2018 ரமளான் - 4:பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர், இயேசுவின் உள்வட்ட சீடராக இருந்தாரா?

முந்தைய கட்டுரையில் பர்னபா சுவிசேஷம் யாரால், எப்போது எழுதப்பட்டது என்பதை பார்த்தோம். 

இக்கட்டுரையில், “பர்னபா” இயேசுவின் சீடர்களில் ஒருவராக இருந்தாரா? என்பதை ஆதாரங்களுடன் காண்போம். அதாவது, பர்னபா சுவிசேஷத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களின் அடிப்படையிலும், சரித்திர விவரங்களின் அடிப்படையிலும்  இதனை காண்போம்.

1) இவர் இயேசுவின் சீடராக இருந்தாரா?

பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் தன்னை இயேசுவின் உள்வட்ட சீடர்களில் ஒருவராக காண்பிக்கிறார். இயேசுவிற்கு உள்வட்ட சீடர்களாக 12 பேர் இருந்தனர்.

பர்னபா சுவிசேஷம் கீழ்கண்ட விதமாக தொடங்குகிறது:

உலகிற்கு இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு புதிய தீர்க்கதரிசியும், கிறிஸ்து என்று அழைக்கப்பட்டவருமாகிய இயேசுவின் உண்மையான நற்செய்தி. இவருடைய அப்போஸ்தலனாகிய பர்னபா என்பவர் எழுதிய நற்செய்தி.

கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட நசரேயனாகிய இயேசுவின் அப்போஸ்தலர் பர்னபா எழுதிக்கொள்வது.  அமைதியையும், ஆறுதலையும் விரும்பும் உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் எழுதிக்கொள்வது. 

True Gospel of Jesus, called Christ, a new Prophet sent by God to the world: according to the description of Barnabas his apostle.

Barnabas, apostle of Jesus the Nazarene, called Christ, to all them that dwell upon the earth desireth peace and consolation.

மேற்கண்ட வரிகளிலும், இன்னும் இதர இடங்களிலும் இப்புத்தகத்தை எழுதியவர் இயேசுவின் உள்வட்ட சீடர்கள் பன்னிருவரில் ஒருவராக தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறார். இயேசு அனேக முறை இவரிடம் பேசியதாக இவர் குறிப்பிடுகிறார், அதாவது இயேசுவோடு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இவர் இருந்ததாகவும், அவரது ஊழியத்தில் பங்கு பெற்றவராகவும் குறிப்பிடுகிறார்.

2) போலி 'பர்னபாவும்' இயேசுவின் இதர சீடர்களும்

இயேசுவின் மற்ற 11 சீடர்களோடு இவர் மூன்றறை ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், இவருக்கு நிச்சயம், அச்சீடர்களின் பெயர்கள், புனைப்பெயர்கள் தெரிந்திருக்கும். இது உண்மையா என்பதை இப்போது பார்ப்போம்.

பர்னபா சுவிசேஷம் அத்தியாயம் 14ல் இயேசுவின் சீடர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 

அவர்களின் பெயர்களாவன: அந்திரேயா, இவரின் சகோதரர் மீனவர் பேதுரு; இந்த புத்தகத்தை எழுதிய பர்னபா, வரிகளை வசூல் செய்யும் மத்தேயு; செபெதேயுவின் குமாரர்களாகிய யோவான் மற்றும் யாக்கோபு; ததேயு மற்றும் யூதா; பற்தொலொமேயு மற்றும் பிலிப்பு; யாக்கோபு மற்றும் துரோகியாகிய யூதாஸ்காரியோத்து . . .

. . .  Their names are: Andrew and Peter his brother, fisherman; Barnabas, who wrote this, with Matthew the publican, who sat at the receipt of custom; John and James, sons of Zebedee; Thaddaeus and Judas; Bartholomew and Philip; James, and Judas Iscariot the traitor. . .  . (பர்னபா சுவிசேஷம் அத்தியாயம் 14).

இந்த மோசடி இஸ்லாமியர் பர்னபா கொடுத்த பட்டியலோடு, புதிய ஏற்பாட்டின் உண்மை சுவிசேஷங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியலை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

மேற்கண்ட பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது, பர்னபா மோசடி ஆவணத்தில் மூன்று தவறுகள் இருப்பதை காணமுடியும்.

பர்னபா சுவிசேஷ பட்டியலின் மூன்று தவறுகள்

முதல் தவறு (எண் 3):

பர்னபா தன்னை அப்போஸ்தலர்கள் பட்டியலில் ஒருவராக இணைத்துக்கொண்டார்.

புதிய ஏற்பாட்டின் படி பர்னபா என்பவர், இயேசுவின் உள்வட்ட சீடரல்ல, இதுமட்டுமல்ல, இயேசு உயிர்த்தெழுந்து பரலோகம் சென்றுவிட்டபிறகு தான் பர்னபா என்பவர் கிறிஸ்தவராகிறார்.  இதைப் பற்றி நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் காணலாம். இயேசுவின் உள்வட்ட சீடராகிய மத்தேயு எழுதிய நற்செய்தி நூலில் இவரின் பெயர் சீடர்களின் பட்டியலில் இல்லை. இவர் உண்மையாகவே இயேசுவைக் கண்டு பேசிய உள்வட்ட சீடர்களில் ஒருவராக இருந்திருந்தால், மத்தேயு இவருடைய பெயரை குறிப்பிடாமல் இருந்திருக்கமாட்டார். இதர சுவிசேஷ நூல்களிலும் இவரது பெயர் எங்கும் வருவதில்லை. பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் போலியான நபர் என்பதையும், அவர் எழுதிய புத்தகம் ஒரு மோசடியான புத்தகம் என்பதையும் கண்டறிய நமக்கு இந்த விவரம் உதவி புரிகின்றது.

