சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: தலைப்பு குர்‍ஆன், கேள்விகள் 531 லிருந்து 540 வரை - (பாகம் 25)

சின்னஞ்சிறு "இஸ்லாம் கிறிஸ்தவம்" தலைப்பின் முந்தைய 530 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். இந்த கட்டுரையில் " குர்‍ஆன் " சம்மந்தப்பட்ட 10 கேள்வி பதில்களைக் காண்போம்.


கேள்வி 531: ஆயிஷா மற்றும் ஹஃப்ஸா அவர்களின் படி குர்‍ஆன் 2:238ம் வசனம் முழுமையானதல்ல என்பது உண்மையா?

பதில்  531: குர்‍ஆனின் 2:238ம் வசனத்தை ஒரு முறை படிப்போம்

2:238. தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

மேற்கண்ட வசனத்தில் இரண்டு வகையான தொழுகைகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது, அதாவது "தொழுகைகள்" மற்றும் "நடுத்தொழுகை" என்று வருகிறது. ஆனால், முஹம்மதுவின் மனைவிகளாகிய ஆயிஷா (அபூ பக்கர் அவர்களின் மகள்) மற்றும் ஹஃப்ஸா (உமர் அவர்களின் மகள்) அவர்களின் படி, இந்த வசனத்தில் ஒரு பிழையுள்ளது.

முஹம்மது இந்த வசனத்தை ஓதும் போது, தொழுகைகளையும், நடுத்தொழுகையையும், அஸர் தொழுகையையும் பேணிக்கொள்ளுங்கள் என்று ஓதியுள்ளார். இதனை கவனித்திருந்த ஆயிஷா மற்றும் ஹஃப்ஸா அவர்கள், முஹம்மதுவின் மரணத்திற்குப் பிறகு, எழுத்து வடிவில் இருந்த குர்‍ஆனில் இவ்வசனம் பிழையாக இருப்பதை கவனித்துள்ளார்கள்.

எனவே, தங்களுக்காக ஒரு குர்‍ஆன் எழுதித் தரும்படி 'எழுதுபவர்களை நியமித்த போது' இவ்வசனத்தை நீங்கள் எழுதும் போது, 'நான் சொல்லும் படி மாற்றி எழுதுங்கள்' என்று கூறியுள்ளார்கள், அப்படியே செய்தும் உள்ளார்கள். இதனை நாம் 'மாலிக் முஅத்தா' என்ற ஹதீஸ் தொகுப்பில் காணலாம்.

மாலிக் முஅத்தா எண்: 8:26

ஆயிஷா அவர்களிடமிருந்தும், அபூ யூனுஸ் மூலமாக, அல்-ககா இபின் ஹகீம் மூலமாக ஜையத் இபின் அஸ்லம் மூலமாக மாலிக் மூலமாக யஹ்யா மூலமாக எனக்கு அறிவிக்கப்பட்டது  உம்-அல்-மூமினீன் கூறியதாவது,

ஆயிஷா அவர்கள் தனக்கு ஒரு குர்‍ஆன் எழுதித் தரும்படி எனக்கு ஆணையிட்டார்கள். மேலும் "தொழுகையையும் மதியத் தொழுகையையும் கவனமாக கடைபிடித்து அல்லாஹ்வுக்கு கீழ்படிவாயாக" என்ற ஆயத்தை நீ அடையும்போது எனக்கு தெரியப்படுத்து என்று கூறினார்கள். நான் அதை எட்டியபோது ஆயிஷா அவர்களிடம் கூறினேன், அவர்கள், "தொழுகையையும் மதியத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் கவனமாக கடைபிடித்து அல்லாஹ்வுக்குக் கீழ்படிவாயாக" என்று ஒப்புவித்து, இப்படி எழுதும் படி கூறினார்கள். மற்றும் “நான் இதை அல்லாவின் தூதரிடமிருந்து(ஸல்) கேட்டேன் என்று கூறினார்கள்."

Malik Muwatta 8:26

Yahya related to me from Malik from Zayd ibn Aslam from al-Qaqa ibn Hakim that Abu Yunus, the mawla of A'isha, umm al-muminin said, ''A'isha ordered me to write out a Qur'an for her. She said, 'When you reach this ayat, let me know, "Guard the prayers carefully and the middle prayer and stand obedient to Allah." ' When I reached it I told her, and she dictated to me, 'Guard the prayers carefully and the middle prayer and the asr prayer and stand obedient to Allah.' A'isha said, 'I heard it from the Messenger of Allah, may Allah bless him and grant him peace.' " – Source: sunnah.com/malik/8/26

மாலிக் முஅத்தா எண்: 8:26

அமர் இபின் ரபி மூலமாக ஜையத் இபின் அஸ்லம் மூலமாக, மாலிக் மூலமாக, யஹ்யா மூலமாக அறிவிக்கப்பட்டது.

நான், உம்-அல்-மூமினீன், ஹப்ஸாவிற்காக ஒரு குர்‍ஆன் எழுதிக் கொண்டிருந்தேன், அவர்கள் என்னிடம், நீ "தொழுகையையும் மதியத் தொழுகையையும் கவனமாக காத்துக்கொண்டு அல்லாவுக்கு கீழ்படிந்து இரு" என்ற‌ ஆயத்தை எட்டும்போது எனக்கு தெரியப்படுத்து, என்றுச் சொன்னார்கள். நான் அதை எட்டினபோது அவருக்கு அறிவித்தேன், அவர்கள். "தொழுகையையும் மதியத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் கவனமாகக் காத்து அல்லாவுக்கு கீழ்படிந்திரு." என்று ஒப்புவித்தார்கள்.

Malik Muwatta 8:27

Yahya related to me from Malik from Zayd ibn Aslam that Amr ibn Rafi said, "I was writing a Qur'an for Hafsa, umm al-muminin, and she said, 'When you reach this ayat, let me know, "Guard the prayers carefully and the middle prayer and stand obedient to Allah." When I reached it I told her and she dictated to me, 'Guard the prayers carefully and the middle prayer and the asr prayer and stand obedient to Allah.' "  - Source: sunnah.com/malik/8/27

நாம் இன்று வைத்துள்ள குர்‍ஆனில் 'அஸர் தொழுகையையும்' என்ற வார்த்தைகள் இல்லை. அதாவது அன்று ஆயிஷா மற்றும் அஃப்ஸா அவர்கள் எந்த பிழையான குர்‍ஆனை கண்டு அதனை திருத்தும் படி சொன்னார்களோ, அந்த சரி செய்யப்பட்ட குர்‍ஆன் இன்று நம்மிடம் இல்லை. ஆனால், சரி செய்யப்படாத‌ பிழையான குர்‍ஆன் தான் நம் கையில் உள்ளது ("நம் கையில் உள்ளது" என்று நான் எழுதியதால் "என்னிடம் பிழையான குர்‍ஆன் உள்ளது" என்று எண்ணிவிடாதீர்கள், இன்று உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரிடமும் அந்த பிழையான குர்‍ஆன் தான் உள்ளது).

