ரமளான் நாள் 19

இயேசு தம் தெய்வீகத்தை தாமே சுவிசேஷங்களில் மறுக்கிறார், இதற்கு உங்கள் பதில் என்ன?

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நீ அனுப்பிய மெயிலை படித்தேன், நீ கேட்ட கேள்வியையும் படித்தேன். நீ தற்போது அதிகமாக இஸ்லாமிய புத்தகங்களை படிப்பதாகவும், அனேகரிடம் இதைப் பற்றி பேசி விவரங்களை சேகரிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தாய். நீ சரியான ஒன்றைத் தான் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறாய்.  

உன் கடிதத்தில் நீ என்னிடம் "இயேசு தனக்கு தெய்வீகத்தன்மை இல்லையென்றும், தன் தெய்வீகத்தன்மையை தாமே மறுக்கும்படியாகவும் நான்கு நற்செய்தி நூல்களில் கூறியிருக்கும் போது, ஏன் கிறிஸ்தவர்கள் வலியச் சென்று, இயேசுவிற்கு தெய்வீகத்தன்மையை ஒட்டவைக்கிறீர்கள்? சுவிசேஷ நூல்களை சரியாக கிறிஸ்தவர்கள் படிக்கமாட்டார்களா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தாய்.

உன்னுடைய இந்த கேள்விகான பதிலை இப்போது நாம் பார்ப்போம்.

இஸ்லாமியர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு:

இஸ்லாமியர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுப்பதற்கு அவர்கள் புதிய ஏற்பாட்டை முக்கியமாக முதல் நான்கு சுவிசேஷங்களை ஆதாரமாக காட்டுவதுதான். குர்ஆனை ஆதாரமாக காட்டி, இயேசு தெய்வமில்லை என்றுச் சொன்னாலும், அவர்களால் ஓரளவிற்கு சமாளித்துக் கொள்ளமுடியும், ஆனால், நற்செய்தி நூல்களை ஆதாரமாக காட்டுவது அடிமட்ட அறியாமையாகும்.

எந்த ஒரு மனிதனும், புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு சுவிசேஷ நூல்களை படித்துவிட்டு, இந்த நூல்களில் இயேசு தம்முடைய தெய்வீகத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை, அதற்கு பதிலாக 'அவர் ஒரு மனிதன்' என்பதை மட்டுமே வெளிக்காட்டுகிறார் என்றுச் சொல்வாரானால், ஒன்று இந்த மனிதன் பொய் சொல்லவேண்டும், அல்லது இவருக்கு சுயநினைவு சரியில்லை என்று அர்த்தம்.  ஏனென்றால், இறைவன் இல்லை என்றுச் சொல்லக்கூடிய நாத்தீகர்கள் கூட, இந்த நான்கு சுவிசேஷங்களை படித்துவிட்டு, இயேசு தம்முடைய தெய்வீகத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் என்று தான் கூறுவார்கள். 

அடிப்படையில் நான்கு சுவிசேஷங்கள் இயேசுவின் தெய்வீகத்தன்மையை பறைசாற்றுகிறதா இல்லையா என்று கேட்டால், "ஆம், பறைசாற்றுகிறது" என்பது தான் பதிலாக அமையும்.

எந்த ஒரு இஸ்லாமியராவது நான்கு சுவிசேஷங்களை படித்துவிட்டு, இதில் இப்படி இயேசு தம்முடைய இறைத்தன்மையைப் பற்றிச் சொல்லவில்லையே என்று கூறுவாரானால், அவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் சரி, அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம் (இதில் முதல் இடத்தை நான் பி, ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்குத் தரவிரும்புவேன்).

இப்போழுது நான், இயேசு தம்முடைய தெய்வீகத்தைப் பற்றி கூறிய விவரங்களில் சில காரியங்களைப் பற்றி உனக்கு விவரித்து கேள்வி எழுப்பப்போகிறேன். இதனை உன் இஸ்லாமிய அறிஞர்களிடம் தெரிவித்து, இவைகள் அந்த நான்கு சுவிசேஷங்களில் தான் உள்ளது, இவைகளை நீங்கள் படிக்கவில்லையா என்று கேட்டுச் சொல்வாயா? 

