2015 ரமளான் கடிதம் 14

அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல! 

[ரமளான் தொடர் கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும். இவ்வாண்டு ரமளானின் 13வது கடிதத்தை இங்கு சொடுக்கி படித்து, அதன் பிறகு தற்போதைய கடிதத்தை படிக்கவும்.] 

உமரின் தம்பி சௌதி அரேபியாவிலிருந்து எழுதிய  கடிதம்:

அன்புள்ள அண்ணாவிற்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நான் உங்களுக்கு இஸ்லாமிய  விவரங்களை இனி எழுதமாட்டேன் என்று என் முந்தைய கடிதத்தில் எழுதியிருந்தேன். ஆனால், உங்களின் 13வது கடிதம் கண்டு என் மனதை மாற்றிக்கொண்டேன். ஏதாவது ஒன்றை என்னால் இயன்ற மட்டும் நான் இஸ்லாமுக்காக செய்யவேண்டும்.

அடி மீது அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பார்கள், அது போல உங்களை சொர்க்கவாசியாக மாற்றும் வரை நான் ஓயமாட்டேன். நாம் இருவரும் எழுதிக்கொள்வது, சொத்துகளுக்காக போடும் அண்ணன் தம்பி சண்டையில்லையே! எந்த கோட்பாடு உண்மையென்பது தான் கேள்வி. உங்களால் ஆனதை நீங்கள் எழுதுங்கள், என்னால் முடிந்ததை நான் எழுதுவேன். அல்லாஹ்விற்காக நான் பேனாவை தூக்கியிருக்கிறேன், உங்களுக்கு உங்கள் விருப்பப்படி கத்னா (விருத்தசேதனம்) செய்யாமல் அந்த பேனாவை நான் கீழே வைக்கமாட்டேன். [இந்த வயதில் கத்னா செய்வது தகுமா? என்று கேட்காதீர்கள், ஆபிரகாம் மற்றும் மோசேக்கு எந்த வயதில் விருத்தசேதனம் செய்யப்பட்டது என்று பழைய ஏற்பாட்டில் படித்துப் பாருங்கள்.]

இன்னொரு முக்கியமான விஷயம், ரமளான் மாதம் முடிந்துவிட்டாலும் நம்முடைய இந்த கடித உரையாடலை நாம் தொடருவோம். 

அப்போஸ்தலர் சொர்க்கவாசிகளே! என்று உங்கள் முந்தைய கடிதத்தில் எழுதியிருந்தீர்கள். நான் இன்னும் அதிகமாக ஆய்வு செய்து அப்போஸ்தலர்கள் பற்றி அடுத்தடுத்த கடிதங்களில் எழுதுவேன்.

இப்படிக்கு,

உங்கள் தம்பி,

சௌதி அரேபியா

---------------

உமரின் கடிதம்:

அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

அன்பான தம்பிக்கு,

உன் கடிதம் கண்டேன், மகிழ்ந்தேன். 

தோல்வியைக் கண்டு நீ தொலைந்துபோ என்றும், சோர்வைக் கண்டு நீ செத்துவிடு என்றும் சொல்லும் தெம்பு என் தம்பியிடம் இருப்பதைக் கண்டு மகிழ்கிறேன். இதே  போல, மரணமே உன் கூர் எங்கே, பாதாளமே உன் ஜெயம் எங்கே என்றும் கேட்டுவிடு, அப்போது இன்னும் அதிகமாக நான் மகிழுவேன். இப்படி கேட்கும் விசுவாசமும், வீரமும் உனக்கு வரவேண்டுமென்று எல்லாம் வல்ல தேவனிடம் வேண்டுகிறேன். எனக்கு விருத்தசேதனம் செய்ய நீ விரும்புகிறாய், ஆனால் உனக்கு இருதயத்தில் விருத்தசேதனம் செய்ய நான் விரும்புகிறேன். பார்க்கலாம்! யாருக்கு யார் விருத்தசேதனம் செய்யப்போகிறார்கள் என்று! சத்தியத்தை தேட முடிவு செய்துவிட்டாய், நிச்சயமாய் அதனை கண்டுக்கொள்வாய்.