ஆயிஷா மற்றும் ஹஃப்ஸா அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது. அவர்களிடம் இருந்த திருத்தப்பட்ட குர்‍ஆன் உஸ்மான் கலிஃபாவினால் எரிக்கப்பட்டு இருந்திருக்கவேண்டும். எனவே, நம்மிடம் இன்றுள்ள குர்‍ஆன் பிழையுள்ளதே!

அல்லாஹ் தம் வார்த்தைகளை சரியாக பாதுகாக்கவில்லை என்று இதன் மூலம் அறியலாம்.

கேள்வி 532: சௌதி பிரிண்ட் செய்த குர்‍ஆனில், 2:238ம் வசனம் சரியாக ஆயிஷா அவர்களின் கூற்றுப்படி திருத்தப்பட்டுள்ளதே! அப்படியென்றால் சௌதி பிரிண்ட் செய்த குர்‍ஆனில் இவ்வசனம் பிழையற்றது என்று கூறலாமா? 

பதில்  532: ஏன் இந்த கேள்வி கேட்கப்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள முதலாவது முந்தைய கேள்வியையும், பதிலையும் படித்துக்கொள்ளுங்கள்.

முந்தைய கேள்விக்கான பதிலை சுருக்கமாகச் சொல்கிறேன்.  நாம் இன்று படிக்கும் குர்‍ஆனில் 2:238ம் வசனத்தில் "அஸர் தொழுகையையும்" என்ற வார்த்தைகள் விடுபட்டுள்ளன, இதனை அன்றே ஆயிஷா அவர்களும், ஹஃப்ஸா அவர்களும் கண்டுபிடித்து தங்கள் குர்‍ஆன் பிரதிகளில் திருத்தியுள்ளார்கள். ஆனால், அவர்களின் திருத்தப்பட்ட குர்‍ஆன் இன்று நம்மிடம் இல்லை, பிழையுள்ள குர்‍ஆனையே நாம் இன்று வாசித்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால், இவ்வசனம் இன்று சௌதி அரசாங்கம் பிரிண்ட் செய்த குர்‍ஆனில், தமிழாக்கத்தில் சரியாக உள்ளதாக, கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எப்படியெல்லாம், இஸ்லாமியர்கள் தங்கள் இறைவேதத்தில் உள்ள பிழையை சரி செய்ய முயலுகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

முஹம்மது ஜான் தமிழக்கம் மற்றும் சௌதி தமிழாக்கத்தை வாசிப்போம்:

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:

2:238. தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். 

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

2:238. (ஐங்காலத்) தொழுகைகளையும் (குறிப்பாக) அஸர் தொழுகையாகிய நடுத் தொழுகையையும் (விடாமல் தொழுது) பேணிக் கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து பணிந்தவர்களாக நில்லுங்கள் 

"முஹம்மது ஜான்" தமிழாக்கத்தில் "அஸர்" என்ற வார்த்தை வருவதில்லை, ஆனால், சௌதி தமிழாக்கத்தில் வருகின்றதே என்றுச் சொல்லி, சௌதி குர்‍ஆன் தான் சரியானது என்ற கருத்து தவறானதாகும்.

இவைகள் தமிழாக்கங்கள் தான், அதாவது மொழியாக்கம் செய்யும் நபர் எதை நம்புகிறாரோ, அதை அப்படியே மொழியாக்கம் செய்கின்றார். சில பிரச்சனைக்குரிய வசனங்களில் மூல அரபியில் உள்ளது  போன்று அவர் செய்வதில்லை. 

இந்த வசனத்தை அரபியிலும், அதன் ஒலியாக்கத்திலும்(Transliteration) தருகிறேன். அரபியில் "அஸர்" என்ற வார்த்தை வருகின்றதா பாருங்கள்?

சௌதி தமிழாக்க விளக்கம்: சௌதி தமிழாக்கம் செய்தவர்களுக்கு மேற்கண்ட ஹதீஸ் பற்றித் தெரியும். நடுத்தொழுகை என்பது மதியம் செய்யும் லுஹர் என்ற தொழுகையா? அல்லது அஸர் என்றுச் சொல்கின்ற தொழுகையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, அவர்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து எழுதிவிட்டார்கள்.

முஸ்லிம்களின் ஐந்து வேளை தொழுகையை கணக்கில் கொண்டால்

1) பஜ்ர் தொழுகை   (அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பான தொழுகை)
2) லுஹர் தொழுகை (நடுப்பகலின் தொழுகை சூரியன் நேராக இருக்கும் 12 – 1  PM வரை)
3) அஸர்  தொழுகை (சூரியன் மறைவதற்கு முன்பு செய்வது – 3:30 to 4:00 PM)
4) மக்ரிப் தொழுகை (சூரியன் அஸ்தமித்த பிறகு – 6:30 – 7 PM)
5) இஷா தொழுகை (இரவுத்தொழுகை 8:00  மணிக்கு மேல்)

சில முஸ்லிம் அறிஞர்களின் படி, நடுத்தொழுகையும், அஸர் தொழுகையும் ஒன்று தான், இதைத் தான் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான் என்றுச் சொல்லி, சௌதி மொழியாக்கத்தில் செய்தது போன்று "குறிப்பாக அஸர் தொழுகையாகிய நடுத் தொழுகையையும் " என்று எழுதியுள்ளார்கள். இது உண்மையென்றால் ஏன் ஆயிஷா அவர்களும் ஹஃப்ஸா அவர்களும் நடுத்தொழுகையை தனியாக கருதி, அஸர் தொழுகையை தனியாக சேர்க்கும்படி கூறினார்கள்?

மேலும், நடுத்தொழுகையும், அஸர் தொழுகையும் வெவ்வேறானவை என்பதையும், இவ்வசனத்தில் நடுத்தொழுகை என்பது, நடுப்பகலில் செய்யப்படும் லுஹர் தொழுகை என்பதை அறிந்ததால் தான் ஆயிஷா அவர்களும், ஹஃப்ஸா அவர்களும், முஹம்மதுவிடமிருந்து கேட்டு இருந்ததால், "குர்‍ஆனின் வசனத்தை மாற்றி எழுதி வைத்துக்கொண்டார்கள்".

