இஸ்லாமிய அகராதி > இ வார்த்தைகள்

இப்லிஷ் (சாத்தான், சைத்தான், ஷைத்தான்)

முஹம்மதுவின் வாழ்வில் சாத்தானின் தாக்கம் இருந்திருக்கின்றது என்பதை விளக்கும் கட்டுரைகளை இங்கு படிக்கவும்: முஹம்மதுவும் சாத்தானும்

சாத்தானின் இஸ்லாமிய பெயர் "இப்லிஷ்" என்பதாகும். குர்ஆனும் இதர ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் சாத்தான் பற்றிய சுவாரசியமான விவரங்களைத் தருகின்றது, அவையாவன: சாத்தான் முடிச்சு போடுகிறான், இரவு நேரங்களில் மூக்கில் தங்கியிருக்கிறான், பிறக்கும் குழந்தைகளை தொடுகிறான், குழந்தைகளை அழ வைக்கிறான், தீர்க்கதரிசங்களில் தில்லுமுல்லு செய்துவிடுகிறான், மற்றவர்கள் பேசுவதை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கிறான், மனிதர்களின் காதுகளில் சிறுநீர் கழிக்கிறான், கொட்டாவி விடுபவரைப் பார்த்து சிரிக்கிறான் அதே போல கொட்டாவி விடுபவர்களின் வாயில் புகுந்துவிடுகிறான்.

சாத்தான் யார் என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது; சாத்தான் என்பவன் தேவதூதனா? அல்லது தேவ தூதனாக இருந்தவன் பாவம் செய்து தள்ளிவிடப்பட்ட பிறகு ஜின்னாக மாறிவிட்டானா? மனிதன் உண்டாக்கப்பட்ட நிகழ்ச்சியிலும், அதன் பிறகு அவன் பாவம் செய்த நிகழ்ச்சியிலும் சாத்தானின் பங்கு என்ன? இந்நிகழ்ச்சிகளில் அல்லாஹ்வின் முரண்பட்ட விவரங்கள் என்ன? போன்றவைகளை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்: "அல்லாஹ், ஆதாம் மற்றும் தேவதூதர்கள்".

சாத்தான் பற்றிய இதர இஸ்லாமிய விவரங்கள்:

இப்லீஸ் “ஜின்” இனத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான், குர்ஆன் 18:50

அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.(குர்ஆன் 18:50)

• ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான்

1142. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

"உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :19 (சஹி புஹாரி நூல்)

• தூங்கும் போது மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் புகுந்து மேல் பாகத்தில் தங்கியிருக்கிறான்

3295. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :3 Book :59 (சஹி புஹாரி நூல்)

• பிறக்கும் குழந்தைகளை தொடுகிறான், அழவைக்கிறான்

3431. ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) அறிவித்தார் 

" 'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு பிறகு, 'நான் இக் குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் - என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள். Volume :4 Book :60 (சஹி புஹாரி நூல்)

மேற்கண்ட ஹதீஸில் காணப்படும் ஒரு சுவாரசியமான விவரம் என்னவென்றால், உலக மக்கள் பிறக்கும் போது அனைவரையும் சாத்தான் தொட்டானாம், ஆனால் இயேசுவின் தாய் மரியாளையும், இயேசுவையும் தொடவில்லையாம். ஒருவரை சாத்தான் தொட்டால் என்னவாகும்?

• சாத்தான் வெளிப்பாடுகளில் குழப்பத்தை உருவாக்கி, தன் சொந்த வார்த்தைகளை நுழைத்துவிடுகின்றான்: குர்ஆன் 22:52

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.(குர்ஆன் 22:52)

சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களை படிக்க இந்த கட்டுரையை சொடுக்கவும்: Satanic Verses? 

• திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தான், குர்ஆன் 15:17-18, 37:8

விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம். திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர; (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.(குர்ஆன் 15:17-18)

(அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்). (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது; இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள். (அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு. (குர்ஆன் 37:7-9)

சாத்தான் பற்றிய இப்படிப்பட்ட நம்பிக்கையை, யூத பாரம்பரிய நூல்களிலும் காணலாம், அத்தியாயம் 6:1 ல், "எதிர்கால நிகழ்ச்சிகளை அறிந்திட திறைக்கு பின்னாக இருந்து சாத்தான்கள் ஒட்டுக்கேட்கின்றன" என்று எழுதப்பட்டுள்ளது. (Tisdall, The Sources of the Quran, p. 124, quoted by Abdul-Haqq)

• தொழாமல் தூங்கிக்கொண்டு இருப்பவர்களின் காதில் சாத்தான் சிறுநீர் கழிக்கிறான்:

1144. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். 

ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்' என்று விடையளித்தார்கள். Volume :1 Book :19 (சஹி புஹாரி நூல்)

கொட்டாவி விடுதல்:

o அல்லாஹ் கொட்டாவியை வெறுக்கிறார்: 

6223. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு ('யர்ஹமுக்கல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்' என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) 'ஹா' என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :78 (சஹி புஹாரி நூல்)

o மனிதர்கள் கொட்டாவி விடும் போது சாத்தான் அவர்களுக்குள் செல்கிறான்

5719. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book :53 (சஹி முஸ்லிம்)

ஒருவர் (கட்டுப்படுத்தாமல் 'ஹா' என்று சப்தமிட்டுக்) கொட்டாவிவிட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான் 

6226. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு ('அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக' என) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டப்படுத்தட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் (கட்டுப்படுத்தாமல் 'ஹா' என்று சப்தமிட்டுக்) கொட்டாவிவிட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :78 (மேலும் பார்க்க சஹி புஹாரி எண் : 6223)

சாத்தான் பற்றிய இதர குர்ஆன் வசனங்கள்:

குர்ஆன் 2:34,36,168; 3:36,155,175; 4:38,60,76,116-117,119-120,140,145; 5:90-91; 6:38,43,68; 7:11-12,20-21,27,175,200-201; 8:11,48; 12:5,42,100; 14:22; 15:30-40; 16:63,98; 17:27,53,61,64; 18:50-51; 18:63; 19:44-45; 20:53,116,120; 22:52; 24:21; 25:29; 26:95; 27:24; 28:15; 29:38; 31:21; 34:20-21; 35:6; 36:60; 37:65; 38:41,74-85; 41:36; 43:62; 47:25; 58:10,19; 59:16