1. இயேசு தேவாலயத்திலும் பெரியவர்:

இயேசு ஒரு முறை "தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன" என்று கூறியுள்ளார் (மத்தேயு 12:6). அதாவது ஓய்வு நாளில் சீடர்கள் கதிர்களை கொய்து சாப்பிட்டார்கள், ஓய்வு நாளில் ஏன் உம்முடைய சீடர்கள் சட்டத்தை மீறுகிறார்கள் என்று யூத மார்க்க தலைவர்கள் கேட்கும் போது, பழைய ஏற்பாட்டின் ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்டுவிட்டு, தம்மைப் பற்றி இயேசு கூறும் போது இவ்விதமாக கூறுகிறார்.

எருசலேம் தேவாலயம், யூத சரித்திரத்தில் மிகவும் முக்கியமான அங்கமாக உள்ளது. தாவீது கட்ட விரும்பினார், ஆனால் தேவன் சாலொமோனின் மூலம் கட்டவைத்தார், பாபிலோன் அரசன் அதை பாழாக்கினான், மறுபடியும் எஸ்றா, நெகேமியா காலத்தில் பழுது பார்க்கப்பட்டது. 

கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து கட்டப்படும் தேவாலயம் பெரியதா அல்லது அதில் வாசம் செய்யும் தேவன் பெரியவரா? தேவாலயத்தை விட தேவன் தான் பெரியவர். இராஜா வாழும் மாளிகை பெரியதா அல்லது அதில் வாசம் செய்யும் இராஜா பெரியவரா? இராஜா தான் பெரியவர்.

தேவாலயத்தை விட தேவன் தான் பெரியவர். விஷயம் இப்படி இருக்க இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தமென்ன? "தேவாலயத்திலும் பெரியவர் இங்கு இருக்கிறார்" என்றுச் சொன்னால், இயேசு தன்னை அந்த தேவாலயத்தில் வாசம் செய்யும் தேவனுக்கு சமமாக அல்லவா பேசியுள்ளார். தன்னை தேவன் என்ற நிலையில் அல்லவா அவரது கூற்று காணப்படுகிறது?

தம்பி இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை சிறிது நீ ஆய்வு செய்து பார்ப்பாயா? எருசலேம் தேவாலயத்துக்காகவும், தேவனுக்காகவும் வைராக்கியமாக இருக்கும் யூத தலைவர்களிடம் இவ்விதமாக இயேசு பேசியுள்ளார். இஸ்லாம் சொல்வது போல 'இயேசு வெறும் ஒரு தீர்க்கதரிசியாக மட்டும்' இருந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா? நீ சிறிது சிந்தித்துப் பார் தம்பி.

2. இயேசு ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்:

இயேசு தம்மைப் பற்றி என்ன தான் நினைக்கிறார்? இஸ்லாம் சொல்வது போல இயேசு ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால், இப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்லியிருப்பாரா? ஒருபோதும் சொல்லமாட்டார். ஆனால், இயேசு தீர்க்கதரிசியை விட மேலானவராக இருக்கிறார்.

நாம் மேலே கண்ட அதே நிகழ்ச்சியில் (மத்தேயு 12ம் அதிகாரம்), முதலாவது தாம் தேவாலயத்திலும் பெரியவர் என்று சொன்னார், அதற்கு பிறகு, தாம் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருப்பதாக, வசனம் 8ல் கூறுகிறார்.

எல்லா நாட்களுக்கும் ஆண்டவர் யெகோவா தேவனல்லவா? ஓய்வு நாளுக்கும் ஆண்டவர் யெகோவா தேவன் அல்லவா? இப்படி இருக்க இயேசு எப்படி 'நான் தான் யெகோவா' என்பது போல பேசுகிறார்?

 தம்பி,  'இயேசு பேசிய வார்த்தைகள்' வெறும் சாதாரண மனிதன் பேசும் வார்த்தைகள் அல்ல, தீர்க்கதரிசிகள் பேசும் வார்த்தைகள் அல்ல, இவைகள் அவர்களை விட மேலான ஒருவர் பேசும் வார்த்தைகளாகும்.

"மனுஷ குமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்" என்றுச் சொல்வதிலிருந்து, முதலாவதாக அவர் ஓய்வு நாள் அல்லாத நாட்களுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றுச் சொல்கிறார், இரண்டாவதாக ஓய்வு நாளுக்கும் அவர் ஆண்டவராக இருப்பதாக சொல்கிறார். எந்த தீர்க்கதரிசியாவது இப்படி பேசுவாரா? சிந்தித்துப்பார்.