உன் கடிதத்தில் நீ குறிப்பிட்டது போல, இந்த ரமளான் மாதம் முடிந்துவிட்டாலும், நம்முடைய இந்த கடித உரையாடலை நாம் தொடரலாம், பல உண்மைகளை தொடலாம். 

அபூ பக்கர் ”முதல் கலிஃபாவாக” பதவியேற்ற பிறகு அவர் செய்த சாதனைகளை சுருக்கமாக இனி காணப்போகிறோம். 

தம்பி இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை உன் ஞாபகத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த ரமளான் மாதத்தின் ஆரம்பத்தில், நீ என்னிடம் ”இஸ்லாமை தூயவடிவில் காணவேண்டுமென்றால், தற்கால முஸ்லிம்களிடமோ, ஐஎஸ் போன்ற தீவிரவாதிகளிடமோ காணமுடியாது, அதற்கு பதிலாக, ஆரம்ப கால இஸ்லாமியர்களாகிய சஹாபாக்களிடம் தான் காணமுடியும்” என்று கூறினாய். அதன் அடிப்படையில் தான் நான் என் ஆய்வை ஆரம்ப கால இஸ்லாமியர்களின் பக்கம் முக்கியமாக முதல் நான்கு கலிஃபாக்களின் பக்கம் திருப்பினேன்.

உன் கருத்துப்படி (முஸ்லிம்களின் பொதுவான நம்பிக்கையின் படி):

அ) முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக இஸ்லாமை தூயவடிவில் பின் பற்றியவர்கள், ஆரம்ப கால இஸ்லாமியர்கள் ஆவார்கள்.

ஆ) அவர்களிலும் முக்கியமாக அவரது நெருங்கிய சஹாபாக்கள் இஸ்லாமை தூயவடிவில் பின் பற்றினார்கள்.

இ) இந்த சஹாபாக்களிலும், முதல் நான்கு கலிஃபாக்கள் தான் ”நேர் வழி நின்ற கலிஃபாக்கள்” என்று பட்டப்பெயரோடு திகழ்கிறார்கள்.

ஈ) இந்த நான்கு கலிஃபாக்களின் பெயர்கள் அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலி என்பவைகளாகும்.

இவர்களின் வாழ்க்கையில் காணப்படும் இஸ்லாம் தான் உண்மையான இஸ்லாமாகும். ஏனென்றால், இவர்கள் முஹம்மதுவை கண்டு, அவரோடு பேசி, அவரோடு வாழ்ந்து, அவரை நெருக்கமாக பார்த்தவர்கள். இஸ்லாமின் கோட்பாடுகளை  இடைத்தரகர்கள் இல்லாமல் தூயவடிவில் பெற்ற பாக்கியசாலிகள். ஆக, இவர்களிடம் இஸ்லாமின் தூய வடிவத்தை மக்கள் தேடுவதில் எந்த குற்றமுமில்லை. 

தம்பி, இந்த கடிதத்தில், முதல் கலிஃபா அபூ பக்கர் அவர்களின் சாதனைகளின் ஆரம்பத்தை சிறிது சோதித்துப் பார்ப்போம். 

முஹம்மது மரித்த பிறகு, அபூ பக்கர் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவர் ஏக மனதாக தெரிவு செய்யப்படவில்லை, பல எதிர்ப்புகளின் மத்தியில், உமரின் தைரியமான செயலினால் இவர் தலைவரானார். இவர் இரண்டாண்டுகள் (கிபி 632 முதல் கிபி 634 வரை)ஆட்சி செய்தார். 

இஸ்லாமை புறக்கணித்த முஸ்லிம்கள்:

முஹம்மதுவின் காலத்தில் அரேபியாவில் இருந்த அனேக இனக்குழுக்கள் முஹம்மதுவுடன் உடன்படிக்கை செய்திருந்தார்கள். முஹம்மதுவின் ஆள் பலத்தைக் கண்டு இஸ்லாமை பின் பற்றுவதாகச் சொல்லி, முஹம்மதுவிற்கு ஜகாத் (ஸகாத் வரி) கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். சிலர் விரும்பி இஸ்லாமை ஏற்றார்கள், சிலர் தங்களுக்கு சண்டையிட வலிமையில்லை என்பதால், விருப்பமில்லாமலும் இஸ்லாமை ஏற்றார்கள்.