இதன் படி பார்த்தால், அரபியில் மூல வசனத்தில் அந்த பிழை அப்படியே இன்றும் குர்‍ஆனில் உள்ளது. தமிழாக்கம் செய்தவர்கள், பிழையுள்ள குர்‍ஆனை நாம் வாசிக்கிறோம் என்பதை ஜீரணித்துக் கொள்ளமுடியாமல், குறைந்தபட்சம் தமிழாக்கத்திலாவது, அந்த தவறை மறைக்கலாமே என்பதற்காக, இப்படி "அஸர்" என்ற வார்த்தைதையும் சேர்த்து எழுதுகின்றார்கள்.

மேலும் குர்‍ஆனில் எந்த ஒரு வசனத்திலும் மிகவும் தெளிவாக "முஸ்லிம்கள் ஐந்து வேளை" தொழவேண்டும் என்று சொல்லவில்லை. இந்த இடத்திலும், சௌதி மொழியாக்கம் செய்தவர்கள், "அரபி மூலத்தில் இல்லாமல் இருந்தாலும், சொந்தமாக ஐந்து வேளை தொழுகை" என்ற வார்த்தையையும் சேர்த்து மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும்.

இவைகளெல்லாம் எதைக் காட்டுகின்றது? குர்‍ஆன் பிழையுள்ளதென்றும், மூல வசனங்கள் முழுவதுமாக இன்று குர்‍ஆனில் இல்லை என்பதைத் தானே!

கேள்வி 533: குர்‍ஆன் 1:4ல் வரும் "மாலிகி" என்ற வார்த்தைப் பற்றி பல முரண்பட்ட விவரங்கள் கேள்விப்படுகிறோமே!  இவ்வார்த்தையை அல்லாஹ் பல (‌20) வகைகளில் இறக்கினானா?

பதில்  533:

குர்‍ஆனின் முதல் அத்தியாயம் நான்காம் வசனம், கீழ்கண்டவாறு உள்ளது:

1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).(முஹம்மது ஜான் தமிழாக்கம்)

1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி (சவூதி தமிழாக்கம்)

ஹ‌ஃப்ஸ் குர்‍ஆன் அரபி மூலத்தில்: மாலிகி யௌமித்தீன் (مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ)

இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் பயன்படுத்துவது, ஹஃப்ஸ் குர்‍ஆன் ஆகும். இது இமாம் ஹஃப்ஸ் என்பவர் மூலமாக கொடுக்கப்பட்ட குர்‍ஆன் (கிராத்) ஆகும். இதே போன்று, முஹம்மதுவின் காலம் தொடங்கி பல இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மூலமாக குர்‍ஆன் ஓதப்பட்டு, நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது. 

ஆக, இன்று நம்மிடம் 20க்கும் அதிகமான அரபி மூல கு‍ர்‍ஆன்கள் உள்ளன. அவைகளை குர்‍ஆன் கிராத்துக்கள் என்பார்கள். இவைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லை, ஒரே வார்த்தையை வெவ்வேறு விதமான வார்த்தைகளைக் கொண்டு ஓதியுள்ளார்கள் மற்றும் எழுதியுள்ளார்கள். இந்த அரபி மூலங்கள் அனைத்தும் நம்மிடம் உள்ளன.

குர்‍ஆன் ஏழுவட்டார மொழி வழக்கில் இறங்கியது என்று முஹம்மது கூறியுள்ளார், அதனை இஸ்லாமிய உலகம் அங்கீகரிக்கிறது. இந்த ஏழு வட்டார குர்‍ஆன்கள் தான் இன்னும் பெருகி இப்போது 20க்கும் அதிகமான குர்‍ஆன்களாக மாறியுள்ளது. இக்கட்டுரையின் கடைசியில் ஏழுவட்டார குர்‍ஆன் பற்றிய முந்தைய  கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுத்துள்ளேன்.

இக்கட்டுரையின் ஆய்வு  குர்‍ஆன் 1:4ம் வசனத்தில் வரும் ஒரு வார்த்தையைப் பற்றியதாகும்.  கீழ்கண்ட அட்டவணையை பார்க்கவும். குர்‍ஆன் 1:4ல் வரும் வசனத்தை அக்கால இஸ்லாமிய அறிஞர்கள் எப்படி மாற்றி உச்சரித்து இருந்துள்ளார்கள் என்பதை அறியமுடியும்.

Source: corpuscoranicum.de/lesarten/index/sure/1/vers/4

மேற்கண்ட அட்டவணையின் வண்ணங்களை கணக்கில் கொள்ளவேண்டாம், கிராத்துக்களை வேறுபடுத்திக் காட்ட பல வண்ணங்களை கொடுத்துள்ளேன், அவ்வளவு தான்.

இந்த அட்டவணையில் உள்ளவற்றை புரிந்துக்கொள்ள சில விளக்கங்களை இப்போது பார்ப்போம்:

1) மாலிகி (māliki):

மாலிகி என்ற வார்த்தையை பயன்படுத்தும் கிராத்துக்கள் (குர்‍ஆன்கள்) மற்றும் அறிஞர்கள் பற்றிய விவரம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் குர்‍ஆன், 1924ம் ஆண்டு எகிப்து வெளியிட்ட 'ஹஃப்ஸ் கிராத்தில்' உள்ள குர்‍ஆன் ஆகும், இது தான் முதன் முதலில் பிரிண்ட் (அச்சு) செய்யப்பட்ட குர்‍ஆன் ஆகும்.  இதை "Print edition of the Quran" என்றும்  ஆஸிம் வழியாக, ஹஃப்ஸ் இமாம் மூலமாக  வந்த குர்‍ஆன் என்றும் கூறுவார்கள். இதில் மாலிகி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அடுத்ததாக, இப்னு முஜாஹித் என்ற இஸ்லாமிய அறிஞர், தம்முடைய " Kitāb al-sabʿa fī l-qirāʾāt" என்ற புத்தகத்தில் பல கிராத்துக்கள் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார். இவர் குர்‍ஆனின் கிராத்துக்களில் ஆய்வு செய்த சிறந்த அறிஞர் ஆவார்.  இவர் தம் புத்தகத்தில், "முஹம்மதுவும், ஆஸிம் என்பவரும் (இவர் தான் ஹஃப்ஸ் இமாமின் ஆசிரியர்)", மேலும் அல் கிசாய் என்ற கிராத்திலும், இதே வார்த்தை அதாவது 'மாலிகி' என்பதை பயன்படுத்தியுள்ளார்கள் என்று கூறுகின்றார். (இவரைப் பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்கவும்).

