையான நோக்கத்தை இஸ்லாமிய நூல்களில் காணலாம்.

கேள்வி 230: சில இஸ்லாமிய அறிஞர்கள் ஏன் ப‌ல ஹதீஸ்களை புறக்கணிக்கிறார்கள்?

பதில் 230: இஸ்லாமிய  அடிப்படை நூல்கள் இரண்டு: குர்‍ஆன் மற்றும் ஹதீஸ் தொகுப்புக்கள்.

ஹதீஸ்களில் இலட்சக்கணக்கான பொய்கள் கலந்துள்ளன. இதனால் தான் முஸ்லிம் அறிஞர்கள் ஹதிஸ்கள் புறக்கணிக்கிறார்கள்.

சன்னி பிரிவு முஸ்லிம்களின் 6 ஹதீஸ் தொகுப்புக்களும் அவைகளில் உள்ள பொய்களும்:

இஸ்லாமிய சமுதாயம் பெரிய அளவில் இரண்டாக பிரிந்துள்ளது, ஒன்று சன்னி (சுன்னி) முஸ்லிம்கள், அடுத்தது ஷியா முஸ்லிம்கள்.

சன்னி முஸ்லிம்கள் தான் பெரும்பான்மை என்பதால், அவர்கள் நம்பும் புத்தகங்களை மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றது. ஷியா முஸ்லிம்களின் புத்தகங்களை நாம் அதிகமாக ஆய்வு செய்வதில்லை.

சன்னி முஸ்லிம் சமுதாயம் 6 வகையான ஹதீஸ்கள் அதிகார பூர்வமான ஹதீஸ்கள் என்று நம்புகிறார்கள். இவைகளில், முதலாவது புகாரி என்பவரால் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள், இரண்டாவதாக, முஸ்லிம் என்பவரால் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள். இப்படி, குர்-ஆனுக்கு அடுத்தபடியாக இவ்வதீஸ்கள் முஸ்லிம்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளன.

கீழ்கண்ட அட்டவணையில் இவ்வதீஸ்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன (புகாரி, முஸ்லிம், நஸயி, அபூதாவுத், திர்மிதி, இப்னு மாஜா).

படம் 3: சன்னி பிரிவினரின் அதிகாரபூர்வமான 6 ஹதீஸ் தொகுப்புக்கள்

முஹம்மதுவிற்கு பிறகு, 200 – 250 ஆண்டுகள்வரை, வாய் வழியாக முஹம்மது பற்றிய கதைகள் உலாவந்தபடியினால், அல்லாஹ்வின் வஹியில் பல புதிய பொய்யான விவரங்கள் மக்களின் வாய்வழியாக பரப்பப்பட்டது. 

உதாரணம்:

புகாரி:

புகாரி (கி.பி. 810 - 870) என்ற இஸ்லாமியர் ஹிஜ்ரி 194ல் பிறக்கிறார். பல ஆண்டுகள் பாடுபட்டு, பல இடங்களுக்குச் சென்று ஹதீஸ்களை சேகரித்தார். 

 • அவர் சேகரித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை: 6,00,000 (ஆறு லட்சம்).
 • இவைகளில் ஆதாரபூர்வமான, உண்மையான ஹதீஸ்கள் எவைகள் என்று அவர் ஆய்வு செய்து கண்டுபிடித்த எண்ணிக்கை: 7,397
 • அப்படியானால், மீதமுள்ள‌ 5,92,603 ஹதீஸ்கள் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை, கறைப்படுத்தப்பட்டவை என்று அவர் ஒதுக்கிவிட்டார்.
 • இதனை சதவிகிதத்தின் படி பார்த்தால், அவர் சேகரித்தவைகளில் 1.23% தான் உண்மையானவை, 98.77% பொய்யானவையாகும்.

இதே போல, சன்னி முஸ்லிம்கள் நம்பும் ஆறு ஹதீஸ் தொகுப்புக்கள் பற்றி மேற்கண்ட அட்டவணையில் நான் பதித்துள்ளேன். 