முஹம்மது மரித்தவுடன், அபூ பக்கர் கீழ்கண்ட சவால்களை சந்தித்தார்:

1) அரேபிய இனக்குழுக்கள் “நாங்கள் முஹம்மதுவுடன் தான் உடன்படிக்கைச் செய்தோம், அவர் மரித்துவிட்டார், அரேபிய வழக்கத்தின் படி அவரோடு நாங்கள் புரிந்த உடன்படிக்கையும் முரிந்துவிட்டது, இனி நாங்கள் மதினாவிற்கு ஜகாத் (ஸகாத் வரி) செலுத்துவதில்லை” என்று கூறினார்கள். நாங்கள் முஸ்லிம்களாகவே இருப்போம், ஆனால், ஜகாத் அபூ பக்கருக்கு தரமாட்டோம், எங்களை நாங்களே ஆட்சி செய்துக்கொள்வோம் என்று கூறினார்கள்.

2) இன்னும் சிலர், இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டார்கள், தாங்கள் கடந்த காலத்தில் பின்பற்றின மதத்திற்கே திரும்பி விட்டார்கள்.

3) சிலர் தங்களை நபிகள் என்றுச் சொல்லிக்கொண்டு, இஸ்லாமுக்கு இனி நாங்கள் அடிமைகள் இல்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

தம்பி, இந்த சூழ்நிலையில் அபூ பக்கரின் இடத்தில் நீ இருந்திருந்தால் என்ன செய்து இருப்பாய்? இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று ஓயாமல் சொல்லிக்கொள்ளும் (தற்கால) முஸ்லிம்கள் என்ன செய்து இருந்திருப்பார்கள்? இஸ்லாமை தூயவடிவில் பின்பற்றக்கூடியவர்கள் ”இஸ்லாமில் கட்டாயமில்லை, உன் மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு” என்றுச் சொல்லி அப்படியே விட்டு விடுவார்களா? நாங்கள் முஸ்லிம்களாகவே இருந்து எங்களை நாங்கள் ஆண்டுக்கொள்வோம் என்றுச் சொன்ன முஸ்லிம்களோடு சண்டையிடுவார்களா?

இஸ்லாம் அமைதி மார்க்கம் தான் என்று நிரூபிக்கம் சமயம் வந்தது, அதுவும் முதல் தலைவர் அபூ பக்கருக்கு வந்துள்ளது. இவர் என்ன செய்து இருந்திருக்கவேண்டும்? இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றும், இஸ்லாமை கட்டாயப்படுத்தி யார் மீதும் திணிக்கக்கூடாது என்றும் நினைத்து செயல்பட்டு இருந்திருக்கவேண்டும். இவர் செய்தது என்ன?

ரித்தா போர்கள் - இஸ்லாமைவிட்டு வெளியேறியவர்களுடன் நடந்த போர்கள்(War of Apostasy):

அபூ பக்கருக்கும் உமருக்கும் இடையே நடைப்பெற்ற ஒரு சிறிய உரையாடலை, முஸ்லிம்களின் அதிகார பூர்வமான புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து காண்போம். தம்பி, இந்த கடிதத்தை இந்த ஒரு ஹதீஸோடு நான் முடிக்கிறேன்.

புகாரி ஹதீஸ் எண்: 1399

1399. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ இல்லல்லாஹ்" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்" என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்" என்றார்.  Volume :2 Book :24

இதே விவரங்கள் வேறு ஹதீஸ்களிலும் வருகிறது, அவைகளின் எண்கள்: 1400, 1456-1457, 6925, 7284-7285.

தம்பி, நன்றாக மேற்கண்ட ஹதீஸ்களை படித்துப் பார். 

