2016 ரமளான் (15) - நிலமெல்லாம் இரத்தம் - பொது அறிவு முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிக்குமா?

(15. அந்த மூன்று வினாக்கள்  & 16. அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி)

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

முந்தைய  கட்டுரையில் 'அந்த மூன்று வினாக்களுக்கு’ அல்லாஹ் கொடுத்த பதில்கள் குர்‍ஆனின் ஒரே அத்தியாயத்தில் ஏன் இல்லை? என்ற கேள்வியை முன்வைத்தேன். 

இக்கட்டுரையில் நபித்துவத்தை நிரூபிப்பதற்கு எப்படி அல்லாஹ் பொதுஅறிவு பதில்களை  பயன்படுத்தினார் என்பதை விளக்குகிறேன். இந்த விவரத்திற்கு எனக்கு உதவியது உங்களின் வரிகள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த கட்டுரையின் மையக்கருத்து சரியாக புரியவேண்டுமென்பதற்காக, உங்களின் (பாராவின்) நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தின் 15 மற்றும் 16வது தொடர்களின் சுருக்கத்தை தருகிறேன். இதைப் பற்றிய உங்களின் மேற்கோள்களை இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் கொடுத்திருக்கிறேன் [1][2][3][4].

1) மக்காவின் குறைஷிகள் ‘முஹம்மது ஒரு பொய்யான நபி என நிரூபிக்க விரும்பினர்’.

2) இதற்காக அவர்கள் மதினாவில் இருந்த யூத ரபிகளின் உதவியை நாடினர்.

3) யூத ரபிகள் மூன்று கேள்விகளை கேட்கும் படி குறைஷிகளுக்கு சொல்லி அனுப்பினார்கள்.

4) இம்மூன்று கேள்விகளுக்கு முஹம்மது சரியான பதில் அளித்தால், அவர் ஒரு மெய்யான நபி என்று குறைஷிகள் நம்பலாம், அவர் பதில் அளிக்கவில்லையென்றால், அவர் பொய்யர் என்று குறைஷிகள் கருதலாம் என்று யூத ரபிகள் சொல்லி அனுப்பினார்கள்.

5) குறைஷிகள் முஹம்மதுவிடம் இம்மூன்று கேள்விகளை கேட்டார்கள். அவர் மறுநாள் பதில் தருவதாகச் சொன்னார்.  ஆனால் 15 நாட்கள் கழித்து அல்லாஹ் ஜிப்ரீல் தூதன் மூலமாக முஹம்மதுவிற்கு பதில்களை அனுப்பினார்.

(பாரா அவர்கள் எழுதிய தொடர்கள் 15 மற்றும் 16ஐ முழுவதுமாக வாசகர்கள் படித்தால், முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்).

1) முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிக்கும் படி, ’அற்புதங்கள் தேவை’ என்று யூதர்கள் கேட்டார்கள்

முஹம்மது வாழ்ந்த அந்த ஏழாம் நூற்றாண்டில், மக்கா மற்றும் மதினா பகுதிகளில்  குறைஷிகள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மக்கள் வாழ்ந்தனர். இம்மக்களுக்கு ‘தாம் ஒரு நபி’ என்று முஹம்மது நிரூபிக்கவேண்டி இருந்தது. 

’முஹம்மதுவை நபி’ என்று யூதர்கள் நம்பவேண்டுமென்றால், அவர் முந்தைய நபிகளைப்போல அற்புதங்கள் செய்யவேண்டுமென்று அவர்கள் கேட்டனர், இதனை அல்லாஹ் குர்-ஆனில் கீழ்கண்டவாறு சொல்லிக்காட்டுகின்றான். மேலும் ‘நான் ஒரு மனிதன் மட்டுமே’ இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்யமுடியாது என்று யூதர்களுக்கு பதிலாகச் சொல்லும் படி முஹம்மதுவிற்கு கட்டளையிடுகின்றான். 

குர்-ஆன் 17:90-93

17:90. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.  17:91. “அல்லது பேரீச்சை மரங்களும், திராட்சைக் கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும். . . . . . .17:93. “அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்); அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்” என்று கூறுகின்றனர். “என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?” என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.  (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

2) பொதுஅறிவு கேள்விகளை முஹம்மதுவிற்கு பரீட்சையாக வையுங்கள்  

யூதர்கள் ஒருவரை நபியாக கருதவேண்டுமென்றால், அவர்கள் முந்தைய நபிகளைப்போல அற்புதங்கள் செயயவேண்டுமென்று எதிர்ப்பார்த்தனர். ஆனால், குறைஷிகள் அவர்களிடம் வந்த போது, மூன்று கேள்விகளை முஹம்மதுவிடம் கேட்கும் படி சொன்னார்கள். இவற்றில் இரண்டு கேள்விகள் ’அந்த காலக்கட்டத்தில் நிலவிய பொதுஅறிவு கேள்விகள்’ மற்றும் மூன்றாம் கேள்வி மதம் சம்மந்தப்பட்டது, முக்கியமாக யூதகிறிஸ்தவ மதம் சம்மந்தப்பட்டது. முஹம்மதுவிடம் அற்புதங்களை கேளுங்கள் என்று குறைஷிகளிடம் யூதரபிகள் அறிவுரை கூறவில்லை. அந்த காலத்தில் படித்தவர்களுக்கு பொதுவாக தெரிந்திருந்த பொதுஅறிவு (General Knowledge) கேள்விகளை கேட்கும் படி சொல்லி அனுப்பினார்கள். 