(குறிப்பு: திர்மிதி மற்றும் இப்னு மாஜா என்பவர்கள், எத்தனை ஹதீஸ்களை தொகுத்தார்கள் என்ற எண்ணிக்கை எனக்கு கிடைக்கவில்லை என்பதால், மேற்கண்ட அட்டவணையில் நான் 4,00,000 (நான்கு லட்சம்) என்று ஒரு சராசரி எண்ணிக்கை கொடுத்துள்ளேன். எனக்கு சரியான எண்ணிக்கை கிடைத்தால், அதனை இந்த அட்டவணையில்/இக்கட்டுரையில் மாற்றுவேன். வாசகர்களுக்கு இவ்விவரம் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும்).

இப்படி ஃபில்டர் செய்த பிறகும் கூட தற்கால அறிஞர்கள் இன்னும் சில ஹதீஸ்கள் பொய்கள் என்று ஒதுக்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான இன்னொரு குறிப்பு.

கேள்வி 231ஹதீஸ்கள் இல்லாமல் போனால், இஸ்லாமின் நிலை என்ன? இதனால் அதிக பாதிப்பு உண்டா?

பதில் 231: ஹதீஸ்கள் இல்லையென்றால், இஸ்லாம் ஒரு லைட் வெயிட்(Light Weight) மதமாக மாறிவிடும். அதாவது இன்று முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற பல சட்டங்கள், தொழுகை முறைகள்(Heavy Weight) போன்றவைகள் இல்லாமலேயே போய்விடும்.

உதாரணத்திற்கு சிலவற்றை இங்கு தருகிறேன்:

 1. முஸ்லிம்களின் ஷஹதா என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய விசுவாச அறிக்கையை செய்யமுடியாது. "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்" என்ற இந்த வாக்கியம் குர்‍ஆனில் இல்லை.
 2. முஸ்லிம்கள் ஐந்துவேளை தொழமுடியாது, மூன்று வேளை மட்டுமே தொழமுடியும்
 3.  மக்காவிற்கு ஹஜ் பயணம் செய்யும் போது, அங்கு என்னன்ன செய்யவேண்டும் என்று முஸ்லிம்களுக்கு தெரியாமல் போய்விடும்.
 4. இஸ்லாமுடைய தூண் என்றுச் சொல்லக்கூடிய ஜகாத் என்ற தர்மம் எவ்வளவு (சதவிகிதம்%) செய்யவேண்டும், எவைகளைச் செய்யவேண்டும் போன்ற விவரங்கள் குர்‍ஆனில் இல்லை.

இப்படி சொல்லிக்கொண்டே போனால், காற்றைவிட லேசானதாக இஸ்லாம் மாறிவிடும். ஆகையால், ஹதீஸ்கள் இல்லையென்றால், உடல் இல்லாத எலும்புக்கூடு தான் இஸ்லாம்.

கேள்வி 232: ஏன் எல்லா ஹதீஸ்களையும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது?

பதில் 232: அது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இன்று நாம் ஹாலிவுட் படங்களில் காண்கின்ற ஸ்பைடர் மேன், பேட்மேன், சூப்பர் மேன் போன்று முஸ்லிம்கள் முஹம்மது மீது இட்டுக்கட்டிய அனைத்துவிட ஸ்டண்ட் விவரங்கள் அனைத்தையும் ஹதீஸ்களில் படிக்கும் சாதாரண முஸ்லிமல்லாத மக்கள், இஸ்லாமை காறிதுப்புவார்களே என்பதற்காக அவைகளை நீக்கினார்கள்.

இதுமட்டுமல்ல, அலிபாபா நாற்பது திருடர்கள் படத்தில் வருவது  போன்றும், இன்னும் பல விஞ்ஞானத்திற்கு முரணான விவரங்கள் ஹதீஸ்களில் உள்ளது. அவைகளை ஏற்க இங்கு யாரும் காதில் காலிஃபளவர் வைத்துக்கொண்டு இல்லையே! எனவே முஸ்லிம்கள் அவைகளை நீக்கினார்கள்.