அடுத்ததாக அபூ அமர் அத்தானி என்ற இஸ்லாமிய அறிஞர் பற்றியது, இவரும் குர்‍ஆனின் கிராத்துக்கள் மற்றும் ஹதீஸ்கள் பற்றிய ஆய்வுகள் செய்தவர் ஆவார். இவர் தமது " Kitāb at-Taisīr fī 'l-qirāʾāt as-sabʿ" என்ற புத்தகத்தில்,  ஆஸிமும், அல் கிசாயும் "மாலிகி" என்ற வார்த்தையை தங்கள் கிராத்துக்களில் பயன்படுத்தினார்கள் என்று கூறுகின்றார்.

மேற்கண்ட அட்டவணையில் "நஃபி(Nafi)" என்று இருப்பது தான் "வர்ஷ்" குர்‍ஆன் ஆகும்.

இப்போது உங்களுக்கு மேற்கண்ட அட்டவணையை எப்படி படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று தெரிகின்றதா? இதே போன்று தான் 2 லிருந்து 20 வரை, பலர் பல வகையில் குர்‍ஆனை ஓதியுள்ளார்கள், முக்கியமாக குர்‍ஆன் 1:4ம் வசனத்தில் வரும் ஒரு வார்த்தையை 20க்கும் அதிகமான வகையில் ஓதியுள்ளார்கள்.

 1. māliki - மாலிகி
 2. maliki - மலிகி
 3. malki - மல்கி
 4. milki - மில்கி
 5. miliki  - மிலிகி
 6. mālika - மாலிக‌
 7. malaka - மலக‌
 8. malika - மலிக‌
 9. mālik - மாலிக்
 10. malka  - மல்கா
 11. malkī - மல்கீ
 12. milka - மில்க‌
 13. maliku - மலிகு
 14. malikan - மலிகன்
 15. mālikun - மாலிகுன்
 16. māliku - மாலிகு
 17. malīki - மலீகி
 18. mēliki - மேலிகி
 19. mæliki - மெயிலிகி
 20. mallāki - மல்லாகி

1924ம் ஆண்டு ஹஃப்ஸ் கிராத்தில் உள்ள குர்‍ஆனை பிரிண்ட் எடுத்ததால், இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் "மாலிகி" என்று குர்‍ஆன் 1:4ஐ வாசிக்கிறார்கள். ஒரு வேளை, வர்ஷ் கிராத் குர்‍ஆனை பிரிண்ட் செய்து இருந்திருந்தால், முஸ்லிம்கள் "மலிகி" என்று இன்று வாசித்து இருந்திருப்பார்கள்.

கார்பஸ் கொரோனிகம் தளம்:

இந்த தளம் குர்‍ஆனின் ஆரம்பகால கையெழுத்துப் பிரதிகள், சுருள்கள் பற்றிய ஆய்வு, குர்‍ஆன் கிராத்துக்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்கிறது. குர்‍ஆனின் பழமையான பிரதிகளை படமெடுத்து வெளியிடுகிறது.  குர்‍ஆனின் ஆய்வுகளை செய்ய விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தளமாகும். இந்த தளத்திருந்து தான் தற்போது படித்துக் கொண்டு இருக்கும் கட்டுரையை நான் தொகுத்தேன்.

இந்த தளம் தன்னைப் பற்றிச் சொல்லும் விவரங்களை இங்கு படிக்கலாம்.

corpuscoranicum.de/about/index

About the project: Corpus Coranicum – Textual documentation and historically critical commentary on the Qur’an

The project's goals: The project offers systematic access to early Qur'anic manuscripts with images and transliterated text. In parallel, a catalogue of variant readings included in the works of the Islamic scholarly tradition is produced. Based on textual history, the project creates a chronological commentary using methods of literary studies and referring to relevant texts from Antiquity and Late Antiquity. These source texts are accessible in the database 'Texts from the environment of the Qur'an' (TEQ). The development of the first Muslim community is reconstructed for the first time as the interaction between the Prophet and the first addressees in Mecca and Medina.

ஏழு வட்டார  மொழி வழக்க குர்‍ஆன்கள்  பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

 1. 7 வட்டார மொழிகளில் குர்ஆனா? இருக்கின்றது, இருக்கிறது, இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு & கீது
 2. குர்ஆனைப் போன்று ஏன் அல்லாஹ் முந்தைய வேதங்களை ஏழு வட்டாரமொழிகளில் (கிராத்துக்களில்) இறக்கவில்லை?
 3. முஹம்மது அல்லாஹ்விடமிருந்து பெற்ற 7 வட்டார மொழி குர்ஆன்களை ஏன் கலிஃபா உஸ்மான் எரித்தார்கள்?
 4. ஏழு வட்டார மொழிவழக்கில் குர்ஆன் - நடைமுறை சிக்கல்களும் தீர்வுகளும்
 5. 20+ குர்ஆன்கள் உண்டா? குர்ஆன் கிராத்துக்களை எங்கே வாங்கலாம்?

உலகம் முழுவதும் உள்ள குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே விதமாக எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை, வசனத்துக்கு வசனம் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று முஸ்லிம்கள் அறிஞர்கள் இன்று வரை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இக்கூற்றுக்கள் பொய்யானவை என்பதற்கு, இன்று நாம் பார்த்த ஒரே ஒரு வார்த்தையின் ஆய்வு ஒர் சிறந்த‌ சான்றாகும்.  

அல்லாஹ் முஹம்மதுவிற்கு குர்‍ஆனை இறக்கும் போது, எப்படி இறக்கினான்? முக்கியமாக 1:4ம் வசனத்தில் வரும் வார்த்தை எப்படி இருந்தது? மேற்கண்ட 20 வகைகளில் அவன் இறக்கினான் என்றுச் சொல்வது, முட்டாள்தனமான கூற்றாகும். அல்லாஹ் அதனை ஒருவகையில் தான் இறக்கியிருப்பான், ஆனால் காலப்போக்கில் அவைகள் 20க்கும் அதிகமான வகைகளாக‌ மாறியது. அல்லாஹ் குர்‍ஆனை பாதுகாத்தானா? இந்த கேள்வி இனி தேவையற்றது. ஏனென்றால், இதுவரை படித்த நீங்கள் புரிந்துக்கொண்டு இருப்பீர்கள்.