3. இயேசு யோனாவிலும் பெரியவர்:

இந்த மத்தேயு 12ம் அதிகாரத்தில் இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மைக்கான காரியங்களை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.  

இயேசு 41ம் வசனத்தில் என்ன கூறுகிறார் என்று ஒரு முறை கவனி:

12:41 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.

பொதுவாக தீர்க்கதரிசிகளில் பெரியவர் சின்னவர் என்று யாரும் இல்லை. அவரவருக்கு தேவன் ஒப்புவித்த வேலையை அவர்கள் செய்துமுடித்தார்கள்.  ஆனால், இந்த இடத்தில் இயேசு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியோடு ஒப்பிட்டு, அவரை விட தான் பெரியவர் என்றுச் சொல்கிறார்.

மேலும் நியாயத் தீர்ப்பு நாளில் என்ன நடக்கும் என்றும் சொல்கிறார். இப்படி ஒரு தீர்க்கதரிசி பேசுவது சாதாரணமானது அல்ல. ஒரு தீர்க்கதரிசி இப்படி பேசுவது அவருக்கு அடுக்காது. ஆனால், இயேசு இவ்விதமாக கூறியுள்ளார்! எந்த வகையில் இயேசு யோனாவை விட பெரியவர்? 

a) பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட மேசியாவாக இயேசு இருக்கிறார், யோனா வெறும் தீர்த்தரிசியாக உள்ளார். மேசியாவின் தகுதி, ஊழியம்,  இதர தீர்க்கதரிசிகளை விட மேன்மையானதாக உள்ளது. 

b) யோனா நினிவே மக்களுக்கு 40 நாட்கள் பிரசங்கித்தார், ஆனால், இயேசு யூதர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் அதிகமாக பிரசங்கித்தார்.

c) யோனா தன் செய்தியை சொல்வதற்காக அற்புதங்கள் செய்யவில்லை, வெறும் தேவசெய்தியை பிரசங்கித்தார். ஆனால், இயேசு சென்ற இடமெல்லாம் அற்புதங்கள் செய்தார், தன் தெய்வீகத்தன்மையை பலவகைகளில் விளக்கிக்காண்பித்தார்.

d) மேலும், இயேசுவின் முந்தைய வார்த்தைகளின்படி, அவர் தேவாலயத்திலும் பெரியவராகவும் இருக்கிறார், ஒய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார், ஆனால், யோனா வெறும் தீர்க்கதரிசியாக இருக்கிறார்.  

e) கடைசியாக, இயேசுவின் எச்சரிக்கை என்னவென்றால், யோனாவின் செய்தியை கேட்ட மக்கள் மனந்திரும்பினார்கள், எந்த ஒரு அற்புதத்தையும் காணாமல் விசுவாசித்தார்கள், இரட்சிக்கப்பட்டார்கள், ஆனால், மேசியா யூதர்களின் மத்தியில் இருந்த போதிலும்,அனேக அற்புதங்களை கண்டபோதிலும், அவர்கள் விசுவாசியாமல் போனதால், நியாயத்தீர்ப்பு நாளிலே நினிவே மக்கள் இவர்களை குற்றப்படுத்துவார்கள் என்று இயேசு கூறினார்.

தம்பி, நீ பைபிள் முழுவதுமாக படித்துப்பார்த்தலும் இயேசு பேசியது போல் பேசிய தீர்க்கதரிசியை காணமுடியாது. 

4. இயேசு சாலொமோனிலும் பெரியவர்:

தம்பி, நான்கு சுவிசேஷங்களை படித்துவிட்டு, இதில் இயேசு தன் தெய்வீகத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்றுச் சொல்லும் நபர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.

யூதர்கள் இயேசுவின் அற்புதங்களை கண்டு பொறாமை கொண்டு அவரை சிலுவையில் அறையவில்லை, அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும், உலகில் பிறந்த மனிதன் பேசக்கூடிய வார்த்தைகளாக  காணப்படவில்லை, ஏதோ வேறு கிரகத்திலிருந்து வந்த மனிதனைப்போல அல்லது வானத்திலிருந்து வந்த இறைவன் போல பேசினார், யூதர்கள் அனேக முறை அவரை கொலை செய்ய முயற்சி எடுத்தார்கள். அவரது வார்த்தைகளில் பொதிந்து இருந்த சத்தியத்தை, தெய்வீகத்தை அவர்கள் உணர்ந்துக்கொண்டார்கள், ஒரு மனிதன் இப்படி தேவன் பேசுவது போல பேசக்கூடாது என்று இயேசு மீது குற்றம் சாட்டினார்கள்.