கடைசியாக, ஆபாசம் என்று எடுத்துக்கொண்டால் 'என்னத்தைச் சொல்ல' அவைகளை என் வாயால் சொல்லமாட்டேனுங்கோ, அப்படிப்பட்ட விவரங்கள் ஹதீஸ்களில் உள்ளது. எனவே எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஹதிஸ்கள அனைத்தையும் முஸ்லிம்கள் ஏற்பார்கள் சொல்லுங்கள்?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றுச் சொல்வார்கள், ஹதீஸ்கள் எப்படி முஸ்லிம்களை பிரிக்கிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம். 

நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், கீழ்கண்ட வீடியோக்களில் முஸ்லிம் அறிஞர்கள் 'ஒரு பெண் ஒரு வாலிபனுக்கு தன் மார்ப்பகத்திலிருந்து குழந்தைக்கு பால் ஊட்டுவது போன்று பாலை குடிக்க கொடுத்து, அவனை தன் மகனைப்போல ஆக்கிக்கொள்வது எப்படி என்று முஹம்மது சொன்னதாக வரும் ஹதீஸ் பற்றிய விவாதம் புரிவதைப் பாருங்கள்”. ஒரு பிரிவினர் ஆதரிப்பதையும், இன்னொரு பிரிவினர் எதிர்ப்பதையும் பாருங்கள்.

இத்தனைக்கும் இந்த ஹதீஸ் உண்மையானதென்று இன்றுவரை இஸ்லாமிய உலகம் ஏற்றுக்கொண்ட ஒன்று தான்.

கேள்வி 233: ஷரியா என்றால் என்ன?

பதில் 233: ஷரியா என்றால் 'சட்டம்' என்று பொருள். இது இஸ்லாமிய சட்டத்தைக் குறிக்கிறது. இஸ்லாம் ஆட்சி செய்யும் நாடுகளில் ஷரியா சட்டம் அமுலில் இருக்கும்.

இஸ்லாமிய ஷரியாவை, குர்‍ஆன் மற்றும் ஹதிஸ்களின் அடிப்படையில் முஸ்லிம் அறிஞர்கள் உருவாக்குகிறார்கள்.

இந்திய பீனல் கோட் என்றுச் சொல்கிறோமில்லையா! அது போன்று இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய அரசு பின்பற்றக்கூடிய சட்டம் தான் ஷரியா. மனிதன் செய்கின்ற குற்றங்களுக்கு தண்டனைகள் குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில், அதாவது முஹம்மதுவின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது  தான் ஷரியா.

குறிப்பு: இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கையை சார்ந்து இன்று சட்டம் இயற்றி அதனை நாம் பின்பற்றினால், இது சாத்தியப்படுமா? என்ற கேள்வி தோன்றலாம். அதனால் தான் இன்றைய படித்த உலகம் இஸ்லாமை மிகவும் கடுமையாக விமர்சிக்கிறது.

ஒரு உதாரணத்தைப் பாருங்கள்: ஒருவன் திருடினால் அவன் கை வெட்டப்படும். இன்னொருவன் ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டால், அவனுக்கு சிறை தண்டனை கொடுத்து, அபராதமாக பணத்தை வசூலிப்பார்கள்.

பணத்தை திருடியவன் வாழ்நாள் முழுவதும் முடவனாக தன் குடும்பத்தை காப்பாற்ற முடியாதவனாகவும், தனக்கும் தன் சமுதாயத்திற்கும் ஒரு பாரமாகவும் மாறிவிடுகின்றான். ஆனால், ஒரு பெண்ணை கற்பழித்து அவள் வாழ்வை கெடுத்தவன், அபராதத்தை கட்டிவிட்டு, சில நேரங்களில் தண்டனையை அனுபவித்துவிட்டு, இரண்டு கைகளை ஆட்டிகொண்டு ஹாயாக வாழுகின்றான். இதனை பார்க்கும் அறிவுள்ள மனிதன் என்ன செய்வான்? இஸ்லாமை விமர்சிப்பானா இல்லையா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கேள்வி 234: "வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, இமாம் செய்யும் பிரசங்கத்திற்கு என்ன பெயர்? 