முஸ்லிம்களில் மனதில் தன் வேதத்தை பாதுகாக்க அல்லாஹ் எடுத்த முடிவு,  படுதோல்வியில் முடிந்தது. ஓசையிலேயே நாம் குர்‍ஆனை காப்போம் என்று அல்லாஹ் கருதியது முதல் குற்றம், குர்‍ஆனை எழுதி வைக்காமல் இருந்தது இரண்டாவது குற்றம். இதன் விளைவு? ஒரு வசனத்தின் ஒரு வார்த்தையை ஆய்வு செய்தாலே தலை சுற்றுகிறதே, குர்‍ஆனின் 6236 வசனங்களையும், குர்‍ஆன் கிராத்துக்களையும் ஆய்வு செய்தால், குர்‍ஆன் தாக்கு பிடிக்குமா? உண்மையை அறிய விரும்புகிறவர்கள் ஆய்வு செய்வார்களா?

கேள்வி 534: எல்லா நாடுகளுக்கும், எல்லா மக்கள் சமுதாயங்களுக்கும் அல்லாஹ் நபிகளை/தீர்க்கதரிசிகளை அனுப்பியதாக கூறப்படுகின்றதே! இது உண்மையா?

பதில்  534:  குர்‍ஆனின் இக்கூற்றில் பல பிரச்சனைகள் உள்ளன.

எல்லா நாடுகளிலிருந்தும் நபிகளா? அல்லது ஆபிரகாமின் சந்ததியிலிருந்து மட்டும் நபிகளா? என்ற கேள்விக்கு முதலாவது பதில் காணவேண்டும்.

குர்-ஆன் 29:27ல் கீழ்கண்ட விதமாக படிக்கிறோம்:

மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார். (குர்-ஆன் 29:27)*  

*அனைத்து மேற்கோள்களும் முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

மேற்கண்ட வசனத்தில் வரும் “அவருடைய சந்ததியிலே” என்ற சொற்றொடர் பற்றி பலர் பலவிதமாக கருத்து கூறுகின்றனர்:

 1. கடைசியாக பெயர் குறிப்பிடப்பட்ட ”யாக்கோபு உடைய சந்ததியிலிருந்து நபித்துவமும், வேதமும் வரும்” என்று பொருள் கொள்ளவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். 
 2. வேறு சிலர் “ஆபிரகாமின் சந்ததி அனைவரிலிருந்தும் நபித்துவமும், வேதங்களும் வரும்” என்று பொருள் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர்.  

நாம் இந்த இரண்டு விளக்கங்களில் எதனை அங்கீகரித்தாலும், “நபித்துவம்” என்பது ஆபிரகாமின் சந்ததியில் உள்ளவர்களுக்குத் தான் என்று ஏற்றுக் கொள்ளவேண்டும். 

குர்-ஆன் 29:27ன் படி, எல்லா நபிமார்களும் (தீர்க்கதரிசிகளும்) ஆபிரகாமின் சந்ததியிலிருந்து தான் வருவார்கள் என்றால், அதே குர்-ஆன் 16:36ம் வசனம் சொல்வது எப்படி சாத்தியமாகும்? அதாவது இந்த வசனத்தின் படி எல்லா நாட்டு மக்களுக்கும் அவர்களிலிருந்தே நபியை அல்லாஹ் அனுப்பியுள்ளார் என்பது எப்படி சாத்தியமாகும்?

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; . . . . .. (குர்-ஆன் 16:36)

இவ்விரு வசனங்களை ஒன்று சேர்த்து பார்க்கும் போது, எல்லா நாடுகளுக்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும் ஆபிரகாமின் சந்ததியிலிருந்து வந்தவர்கள் தான் என்று யாராவது சொல்லமுடியுமா?

இதில் எது சரியானது? குர்-ஆன் 29:27ன் படி, நபித்துவம் ஆபிரகாமின் சந்ததிக்கு மட்டும் கொடுக்கப்பட்டதா? அல்லது குர்-ஆன் 16:36ன் படி, நபித்துவம் என்பது எல்லா நாடுகளுக்கும் / சமூகத்தினருக்கும் கொடுக்கப்பட்ட ஒன்றா?

அடுத்தபடியாக, ஏன் இஸ்ரேல் மற்றும் அதைச் சுற்றியுள்ள நபிகள் பற்றி மட்டுமே குர்‍ஆன் பேசுகின்றது? அரேபியாவிற்கு தூரமாக உள்ள நாடுகளுக்கு அனுப்பிய நபிகள் பற்றிய சில விவரங்களையாவது அல்லாஹ் சொல்லியிருக்கலாம் அல்லவா? இந்தியாவிற்கு வந்த நபிகள் யார்? சைனாவிற்கு வந்த நபிகள் யார்?

கேள்வி 535: குர்-ஆன் முரண்பாடு - யோனா வெட்டவெளியில் எறியப்பட்டாரா(37:145)? (அ) எறியப்படவில்லையா(68:49)?

பதில்  535:

ஸூரா 37:145 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

37:145 அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். (பிஜே மொழியாக்கம்)

இவ்வசனத்தை வேறு சில தமிழாக்கங்களில் காண்போம்.

37:145. ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம். டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

37:145. (அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார். அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்

37:145 இறுதியில் அவர் பெரிதும் நோயுற்றிருந்த நிலையில் ஒரு பாலைவெளியில் அவரை நாம் எறிந்தோம். இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்

மேற்கண்ட குர்-ஆன் வசனத்திற்கு முரண்பட்டு, இன்னொரு இடத்தில் அதே குர்-ஆன் வேறுவிதமாக சொல்கிறது. 

குர்-ஆன் 68:49

68:49. அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். (பிஜே மொழியாக்கம்)

இந்த வசனத்தை இதர தமிழாக்கங்களிலும் காண்போம்.