முஹம்மதுவின் கூற்றுப்படி, “லா இலாஹ இல்லல்லாஹ்” என்றுச் சொல்லி, முஸ்லிமாக வாழ்பவன் பாதுகாப்பாக இருப்பான், அவன் மீது போர் செய்யக்கூடாது. இதனை உமர் அபூ பக்கருக்கு ஞாபகப்படுத்துகிறார்.   ஆனால், அபூ பக்கரின் கூற்றுப்படி “அவன் முஸ்லிமாக இருந்தாலும் சரி, அல்லாஹ் தான் உண்மையான இறைவன் என்று சொன்னாலும் சரி, ஸகாத் கொடுக்கவில்லையென்றால், அவன் காஃபிர் தான், எனவே அவனோடு நான் போரிடுவேன். ஸகாத்தாக அவன் ஒரு ஒட்டகக்குட்டியை முஹம்மதுவிற்கு கொடுத்தவனாக இருந்திருந்தால், அதனை நான் இப்போது வசூலிக்காகமல் விடமாட்டேன்” என்பதாகும்.

இதற்கு உமர் அளித்த பதிலை நன்றாக கவனி.  அபூ பக்கருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டி இந்த முடிவை எடுக்கக்கூடிய ஞானம் கொடுத்ததாக உமர் கூறுகிறார்.  

“. . . இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்" என்றார்.”

யார் குற்றவாளி? அல்லாஹ்வா அல்லது அபூ பக்கரா?

தம்பி, உன்னிடம் நாம் கீழ்கண்ட கேள்விகளை கேட்கவிரும்புகிறேன். இது மிகவும் முக்கியமான விஷயம், முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, இஸ்லாம் தூயவடிவில்! வெளிப்பட்ட நேரம் அது!

1) முஹம்மது உயிரோடு இருந்த போது, அரேபியாவின் இனக்குழுக்கள் இஸ்லாமை எதன் அடிப்படையில் தழுவினார்கள்?

2) முஹம்மது மரித்தவுடன் ஏன் அவர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டு தங்கள் முந்தையை மதத்தை  பின்பற்ற ஆரம்பித்தார்கள்? 

3) முஹம்மதுவின் வாளுக்கு பயந்து இவர்கள் இஸ்லாமை ஏற்றார்கள் என்று பொருள்படுகின்றதல்லவா?

4) இன்னும் சிலர், ஸகாத் மட்டும் நாங்கள் தரமாட்டோம், ஆனால், முஸ்லிம்களாகவே இருப்போம் என்றுச் சொன்ன பிறகும் ஏன் அபூ பக்கர் அவர்களோடு போர் புரிந்தார்?

5) ஸகாத்திற்காக அல்லாஹ்வின் அடியார்களை வெட்டிச் சாய்க்கும் இந்த மதம், ஒரு வன்முறையின் மதம் என்பதை, அந்த மக்களுக்கு அபூபக்கர் நேரடியாக தெரிவித்தது போல ஆகிவிட்டதல்லவா?

6) இஸ்லாமில் கட்டாயமில்லை என்ற வசனமும் இறையியலும், வெறும் பேச்சுக்காகத் தானா? 

7) இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் என்று அபூ பக்கர் நினைத்திருந்தால், ஏன் அவர்களோடு போர் புரிந்தார்? ஏன் உமரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை? சில சஹாபாக்களை அனுப்பி அவர்களுக்கு இஸ்லாமை இன்னும் அழமாக விளக்கியிருக்கலாம் அல்லவா? ஸகாத் என்பது ஒரு முஸ்லிமின் ஐந்து கடமைகளில் ”ஒன்று” என்று விளக்கியிருந்திருக்கலாம் அல்லவா? ஒருவேளை அவர்கள் அப்போதும் ஏற்க மறுத்தால், முடிவை அல்லாஹ்விடம் விட்டுவிட்டு இருந்திருக்கலாம் அல்லவா? அவர்களோடு சண்டையிடாமல் இருந்திருந்தால், இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று தெரிந்திருக்கும் அல்லவா?

8) அற்பமான பணத்திற்காக, இன்னொரு முஸ்லிமோடு போர் புரிந்து இரத்தம் சிந்துவது பாவமில்லையா?