பதில் 234: பெரும்பான்மையாக வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, மக்கள் மசூதிகளில் கூடி இருக்கும் போது, மசூதியின் இமாம் செய்யும் பிரசங்கத்தை குத்பா என்பார்கள்.  இதே போன்று, ரமலான் மற்றும் பக்ரீத் பண்டிகையின் போதும், இமாம்கள் செய்யும் பிரசங்கத்தையும் குத்பா என்பார்கள்.

கேள்வி 235: ஜம் ஜம் கிணறு (தண்ணீர்) எங்கு இருக்கிறது

பதில் 235: மக்காவில் உள்ள இந்த கிணற்றிலிருந்து தான் ஆகார் தண்ணீர் குடித்து தன்னுடைய மற்றும் தன் மகன் இஸ்மாயிலுடைய தாகத்தை தணித்துக்கொண்டார் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். அதாவது ஆபிரகாம் ஆகாரையும் இஸ்மவேலையும் வீட்டை விட்டு அனுப்பிவிட்ட போது இந்த நிகழ்ச்சி நடந்ததாக இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் "மக்காவிற்கு புனிதப்பயணம் (ஹஜ்)" செய்யும் போது இந்த நிகழ்ச்சியை நினைவு கூறுகிறார்கள்.

மேலும் ஹஜ் செய்து திரும்பும் முஸ்லிம்கள், இந்த ஜம் ஜம் தண்ணீரை தங்கள் நாட்டிற்கு (வீட்டிற்கு) கொண்டு வருகிறார்கள். அதனை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுக்கிறார்கள். இந்த தண்ணிரை குடித்தால் நோய்கள் தீரும் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

கேள்வி 236: ஆரம்பத்தில் முஸ்லிம்கள் 50 முறை தொழுதுக்கொண்டு இருந்தார்களா?

பதில் 236: ஒரு முறை முஹம்மதுவை ஜிப்ரீல் தூதன் ஏழாம் வானம் வரைக்கும் அழைத்துச் சென்றாராம். அங்கு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு 50 முறை தொழவேண்டும் என்று கட்டளையிட்டானாம், ஆனால், மோசே முஹம்மதுவை சந்தித்து, 50 முறை ஒரு நாளுக்கு தொழுவது முடியாத காரியம் எனவே குறைத்துத் தரும்படி அல்லாஹ்விடம் கேள் என்றுச் சொல்ல, முஹம்மதுவும் கேட்டாராம், உடனே அல்லாஹ் அதனை 40 முறையாக குறைத்தாராம். மறுபடியும் மோசே இதுவும் அதிகம் தான் மேலும் குறைக்கச்சொல் என்று சொல்ல, முஹம்மது மறுபடியும் அல்லாஹ்விடம் சென்று கேட்டு, 30 முறையாக குறைத்துக்கொண்டாராம். மறுபடியும் மோசே முஹம்மதுவிற்கு அறிவுரை கூற தொழுகைகள், 20, 10, மற்றும் 5 என்று கடைசியாக குறைக்கப்பட்டதாம். இப்போது கேள்வி என்னவென்றால், ஆதியாகமத்தில் ஆபிரகாம் தேவனிடம் வேண்டிக்கொண்ட நிகழ்ச்சியை அப்படியே காபி அடித்து மாற்றி முஹம்மது கூறியுள்ளார். இதுமாத்திரமல்ல, மோசேக்கு இருக்கின்ற அறிவு கூட அல்லாஹ்விற்கும், முஹம்மதுவிற்கும் இல்லாமல் போனதுதான் ஆச்சரியம். மக்களின் நிலையை மோசே புரிந்துக்கொண்டது போல அல்லாஹ் புரிந்துக்கொள்ளவில்லை.  முஹம்மது கேள்விப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகளை தனக்கு தோன்றியபடி மாற்றி கூறியுள்ளார். 