இரண்டாவது தவறு (எண் 7 & 8):

ததேயு மற்றும் யூதா என்பவர்கள் இருவர் என்று இவர் நினைத்துக் கொண்டது.

பர்னபா சுவிசேஷம் கொடுக்கும் சீடர்களின் பட்டியலை நாம் காணும் போது ஒரு மிகப்பெரிய தவறு பளிச்சென்று தெரிவதைக் காணமுடியும். அதாவது, இயேசுவின் சீடர்களில் ஒருவரின் பெயர் ’ததேயு’ என்பதாகும்.  இவருக்கு இன்னும் இரண்டு பெயர்கள் உண்டு, அவை: ’லபேயு’ மற்றும் ’யூதா’ என்பவைகளாகும். 

  1. மத்தேயு 10:3ல் ’ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு’ என்று பெயர் வருகின்றது.
  2. மாற்கு 3:18ல் ‘ததேயு’ என்று வருகின்றது.
  3. லூக்கா 6:16ல் / அப் 1:13ல் ’யாக்கோபின் சகோதரனாகிய யூதா’ என்று வருகின்றது.
  4. யோவான் 14:22ல் ’ஸ்காரியோத்தல்லாத யூதா’ என்றும் வருகிறது. 

ஆக, ததேயு, யுதா, மற்றும் ‘லபேயு’ என்னும் பெயர்கள் ஒருவரையே குறிக்கும். ஆனால், பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் இப்பெயர்கள் இரண்டு நபர்களைக் குறிக்கும் என்று தவறாக‌ எழுதிவிட்டார். மேலேயுள்ள பட்டியலின் எண்கள் 7 மற்றும் 8ஐ பார்க்கவும்.

இந்த பர்னபா என்பவர் இயேசுவின் சீடர்களில் ஒருவராக இருந்திருந்தால், இந்த தவறை செய்து இருக்கமாட்டார். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஒன்றாக இருந்தவர்கள், ஊழியம் செய்தவர்கள் எப்படி ஒருவரின் பெயரை இன்னொருவர் அறிந்திருக்கமாட்டார்கள்? இந்த மோசடி புத்தகத்தை எழுதியவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்பதையும், இவர் முதல் நூற்றாண்டின் பர்னபா இல்லை என்பதையும் இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். முக்கியமாக இவர் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரல்ல என்பதை இதன் முலம் தெளிவாக புரிந்துக் கொள்ளலாம். 

முன்றாவது தவறு (எண் 13 & 14):

சீமோன் மற்றும் தோமா என்ற சீடர்களின் பெயர்கள் விடப்பட்டுள்ளன.

புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் காணப்படும் சீடர்களின் பட்டியலில் சீமோன் மற்றும் தோமா என்ற இரண்டு பெயர்கள் உள்ளன.  ஆனால், இந்த மோசடி பர்னபா தன் பட்டியலிலிருந்து இவ்விருவரை நீக்கிவிட்டார்.  இவர்களை நீக்கிய இடத்தில் தன்னை ஒருவராக சேர்த்துவிட்டார். மேலும் ஒரே நபருக்கு பல பெயர்கள் இருப்பதை புரிந்துக்கொள்ளாமல், இரண்டு நபர்களாக அவர்களை கருதிவிட்டார் (மேலே உள்ள இரண்டாம் தவறை பார்க்கவும்).

முடிவுரை:

இதுவரை கண்ட ஆதாரங்களின் படி, பர்னபா சுவிசேஷத்தை எழுதியவர் உண்மையாகவே இயேசுவின் சீடரல்ல என்பதை அறியலாம்.  

மூன்றாண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக வாழ்ந்த 12 சீடர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்தும் இவர், ஏன் இப்படிப்பட்ட அடிப்படை தவறுகளைச் செய்யவேண்டும்? இவர் செய்த இந்த தவறுகளைக் கண்ட இதர‌ சீடர்கள் எப்படி இவரது இந்த புத்தகத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்? பதினோர் பெயர்களை சரியாக ஞாபகத்தில் வைத்திருக்காத இவர் எப்படி 3.5 ஆண்டுகள் நடந்த நிகழ்ச்சிகளை ஞாபகத்தில் வைத்திருந்து இப்புத்தகத்தை எழுதியிருப்பார்? இப்படிப்பட்ட கேள்விகள், பர்னபா சுவிசேஷத்தின் அஸ்திபாரத்தை தகர்த்துவிடுகின்றன என்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம்.

இவர் ஒரு மோசடி நபராவார், தன் சுய விருப்பத்தை நிறைவேற்ற அதாவது “இஸ்லாமுக்கு ஏற்றபடி ஒரு சுவிசேஷம் வேண்டும்” என்ற விருப்பத்தினால், இப்படி அரைகுறையாக சீடர்களின் பட்டியலை எழுதியுள்ளார். 

இவர் இயேசுவின் உள்வட்ட சீடர்கள் 12 பேர்களில் ஒருவர் இல்லை என்பதை அறிந்துக்கொண்டோம். ஒருவேளை, இவர் அப்போஸ்தலர் நடபடிகளில் வரும் 'பர்னபா'வாக இருப்பாரோ என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். அடுத்த கட்டுரையில், அப்போஸ்தலர் நடபடிகளில் வரும் பர்னபாவும், இந்த மோசடி சுவிசேஷ ஆசிரியரும் ஒருவரல்ல என்பதை தகுந்த ஆதாரங்களோடு பார்ப்போம்.