9) இஸ்லாமின் படி, அபூ பக்கர் நேர் வழி நின்ற கலிஃபா என்றால், இந்த செயல்களுக்கெல்லாம் மூல காரணம் அல்லாஹ் தானே! இந்த வழியை அபூ பக்கரின் மனதில் போட்டவர் அல்லாஹ் என்றால், யார் குற்றவாளி? அபூ பக்கர் வெறும் அம்பு தான், எய்தவன் அல்லாஹ் தானே!

10) ஸகாத் கொடுப்பது பொருளாதார கடமையென்றால், அந்தந்த இனக்குழுக்கள் தங்கள் சொந்த தலைவருக்கு ஸகாத் கொடுத்துவிட்டு போகிறார்கள்! அவர்களும் முஸ்லிம்கள் தானே! ஏன் அவர்கள் மீது அபூ பக்கர் போர் தொடுத்தார்? 

11) அபூ பக்கர் நடந்தது நேர் வழியென்றால், நாளைக்கு இந்த ஐஎஸ் போன்ற தீவிரவாத கும்பல், ஒரு நாட்டை முழுவதுமாக பிடித்து ஆட்சி பிடித்தால், உடனே பக்கத்தில் உள்ள இதர இஸ்லாமிய நாட்டைப் பார்த்து எனக்கு ஸகாத் கொடு, இல்லையேல், அபூ பக்கர் செய்த ரித்தா போர் போல, நான் உன் மீது போர் தொடுப்பேன் என்றுச் சொன்னால், அதனை இன்றுள்ள சௌதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அவருக்கு அடிபணியுமா? அடிபணியவேண்டுமா? அல்லது சண்டையிடுமா?

12) முதல் கலிஃபா ”அபூ பக்கர்” மாதிரி, இன்றைய ”அபூ பக்கர் பக்தாதி (ஐஎஸ் தலைவர்)” பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதி, நீ முஸ்லிமாக இருந்தாலும், அல்லாஹ்வை மட்டுமே வணங்கினாலும், என் கலிஃபாத்துவத்திற்கு அடிபணிந்து, எனக்கு ஸகாத் கொடுக்கவில்லையென்றால், உன் மீது போர் தொடுக்கப்படும் என்றுச் சொன்னால்? பாகிஸ்தான் முஸ்லிம்கள் என்ன செய்வார்கள். இந்த அபூ பக்கர் பக்தாதியையும் ”நேர்வழி நின்ற கலிஃபா” என்றுச் சொல்வார்களா?

13) அன்று அந்த அபூ பக்கரின் இருதயத்தை விரிவாக்கிய அல்லாஹ், இன்று இந்த அபூ பக்கர் பக்தாதியின் இருதயத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான் என்று முஸ்லிம்கள் நம்புவார்களா?

14) அபூ பக்கரின் இந்த செயல் இஸ்லாமை தூயவடிவில் காட்டுகின்றதா தம்பி? ஆமாம் என்றுச் சொன்னால், “இஸ்லாம் அமைதி மார்க்கம்” என்று முஸ்லிம்கள் சொல்லிக்கொண்டு இருப்பதெல்லாம் ஏமாற்றுவேலையாகும்.

15) அபூ பக்கர் ”அரசை நடத்தும் தலைவர் முறையில் நடந்துக்கொண்டார்” என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால்,  இதனை கவனியுங்கள். தற்போது நம் இந்திய திரு நாட்டில், பீஜேபியின் (BJP) ஆட்சி நடைப்பெறுகிறது (பீஜேயின் ஆட்சி என்று நான் சொல்லவில்லை). இவர்கள் ஜனநாயகத்தை புறக்கணித்துவிட்டு, இனி எல்லா முஸ்லிம்களும், இந்துக்களாக மாறவேண்டும் என்று சட்டம் போட்டு, முஸ்லிம்களோடு சண்டையிட்டு, அவர்களை ஒடுக்கினால், “இவர்களும் நேர் வழி நின்ற கலிஃபாக்களைப் போன்றவர்கள் என்று முஸ்லிம்கள் இவர்களை அங்கீகரிப்பார்களா?”.  இவர்கள் இந்துக்களாக இருந்தாலும், இந்துத்துவ ஆன்மீகத்தை பக்கத்தில் வைத்துவிட்டு, இந்த செயலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அபூ பக்கரைப் போல இவர்களும் ஒரு அரசை நடத்துவதால், இவர்களின் இருதயங்களை இவர்களின் தெய்வங்கள் விரிவாக்கினபடியால், இப்படி மாற்று மதங்கள் மீது போர் தொடுத்தால் எப்படி இருக்கும்? அபூ பக்கரின் இருதயத்தை அல்லாஹ் விரிவாக்கினால், ஏன் மற்ற மக்களின் இருதயத்தை அவர்களின் இறைவன் விரிவாக்கமாட்டான்? 