பார்க்க:  ஆதியாகமம் 18:16-33, ஸஹீஹ் புகாரி  3207 & 349

3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். . . .

பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்" என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது. 

கேள்வி 237: முஸ்லிம்களின் அன்னைகள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?

பதில் 237: முஹம்மதுவின் மனைவிகள் அனைவரும் முஸ்லிம்களுக்கு அன்னைகளாவார்கள் என்று இஸ்லாம் சொல்கிறது?

குர்‍ஆன் 33:6. இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.

அப்படியானால், முஸ்லிம்களின் தந்தை முஹம்மது தானே! என்று நீங்கள் எண்ணிக்கொள்ளாதீர்கள், இங்கு தான் இஸ்லாம் சிக்ஸர் அடிக்கிறது, நாம் பொதுவாக நினைப்பது போன்று இஸ்லாம் செயல்படாது.  முஹம்மது யாருக்கும் தந்தை ஆகமாட்டார்,  ஏன் இப்படி என்று உங்கள் முஸ்லிம் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

குர்‍ஆன்  33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  

கேள்வி  238: இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆளும் என்று அடிக்கடி முஸ்லிம்கள் சொல்வதை கேட்கமுடிகின்றது இது உண்மையா?

பதில் 238: இன்று பல கோடி முஸ்லிம்களை ’இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆளும்’ என்ற நம்பிக்கை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. இந்த நம்பிக்கையினால், சில முஸ்லிம்கள்  ஒரு கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டும், இன்னொரு கையில் குர்-ஆனை பிடித்துக்கொண்டும், உலகை ஒருநாள் இஸ்லாம் ஆளும் என்று கோஷமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு ”அந்த நாளுக்கான ஆயத்தங்களை இன்று நாங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டோம்” என்று சொல்லிக்கொண்டு, பட்டனை சட்டென்று அழுத்தி, குண்டுகளை வெடிக்கச்செய்து தாங்களும் அழிந்து மற்றவர்களையும் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமிய ஆட்சியின் கீழ் உலகை கொண்டுவரவேண்டும் என்ற தீராத ஆசையால் தான் அன்று அல்கெய்தா, இன்று ஐஎஸ்ஐஎஸ்  ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறது. தீவிரவாதி முஸ்லிம்களாகிய பக்தாதி முதற்கொண்டு, அமைதியை விரும்பும்  ரஹீம் பாய் வரை ‘இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆளும்’ என்ற நம்பிக்கையை அடிமனதில் வைத்துக்கொண்டு தான் வாழ்கிறார்கள்.  ஆனால், முஹம்மதுவின் ஒரு குறிப்பிட்ட முன்னறிவிப்பு, உலகை இஸ்லாம் ஆளாது, அதற்கு பதிலாக, ஒரு பாம்பு தனக்கு ஆபத்து வரும் போது எப்படி தன் புற்றுக்குச் சென்று அபயம் பெறுமோ (தப்பித்துக்கொள்ளுமோ), அது போல இஸ்லாமும் ”தான் உருவான இடத்திற்கே சென்று அபயம் பெரும்” என்று சொல்கிறது.

இது உண்மையா?

இந்த விவரம் இஸ்லாமிய ஆதாரநூல்களான ஹதீஸ்களில் காணப்படுகின்றது.

1) குறைந்த எண்ணிக்கையில் தொடங்கி, அதே எண்ணிக்கையில் முடிவடையும் இஸ்லாம்:

இஸ்லாம் ஒரு மனிதரோடு தொடங்கியது, அந்த மனிதர் முஹம்மது ஆவார். அவருக்கு அடுத்து, அவரது மனைவி கதிஜா அவர்கள், அதன் பிறகு இதர நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் ஏற்றனர். மதினாவிற்கு முஹம்மது ஹிஜ்ரி செய்யும் போது கூட சில நூறு பேரை மட்டுமே இஸ்லாம் சம்பாதித்து இருந்தது. 