68:49. அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

68:49. அவருடைய இறைவனின் அருள் அவரை அடையா திருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார். அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்

68:49. அவருடைய அதிபதியின் கருணை அவருக்குக் கிடைத் திராவிட்டால், அவர் இழிவுக்கு ஆளாகி பொட்டல்வெளியில் எறியப்பட்டிருப்பார்! இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்

மேற்கண்ட தமிழாக்கங்களின் நடை வேறுபட்டு இருந்தாலும், குர்-ஆன் 37:145ம் வசனம் “யோனா  வெட்ட வெளியில் எறியப்பட்டார்” என்றுச் சொல்கிறது என்பதை அனைவரும்  ஒருமித்து தமிழாக்கம் செய்துள்ளார்கள். இது ஒருபுறமிருக்க, குர்-ஆனின் 68:49ம் வசனம் ’யோனா வெட்டவெளியில் எறியப்படவில்லை’ என்றுச் சொல்கிறது என்பதையும் இவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.  அதாவது, அல்லாஹ்வின் அருட்கொடை/கருணை அவருக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், அவர் வெட்டவெளியில் எறியப்பட்டு இருந்திருப்பார் என்று ஸூரா 68:49 சொல்கிறது. 

எந்த வசனம் சொல்வது உண்மை? ஸூரா 37:145ன் படி யோவா வெட்டவெளியில் எறியப்பட்டாரா? அல்லது ஸூரா 68:49ன் படி யோனா வெட்டவெளியில் எறியப்படவில்லையா?  

இந்த முரண்பாட்டிற்கு முஸ்லிம்களின் பதில்:

இந்த முரண்பாட்டிற்கு இரண்டு தளங்களில் சில பதில்களை படித்தேன், அவைகளை இங்கு தருகிறேன்:

 1. www.understanding-islam.com/was-jonah-pbuh-cast-on-the-desert-shore-or-not/ 
 2. www.call-to-monotheism.com/was_jonah_cast_on_the_desert_shore___by_ansar_al__adl 

நம் தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் மேற்கண்ட கட்டுரைகளை படிக்கவேண்டும், மேலும் தங்கள் தமிழாக்கங்களில் செய்துள்ள பிழைகளை திருத்திக்கொள்ளவேண்டும். அதாவது ஸூரா 68:49 பற்றிய ஆய்வை மறுபரிசீலனை செய்யவேண்டும், மேலும் புதிய மொழியாக்கத்தை கொடுக்கவேண்டும், வசனத்தை சிறிது மாற்றி மொழியாக்கம் செய்யவேண்டும்.

குர்-ஆன் ஒரு விரிவான விளக்கமான வேதம் என்று கீழ்கண்ட வசனம் சொல்கிறது. ஆனால், இக்கட்டுரையில் நாம் கண்டதுபோல, யோவாவைப் பற்றிய விஷயத்தில் முரண்பட்ட கருத்தை குர்-ஆன் சொல்கிறது.

குர்-ஆன் 6:114. (நபியே! கூறும்:) “அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். எனவே நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விடாதீர். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

குர்-ஆனின் இந்த குழப்பமான முரண்பட்ட விவரங்கள் நம் தமிழாக்க அறிஞர்களுக்கும் புரியவில்லை. எனவே அவர்கள் தமிழாக்கம் செய்யும் போது, ஒரு இடத்தில் யோனா வெட்டவெளியில் எறியப்பட்டார் என்றும், இன்னொரு இடத்தில் எறியப்படவில்லையென்றும் மொழியாக்கம் செய்துள்ளார்கள். அவர்கள் செய்து சரியானது தான், ஆனால் முரண்பாடு குர்-ஆனில் அல்லவா உள்ளது!

கீழ்கண்ட வசனத்தை கவனியுங்கள். ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்து காட்டுவதாக குர்-ஆன் பெருமை அடித்துக்கொள்கிறது, ஆனால், யோனாவின் விஷயத்தில் முரண்பட்ட விவரத்தைச் சொல்லியுள்ளது, அது மட்டுமல்ல, முந்தைய வேதங்களில் தெளிவாக்கப்பட்டுவிட்ட விவரங்களை சொல்லும் போதும் குர்-ஆன் தடுமாறுகிறது. 

குர்-ஆன் 12:111. (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது. (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

அடுத்த வசனத்தைப் பாருங்கள் - குர்-ஆன் 16:89

குர்-ஆன் 16:89. இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். 

ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்கும்படியாக குர்-ஆன் இறக்கப்பட்டது என்று ஸூரா 16:89 சொல்கிறது, ஆனால், நம் தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் அனைவருக்கும் தெளிவை குர்-ஆன் கொடுக்கவில்லை, எனவே, அவர்கள் முரண்பட்ட விவரங்களை அப்படியே தமிழாக்கம் செய்துள்ளார்கள். இதன் மூலம் அறிவது என்ன? குர்-ஆன் தன்னைப்பற்றிச் சொல்வது ஒன்று, ஆனால் நிதர்சனம் மற்றொன்று.  குர்-ஆன் என்பது பாமர மனிதனுக்கும் புரியும் வகையில் உள்ளது என்று பிஜே அவர்கள்  சொல்வார்கள். ஆனால் உண்மையென்னவென்றால், இவருக்கே புரியாமல் அல்லவா இவர் மொழியாக்கம் செய்துள்ளார். குழப்பம் தரும்படி குர்-ஆனின் வசனங்கள் உள்ளன என்பதற்கு இந்த யோனா பற்றிய வசனங்கள் தான் சாட்சி. அரபியை கறைத்துகுடித்தவர்களுக்கே தடுமாற்றம் என்றால், அரபியின் வாசனையையும் முகராதவர்களின் கதி என்னவென்று சொல்லத்தேவையில்லை.

கேள்வி 536: குர்‍ஆன்  அத்தியாயங்களின் பெயர்களை வகைப்படுத்தமுடியுமா?

பதில்  536: இந்த கேள்வியின் மூலமாக நீங்கள் என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.  இருந்தபோதிலும், என்னால் முடிந்த அளவிற்கு குர்‍ஆனின் அத்தியாயங்களின் பெயர்களை வகைப்படுத்தி ஒரு பட்டியலைத் தருகிறேன். குர்‍ஆனை இன்னும் நன்றாக புரிந்துக்கொள்வதற்கு இந்த பட்டியல் உதவலாம்.

மக்கீ & மதனீ (மக்கிய்யா & மதனிய்யா):

இது முதலாவது வகைப்படுத்தல். குர்‍ஆன் அத்தியாயங்கள் இரண்டு வகையாக உள்ளன. மக்காவில் இறக்கப்பட்ட அத்தியாயங்கள் “மக்கீ” என்றும், மதினாவில் இறக்கப்பட்ட அத்தியாயங்களை "மதனீ" என்றும் அழைக்கப்படுகின்றன. முஹம்மது ஹிஜ்ரத் செய்வதற்கு முன்பு இறக்கப்பட்ட வசனங்கள்:மக்கீ,  மற்றும் ஹிஜ்ரத் செய்த பிறகு  இறக்கப்பட்ட வசனங்கள்:மதனீ.