இதே மத்தேயு 12ம் அதிகாரம் 42ம் வசனத்தில் இயேசு சொன்ன இன்னொரு விஷயத்தை கவனிப்போம்:

12:42 தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.

இயேசு யாரையும் விடுவதாக தெரியவில்லை, தேவாலயம் முதற்கொண்டு, ஓய்வு நாள் வரையும், ஆபிரகாம் முதற்கொண்டு சாலொமோன் வரையிலும் அவர் முக்கியமான நபர்கள் பற்றி பேசியுள்ளார்.  இப்போது சாலொமோனைப் பற்றி பேசுகிறார், தாம் அவரை விட பெரியவர் என்று கூறுகிறார். சாலொமோனை விட பெரியவனாகிய நான் சொல்லும் விவரங்களை நீங்கள் நம்பாமல் இருப்பதினால், சாலொமோனின் ஞானத்தை கேட்டு அறிந்த இராஜஸ்திரி  உங்கள்மேல் குற்றம் சுமத்துவாள் என்று இயேசு கூறுகிறார். இதன் பொருள் என்னவென்றால், நான் சாலொமோனை விட பெரியவன் என்பதால் என் வார்த்தைகளுக்கு நிச்சயம் நீங்கள் கீழ்படியவேண்டும் என்று இயேசு கூறுகிறார்.

தம்பி இவைகள் எல்லாம் ஒரு சாதாரண மனிதனின் வார்த்தைகளா? ஒரு சாதாரண நபியின் வார்த்தைகளா? நிச்சயமாக இல்லை. 

நீ சொர்ந்து போவாய் என்பதால் இதோடு இந்த கடிதத்தை முடித்துக்கொள்கிறேன், அடுத்த கடிதத்தின் இன்னும் சில விவரங்களை உனக்கு எழுதுவேன்.

சுவிசேஷங்கள் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கிறது என்று இஸ்லாமியர்கள் கூறுவது சுத்தப் பொய்யாகும். நீ உன் நண்பர்களிடம் கேட்டுப்பார், இயேசு இவ்விதமான உரிமைப்பாராட்டலை கொடுத்துள்ளாரே, இவைகள் ஒரு தீர்க்கதரிசியின் வாதங்கள் அல்லவே, ஒரு தீர்க்கதரிசியை விட அதிகமாக இயேசு தம்முடைய தெய்வீகத்தை குறித்து உரிமைப்பாராட்டியுள்ளாரே, இதற்கு உங்கள் பதில் என்னவென்று கேட்டுப்பார்.

1. இயேசு தேவாலயத்திலும் பெரியவர்:

2. இயேசு ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்:

3. இயேசு யோனாவிலும் பெரியவர்:

4. இயேசு சாலொமோனிலும் பெரியவர்:

இன்னொரு விஷயத்தை கூறி முடிக்கிறேன், இயேசு இறைவனாகவும் உள்ளார், அதே நேரத்தில் மனிதனாக வந்தபடியால், மனிதனாகவும் உள்ளார்.  அவர் பேசியது எல்லாம், மனிதன் பேசுவது போலத்தான் உள்ளது என்றுச் சொல்பவர்கள் தெரிந்துக்கொண்டே பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.  சுவிசேஷ நூல்களில் "இயேசு பசியாக இருந்தார், சோர்வாக இருந்தார்" என்று கூறியிருப்பதினால் அவர் மனிதன் தான் என்று வாதிக்கும் இஸ்லாமியர்கள், நான் மேலே கூறிய விவரங்களையும் இயேசு கூறியுள்ளாரே, ஒரு மனிதன் இவைகளை கூறுவது எப்படி சாத்தியமாகும் என்பதை விளக்கவேண்டும். வெறும் ஒரு சில வசனங்களை மட்டுமே மேற்கோள் காட்டி இதர வசனங்களை மறுப்பது எப்படி சரியான ஆய்வாகும்.

இயேசுவின் தெய்வீகத்தன்மையை விளக்கும் இதர விவரங்களை உனக்கு நான் அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

இப்படிக்கு, உன் சகோதரன், 

தமிழ் கிறிஸ்தவன்.

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்