கீழ்கண்ட ஹதீஸ்களில் இஸ்லாமின் எதிர்காலம் பற்றி முஹம்மது என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள்:

முஸ்லிம் ஹதீஸ் எண்: 232, 233, 234 மற்றும் புகாரி ஹதீஸ் எண்: 1876

232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுபம் உண்டாகட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இதைப் பற்றிய  ஆய்வு கட்டுரையை இங்கு படிக்கவும்:  இஸ்லாம் உலகை ஆளுமா? (அ) உலகிலிருந்து அழிந்தே போகுமா? முஹம்மதுவின் முன்னறிவிப்பு என்ன?

கேள்வி 239: முஸ்லிம்களும் இயேசுவை நம்புவதினால், அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கவேண்டியதில்லை அல்லவா?

பதில் 239: இல்லை, முஸ்லிம்களுக்கு உண்மையான இயேசுவைத் தெரியாது, அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், இயேசுவைப் பற்றிய ஒரு பொய்யான பிம்பம் தான். குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் சொல்லப்பட்ட இயேசு ஒரு பொய்யான இயேசு ஆவார். அப்படிப்பட்டவர் உலகில் பிறக்கவே இல்லை.

இயேசுவிடம் வந்து அவரைப் பார்த்து நீர் ஒரு நபி என்று சொல்பவர்களுக்கு இரட்சிப்பு இல்லை. யார் இயேசுவை 'தேவனுடைய வார்த்தையாகவும், தங்களுக்காக சிலுவையில் மரித்து மறுபடியும் உயிரோடு எழுந்தார் என்றும், மறுபடியும் அவர் வருவார் என்றும் நம்புகிறார்களோ' அவர்கள் தான் உண்மையான இயேசுவை விசுவாசித்தவர்கள் ஆவார்கள்.

இயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் இப்படி நம்புவதில்லை, எனவே அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவேண்டும், அவர்களையும் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு பங்காளிகளாக மாற்ற முயற்சிக்கவேண்டும். இதற்காகத் தான் இந்த கேள்வி பதில் தொடர்களும், இதர கட்டுரைகளும் எழுதப்படுகின்றன.

யோவான் 3:15-18

15. தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

கேள்வி 240: உலகிலேயே முஹம்மது தான் மிகவும் நல்லவர் என்று என் முஸ்லிம் நண்பர் சொல்கிறார், இது உண்மையா?

பதில் 240: ஒருவரை(முஹம்மதுவை அல்லது வேறு யாராக இருந்தாலும்) நல்லவர் என்று நாம் சொல்லவேண்டுமென்றால் குறைந்தபட்சம் நாம் கீழ்கண்டவைகளை செய்திருக்கவேண்டும்: 

a) அந்த நபரைப் பற்றிய‌ புத்தகங்களை படிப்பது:

அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து இருக்கவேண்டும். முஹம்மதுவைப் பற்றி குர்‍ஆனில், ஹதீஸ்களில், சரித்திர நூல்களில் சொல்லப்ப‌ட்டவைகள் அனைத்தையும் படித்து இருக்கவேண்டும்? உங்கள் முஸ்லிம் நண்பரிடம் இந்த விவரங்களைக் கேட்டுப்பாருங்கள், நிச்சயம் இல்லை என்று  பதில் வரும்.

b) அவரோடு கூட‌ இருந்து கவனிப்பது: 

பொதுவாக ஒருவரைப் பற்றி எழுதப்படும் சரித்திரங்கள், புத்தகங்களில் 100% உண்மை இருக்கும் என்றும் சொல்லமுடியாது. சரித்திர ஆசிரியர்கள், அந்த ஒருவரை ஆதரிப்பவர்கள் சிறிது இங்கும் அங்குமாக சில  பொய்யான அல்லது அதிகபடியான விவரங்களை சொந்தமாக சேர்த்தும் எழுதுவார்கள். எனவே, ஒருவரோடு கூட இருந்து பார்த்தால் தான் அவர் உண்மையாகவே நல்லவரா இல்லையா என்பது புரியும்.

c) உள்ளத்தில் இருப்பதை யார் காண்பார்கள்?