உங்களிடம் ஒரு குர்‍ஆன் இருந்தாலோ, அல்லது இந்த இணைய தளத்திலோ (http://www.tamililquran.com/suraindex.asp) நீங்கள் அத்தியாயங்களின் பட்டியலில், மக்கீ, மதனீ என்று ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் நேராக  எழுதியிருப்பதை காணமுடியும்.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், மக்காவில் இறக்கப்பட்ட அத்தியாயங்கள் மொத்தம் 87, வசனங்கள் மொத்தம் 4621 ஆகும், மொத்த குர்‍ஆனில் இதன் சதவிகிதம் 74.1% ஆகும்.  இதே போன்று மதினாவில் இறக்கப்பட்ட மொத்த அத்தியாயங்கள் 27 ஆகும், மொத்த வசனங்கள் 1615 மற்றும் வசனங்களின் சதவிகிதம் 25.9% ஆகும். இந்த பட்டியல் முஹம்மதுஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும். 

சில முஸ்லிம் அறிஞர்கள் மக்கீ அத்தியாயங்கள் 86 என்றும், மதனி அத்தியாயங்கள் 28 என்றும் கூறுகிறார்கள்.

இரண்டாவதாக, அத்தியாயங்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு, கீழ்கண்டவிதமாக பிரிக்கலாம்.

குர்‍ஆன் அத்தியாயங்கள் அரபியிலும் தமிழிலும் குர்‍ஆன்களில் எழுதியிருப்பார்கள்.  மொத்தம் 114 அத்தியாயங்களை நான் கீழ்கண்ட விதமாக பிரித்துள்ளேன். அத்தியாயங்களின் பெயர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் இந்த பிரிவுகள் உதவும் என்று நம்புகிறேன்.

 • 1) மனிதர்கள்/நபிகளின் பெயர்கள்
 • 2) எழுத்துக்கள் (சில அரபி எழுத்துக்களே அத்தியாயங்களாக உள்ளன‌)
 • 3) இறைவன்/ஜின்
 • 4) காலம்/நேரம்
 • 5) செயல்கள்/வினைச்சொற்கள்
 • 6) உயிரற்றவைகள்/பொருட்கள்/பெயர்கள்
 • 7) மிருகங்கள்
 • 8) மற்றவைகள்

கேள்வி 537: குர்‍ஆன் அத்தியாயங்களை படிக்கும் போதே, அவைகள் மக்கீயா அல்லது மதனீயா என்று கண்பிடிக்க குறுக்குவழிகள் உண்டா?

பதில்  537:  குர்‍ஆனிடம் வந்தாலும் குறுக்குவழியை நாம் விடுவதில்லை.  என்ன செய்வது, சில விஷயங்கள் புரியவில்லையென்றால் குறுக்குவழியின் மூலமாவது அவைகளை புரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதில் தவறில்லை. 

சில இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு சில வழிகளை கொடுத்துள்ளார்கள். அவைகளில் சிலவற்றை இங்கு தருகிறேன்.

மக்காவில் இறக்கப்பட்ட அத்தியாயங்களை (மக்கீ) கண்டுபிடிப்பது:

1) முந்தைய நபிமார்கள் பற்றியும், அவர்களின் மக்கள் பற்றியும் பேசும் வசனங்கள் கொண்ட வசனங்கள் மக்கீயாகவே இருக்கும். ஒரே ஒரு விதி விளக்கு “அல் பகரா” அத்தியாயம் 2 ஆகும்.

2) "ஓ மக்களே (ياايّهاالناس (“O’ people”))" என்று அல்லாஹ் அழைக்கும் வசனங்கள் கொண்ட‌ அத்தியாயங்கள் மக்கீயாக இருக்கும். விதிவிளக்கு:அத்தியாயம் அல் ஹஜ் (22) ஆகும்.

3) மக்கீ அத்தியாயங்கள் பெரும்பான்மையாக மிகவும் சிறியவைகளாக  குறைந்த வசனங்கள்  கொண்டவைகளாக‌ இருக்கும்.

4) ஆதம் மற்றும் இப்லீஷ் பற்றிய நிகழ்ச்சியுள்ள அனைத்து அத்தியாயங்களும் மக்கீயாகும், விதிவிளக்கு: அல் பகரா (2).

மதினாவில் இறக்கப்பட்ட அத்தியாயங்களை (மதனீ) கண்டுபிடிப்பது:

1) எந்த அத்தியாயங்களில் ஜிஹாத் பற்றி பேசி, அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதோ, அது மதினாவில் இறக்கப்பட்ட அத்தியாயமாக இருக்கும்.

2) "ஓ நம்பிக்கையுள்ள மக்களே (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا  - “O people of faith”)" என்று அல்லாஹ் அழைக்கும் வசனங்கள் கொண்ட‌ அத்தியாயங்கள் மதனீயாக இருக்கும். 

3) பெரும்பான்மையான அத்தியாயங்கள் அதிக வசனங்கள் கொண்ட நீண்ட அத்தியாயங்களாக இருக்கும்.

4) பெரும்பான்மையாக தொழுகை (ஸலாஹ்), ஜகாத், குடும்ப சட்டங்கள் போன்றவைகள் உள்ள அத்தியாயங்களாக இருக்கும்.

இந்த மேற்கண்ட விவரங்கள் அனைத்தையும் நான் குர்‍ஆனில் சரி பார்க்கவில்லை, முஸ்லிம் அறிஞர்கள் சொன்னதையே இங்கு பதித்துள்ளேன்.

ஒரு வசனம் மக்காவில், மதினாவில் இறங்கியதா என்பதை அறிவது, இஸ்லாமிய நிகழ்ச்சிகளை சரியாக புரிந்துக்கொள்வதற்கு அதிகமாக உதவும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேள்வி 538:  மக்கீ மதனீ அத்தியாயங்கள் உண்மையாகவே மக்காவிலும் மதினாவிலும் இறக்கப்பட்டவைகள் தானா? இதற்கு சான்றுகள் உண்டா?

பதில்  538: இந்த பதிலை படிப்பதற்கு முன்பு, முந்தைய இரண்டு கேள்வி பதில்களையும் படித்துவிடுங்கள்.