தம்பி, இப்போது உனக்கு எங்கு தவறு நடந்துள்ளது என்று புரிகின்றதா!

முடிவுரை:

முதல் கலிஃபா செய்த மற்ற விவரங்களை அடுத்தடுத்த கடிதத்தில் உனக்கு எழுதுவேன்.  நாம் மேலே கண்ட ஹதீஸின் படி, அபூ பக்கரின் செயல், உமருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. உடனே உமர் அபூ பக்கருக்கு அறிவுரை கூறுகின்றார். ஆனால், அபூ பக்கர் மறுப்பு தெரிவித்தபோது, இது அல்லாஹ்வினால் அபூ பக்கருக்கு கிடைத்த ஞானம் என்றுச் சொல்லி, உமர் அமைதியாக இருந்துவிடுகின்றார்.  ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் கொல்லும்படலம் இந்த அபூ பக்கர் காலத்திலிருந்து துவங்கியது என்று சொல்லலாமா தம்பி? அபூ பக்கரின் கருத்துப்படி, ஸகாத் தனித்தனி நாடுகளின் சொத்துக்கள் அல்ல (அவர்களின் அப்பன் சொத்து அல்ல), அது உலகமனைத்தையும் ஆட்சி செய்யும் கலிஃபாவின் கீழ் இருக்கும் இஸ்லாமிய அரசின் சொத்து ஆகும். 

அபூ பக்கர் ஒரு அரசை நடத்தும் தலைவர் என்று நீ சொல்லக்கூடும். உனக்கு ஒரு வேலையை நான் தருகிறேன்.  இஸ்லாமிய ஆன்மீகம், இஸ்லாமிய அரசு, இந்த இரண்டிற்கும் இடையே  இருக்கும் வித்தியாசம் என்ன? எந்த நேரத்தில் இஸ்லாமிய ஆன்மீகம், இஸ்லாமிய அரசை மேற்கொள்ளும், அதே போல, இஸ்லாமிய அரசு எந்த நேரங்களில் ஆன்மீகத்தை மேற்கொள்ளும்? போன்றவற்றை ஆய்வு செய்து எனக்கு எழுதமுடியுமா?  இஸ்லாமை மக்கள் தவறாகவே புரிந்துக்கொள்கிறார்கள் என்று முஸ்லிம்கள் அடிக்கடி சொல்வார்கள். இஸ்லாமை மக்கள் தவறாக புரிந்துக்கொள்வதற்கு, இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை “முஸ்லிம்கள்”  மற்றவர்களுக்கு சரியாக விளக்காதபடியினால் தான் வருகிறது. தம்பி, இந்த வேலையை நீ செய்யவில்லையென்றால், அதனை நான் செய்யவேண்டி வரும்.  முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமை விமர்சிப்பதற்கு காரணம்,  முஸ்லிம்கள் இஸ்லாமை நேர்மையாக விளக்காமல் இருப்பதினால் தான். 

உன் கருத்துக்களையும், விமர்சனங்களையும் நான் எதிர்ப்பார்க்கிறேன்.

அடுத்த கடித்தத்தில் இன்னும் அதிக விவரங்களோடு உன்னை சந்திக்கிறேன்.

இப்படிக்கு,

உன் அண்ணன் உமர்

தேதி: 16 ஜூலை 2015


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்