ஒருவேளை நாம் ஒருவரோடு கூட இருந்து பக்கத்திலிருந்து கவனித்தாலும், அவரது தீய காரியங்கள் வெளிப்படாமல் அவர் பார்த்துக்கொண்டால், அது எப்படி நமக்குத் தெரியும்? மனதில் இருப்பதை யார் பார்க்கமுடியும்?

மேலும், "நல்லவர்", "கெட்டவர்" என்ற வார்த்தைகளின் வரையறையை யார் நிர்ணயிப்பது? ஒரு திருடன் கூட தன் குடும்பத்திற்கு நல்லவனே? மற்றவர்களுக்குத் தான் அவன் தீயவன். ஒருவன் எல்லோரிடமும், ஒரு காலத்தில், நல்லவனாக வாழலாம். ஆனால், எல்லோரிடமும் எல்லா காலத்திற்கும் நல்லவனாக வாழமுடியாது. எனவே பொத்தம் பொதுவாக 'நல்லவன்', 'கெட்டவன்' என்றுச் சொல்வது, பயனில்லாத வார்த்தைகள்.

d) உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களைப் பற்றி அறிந்துக்கொள்ளவேண்டும்

உலகத்திலேயே 'என் அப்பா தான் நல்லவர்' என்று நான் சொன்னால், இது ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொள்ளவேண்டிய விஷயம், இதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால், "உன் அப்பா பற்றி உனக்குத் தெரியும், உலகில் உள்ள இதர அப்பாக்கள் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?" என்ற கேள்வி எழும்.  உலகில் உள்ள மற்றவர்கள் பற்றி ஒன்றுமே தெரியாத நீ எப்படி, உன் அப்பாவை அவர்களோடு ஒப்பிட்டுச் சொல்கிறாய்? இது அறிவுள்ளவர்கள் சொல்லும் கூற்று அல்ல.  "என் அப்பா எனக்கு நல்லவராக இருக்கிறார்" என்றுச் சொல்லிக்கொள்ளலாமே தவிர, அவரை உலக மக்களோடு ஒப்பிடக்கூடாது.

இதே போலத்தான், முஸ்லிம்களும் "முஹம்மது எங்கள் பார்வையில் நல்லவர் என்றுச் சொல்லவேண்டுமே ஒழிய, உலகத்திலுள்ள அனைத்து மக்களைக் காட்டிலும், என் நபி தான் ரொம்ப நல்லவர்" என்று சொல்லும்போது மற்றவர்களுக்கு எறிகிறது.

முஹம்மது நல்லவரா கெட்டவரா?

ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்ற கேள்வி தேவையற்றது மற்றும் குழப்பம் தரக்கூடியது என்பதை மேலே கண்டோம்.

ஆனால், ஒருவரைப் பற்றி அவரை சார்ந்துள்ள மக்கள் எழுதும் புத்தகங்களை படித்தால், குறைந்தபட்சம் அவர் நல்லவர் என்ற ஒரு பிம்பம் வருகிறதா? என்று பார்க்கவேண்டும். அதன் பிறகு "ஆமாம், இன்னின்ன புத்தகங்களில் சொல்லப்பட்டதின்படி அவர் நல்லவர்/கெட்டவர்" என்று சொல்லமுடியுமல்லவா?

இதன் அடிப்படையில், முஹம்மது பற்றிய புத்தகங்கள் மூன்று பிரிவுகளாக நம்மிடம் உள்ளது: குர்‍ஆன், ஹதீஸ்கள், அவரது வாழ்க்கை சரித்திர புத்தகங்கள்.