மக்காவில் 87 அத்தியாயங்கள் இறக்கப்பட்டன என்றும், மதினாவில் 27 அத்தியாயங்கள் இறக்கப்பட்டன என்று நாம் பார்த்தோமில்லையா? இவைகளை நான் "முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து" எடுத்தவைகள் ஆகும். இன்று நாம் எந்த குர்‍ஆனை எடுத்துக்கொண்டாலும், ஸூராக்களின் அட்டவணையோடு அவர்கள் மக்கீ என்றும் மதனீ என்றும் எழுதுகிறார்கள்.  உண்மையில், இந்த பட்டியல் முஸ்லிம் அறிஞர்களுக்கிடையே மாறுபடுகின்றது. 

மேலும், இந்த பிரிவினையை ஒரு குறிப்பிட்ட ஆய்களுக்குப் பிறகு முஸ்லிம்கள் அறிஞர்கள் சொல்லியுள்ளார்களே தவிர, இது 100% சரியானதல்ல. யாருக்குமே இந்த அத்தியாயம் மக்காவில் (அ) மதினாவில் இறக்கப்பட்டது தான், இதில் உள்ள அனைத்து வசனங்களும் மக்காவில் (அ) மதினாவில் இறக்கப்பட்டவைகள் தான் என்று எல்லா அத்தியாயங்களுக்கும் சொல்லமுடியாது என்பது தான் உண்மை.

இதைப் பற்றி ஒரு முஸ்லிம் அறிஞர் கீழ்கண்டவாறு எழுதுகின்றார்:

உதாரணமாக, திருக்குர்ஆனில் கடைசி இரண்டு அத்தியாயங்களான 113, 114 ஆகிய அத்தியாயங்கள் மக்காவில் அருளப்பட்டவை என்று ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே அத்தியாயங்கள் பற்றி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குர்ஆன் தமிழாக்கம் பிரதிகளில் இவ்விரு அத்தியாயங்களும் மதீனாவில் அருளப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல அத்தியாயங்களில் இது போன்ற கருத்து வேறுபாடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே அத்தியாயங்களின் தலைப்பில் "இவை மக்காவில் அருளப்பட்டவை'' அல்லது "மதீனாவில் அருளப்பட்டவை'' என்று குறிப்பிடுவதை நாம் தவிர்த்துள்ளோம்.

பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகும், முஸ்லிம் அறிஞர்களுக்கே "மக்கீ மதனீ "நாடியை சரியாக பிடிக்கமுடியாதபோது மற்றவர்களால் எப்படி முடியும்? சில மக்கீ அத்தியாயங்களில், ஒரு சில மதினா வசனங்களும் காணப்படும், அதே போன்று சில மதினா அத்தியாயங்களில், மக்கீ வசனங்களும் காணப்படுகின்றது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், மக்கீ மதனீ அத்தியாயபிரிவுகள் 100% சரியானவைகள் அல்ல.

கேள்வி 539:  மக்காவிலும், மதினாவிலும் இறக்கப்பட்டதாக  ஏதாவது அத்தியாயம் உண்டா?

பதில்  539:  குர்‍ஆனில் இன்று நாம் காணும் முதலாவது அத்தியாயமான "அல் பாத்திஹா" மக்காவிலும், மதினாவிலும் இறக்கப்பட்டதாக சில முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.  இதனை அனைவரும்  ஏற்றுக்கொள்வதில்லை. ஒரே அத்தியாயத்தை இரண்டு முறை இறக்குவது தேவையற்ற ஒன்றாக இருக்கிறது, முதலாவதாக இறக்கப்பட்டதையே படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லலாம் அல்லவா என்று எதிர்மறை கருத்து உண்டு.

கேள்வி 540:  குர்‍ஆனின் 12 அத்தியாயங்கள் பற்றி குழப்பம் உள்ளதென்றும், அவைகளை சிலர் மக்கீ என்றும், வேறு சிலர் மதனீ என்றும் கூறுகிறார்கள் என்கிறார்களே, அவைகள் என்னென்ன அத்தியாயங்கள்?

பதில்  540: முஸ்லிம் அறிஞர்கள் மக்கீ மதனீ பற்றி ஒருமித்த கருத்தை கொண்டிருக்கவில்லை. 

ஒரு இஸ்லாமிய தளம் கீழ்கண்ட விதமாக கூறுகின்றது:

மதனிய்யா சூராக்கள் மொத்தம் இருபது, அவை:

(சூராவின் எண் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)

 • 1) அல்பக்கரா (2)
 • 2) ஆலு இம்ரான் (3)
 • 3) அந்நிஸா (4)
 • 4) அல்மாஇதா (5)
 • 5) அல் அன்ஃபால் (8)
 • 6) அத்தவ்பா (9)
 • 7) அந்நூர் (24)
 • 8) அல் அஹ்ஸாப் (33)
 • 9) முஹம்மத் (47)
 • 10) அல் ஃபத்ஹ் (48)
 • 11) அல் ஹுஜ்ராத் (49)
 • 12) அல் ஹதீத் (57)
 • 13) அல் முஜாதலா (58)
 • 14) அல் ஹஷ்ர் (59)
 • 15) அல் மும்தஹினா (60)
 • 16) அல் ஜும்ஆ (62)
 • 17) அல் முனாஃபிகூன் (63)
 • 18) அத்தலாக் (65)
 • 19) அத்தஹ்ரீம் (66)
 • 20) அந்நஸ்ர் (110)

மதனிய்யா என்று சிலராலும் மக்கிய்யா என்று வேறு சிலராலும் சொல்லப்படும் சூராக்கள் பனிரண்டு, அவை:

 • 1) அல் ஃபாத்திஹா (1)
 • 2) அர்ரஃத் (13)
 • 3) அர்ரஹ்மான் (55)
 • 4) அஸ்ஸஃப் (61)
 • 5) அத்தகாபுன் (64)
 • 6) அத்தத்ஃபீஃப் (83)
 • 7) அல்கத்ர் (97)
 • 8) அல் பய்யினா (98)
 • 9) அஸ்ஸல்ஸலா (99)
 • 10) அல் இக்லாஸ் (112)
 • 11) அல் ஃபலக் (113)
 • 12) அந்நாஸ் (114)

மேற் கூறிய சூராக்கள் தவிர்த்து மீதியுள்ள 82 சூராக்கள் மக்கிய்யாவாகும். மூலம்: http://www.islamkalvi.com/quran/s_notes/lesson_003.htm

தேதி: 3rd Jul 2021


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்