இந்த மூன்று புத்தகங்களையும் ஒரு நபரிடம் கொடுத்து, விருப்பு வெறுப்பு இன்றி  நேர்மையாக அவைகளை படித்து, முஹம்மது எப்படிப்பட்டவர் என்று சொல்லமுடியுமா? என்று கேட்டால் என்ன பதில் அவர் சொல்லுவார்? இந்த சவாலை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரா?

 1. குர்‍ஆனின் படி தன் வளர்ப்பு மகனின் மனைவியை முஹம்மது திருமணம் செய்தார்.
 2. 10க்கும் அதிகமான திருமணங்களை முஹம்மது செய்துள்ளார்.
 3. தனக்கு 53 வயது ஆகும் போது, 9 வயது சிறுமியை திருமணம் செய்தார்.
 4. தன்னை எதிர்த்தவர்களை கொன்றார்.
 5. வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார், இது பழிக்கு பழி வாங்கின நிகழ்வுகள் என்பார்கள் முஸ்லிம்கள்.
 6. அரேபியாவை சுற்றியுள்ள நாடுகள் மீது வலியச் சென்று போர் செய்து, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
 7. திருமண பந்தத்திற்கு வெளியே பெண்களை கற்பழிக்க முஹம்மது அனுமதி அளித்தார்.
 8. மக்களை மூட பழக்கவழக்கங்களைச் செய்யும் படி, விஞ்ஞானத்திற்கு எதிரான காரியங்களை நம்பும்படி செய்தார்.
 9. போரில் பிடிபட்ட பெண்களை கற்பழித்தார், முஸ்லிம்கள் கற்பழிக்க அனுமதி அளித்தார்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவைகளையெல்லாம் முஸ்லிம்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து வெளிப்படும் அவருடைய செயல்கள் ஆகும்.

இவைகளை அறியும் ஒருவர் முஹம்மதுவைப் பற்றி என்ன கூறுவார்? அவர் நல்லவர் என்று கூறுவாரா?

இவ்விவரங்கள் ஒவ்வொன்றிற்கும் முஸ்லிம்கள் ஒரு காரணத்தைச் சொல்வார்கள், ஆனால் முஸ்லிமல்லாதவருக்கு அக்காரணங்கள் முட்டாள்தனமான வாதங்களாக தோன்றும்.

எனவே, ஒரு நபரைப் பார்த்து 'இவர் நல்லவர்/கெட்டவர்' என்றுச் சொல்லும்போது, அதன் பொருள் என்னவென்றால், 'அந்த நபருக்கு இவர் நல்லவர் போல அல்லது கெட்டவர் போல தெரிகின்றார்' என்பதாகும். ஆனால், அது உண்மையாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.

முஸ்லிமல்லாதவர்கள் "முஹம்மது ஒரு கெட்டவர்" என்றுச் சொன்னால், "அவர்கள் பார்வையில், அவர்களுக்கு கிடைத்துள்ள விவரங்களின்படி முஹம்மது கெட்டவர் ஆவார்". ஆனால், அதுவும் அவர்களுக்கு கிடைத்த விவரங்களின் படி தான் அவர்கள் சொல்கிறார்கள் என்று பொருள். அது உண்மையாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.  அவர்களுக்கு கிடைத்த விவரங்கள் என்னவென்று நாம் கவனித்து தான் முடிவு எடுக்கமுடியும்?

சரி, கடைசியாக ஒரு கேள்வி, குர்‍ஆன் ஹதீஸ்களின் மூலமாக மேற்கண்ட விவரங்கள் முஹம்மதுவைப் பற்றி நமக்கு கிடைத்துள்ளன. இவைகளின் படி முஹம்மது எப்படிப்பட்டவர் என்று முஸ்லிம்களால் சொல்லமுடியுமா?

தேதி: 9th May 2020


2020 ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்