இதை எப்படி பாரா அவர்கள் குறிப்பிடுகிறார் என்பதை படியுங்கள்:

//யூத மதகுருமார்கள் எழுப்பிய அந்த மூன்று வினாக்களுக்கு சத்தியமாக எந்த அரேபியருக்கும் விடை தெரிய நியாயமில்லை. முகம்மது ஒரு அரேபியர். எழுதப்படிக்கத் தெரியாதவர். யாரிடமும் பாடம் கேட்டவரும் அல்லர். எனவே யூத குருமார்களுக்கு மட்டுமே விடை தெரிந்த அந்த வினாக்களுக்கு அவர் எப்படி பதில் சொல்லுகிறார் பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள் குறைஷிகள் (நிலமெல்லாம் இரத்தம் தொடர் 15. அந்த மூன்று வினாக்கள்)//

இக்கேள்விக்கான பதில் யூத குருமார்களுக்கு மட்டுமல்ல, அக்காலத்தில் படித்தறிந்த மக்களுக்கும் தெரிந்த விவரம் அது.  இதிலிருந்து அறிவதென்ன? யூதர்களுக்கு என்று வரும் போது ஒரு நிலை (அற்புதங்கள் தேவை), குறைஷிகளுக்கு என்று வரும் போது இன்னொரு நிலை (GK கேள்விகள்). இந்த பொதுஅறிவு கேள்விகளுக்கு ஒருவேளை முஹம்மது பதில் அளித்துவிட்டாலும், அது யூதர்களை பாதிக்கப்போவதில்லை, ஏனென்றால், இக்கேள்விகளை யூதர்கள் குறைஷிகளின் பரீட்சைக்காக தயார்படுத்தி அனுப்பிய வினாத்தாள்களாகும்.

3) பொதுஅறிவு கேள்விகளுக்கு பதில் அளித்தவரை ‘நபி’ என்று முஸ்லிம்கள் அங்கீகரிப்பார்களா?

இதுவரை கண்ட விவரங்களின் படி, யூதர்கள் முன்வைத்த பொதுஅறிவு கேள்விகளுக்கு முஹம்மது பதில் அளித்தார் (இந்த பதில்கள் ஒவ்வொன்றைப் பற்றிய என் விமர்சனத்தை அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்). இதன் மூலமாக, அல்லாஹ் தன் இறைத்தூதர் முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபித்தார். இதைத் தான் முஸ்லிம்கள் இதுவரை நம்பிக்கொண்டு வந்துள்ளார்கள், இதையே பாரா அவர்களும் எழுதியுள்ளார்கள். 

இப்போது முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள் என்னவென்றால்:

அ) ஒருவரை நபி என்று நாம் அங்கீகரிக்க அவருக்கு பொது அறிவு பற்றிய கேள்விகளுக்கு பதில் தெரிந்திருந்தால் போதுமா?

ஆ) முஹம்மதுவிற்கு முன்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததாகச் சொல்லும் நிகழ்ச்சிகள் பற்றிய அறிவு ஒருவருக்கு இருந்தால் அவரை நாம் நபி என்று ஏற்கலாமா?

இ)  பாராவின் கீழ்கண்ட வரிகளின் படி, படிப்பறிவில்லாத ஒருவர், இரண்டு சரித்திர கேள்விகளுக்கு பதில்களை அளித்துவிட்டால், அவரை நபி என்று முஸ்லிம்கள் ’இன்று’ ஏற்றுக்கொள்வார்களா? இது தான் நபித்துவத்தை நிரூபிக்கும் அத்தாட்சிகளா?

//யூத மதகுருமார்கள் எழுப்பிய அந்த மூன்று வினாக்களுக்கு சத்தியமாக எந்த அரேபியருக்கும் விடை தெரிய நியாயமில்லை. முகம்மது ஒரு அரேபியர். எழுதப்படிக்கத் தெரியாதவர். யாரிடமும் பாடம் கேட்டவரும் அல்லர். எனவே யூத குருமார்களுக்கு மட்டுமே விடை தெரிந்த அந்த வினாக்களுக்கு அவர் எப்படி பதில் சொல்லுகிறார் பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள் குறைஷிகள் (நிலமெல்லாம் இரத்தம் தொடர் 15. அந்த மூன்று வினாக்கள்)//

ஈ) தற்காலத்தில் படிப்பறிவில்லாத ஒரு கிராமவாசி, ‘தான் ஒரு இஸ்லாமிய நபி’ என்று பிரகடனப்படுத்திவிட்டு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த பல சரித்திர விவரங்கள் பற்றிய பொதுஅறிவு கேள்விகளுக்கு பதில்களை அளித்துவிட்டால், அவரை நபி என்று முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்களா?

4) யூத ரபிகளின் வலையில் அல்லாஹ் எப்படி சிக்கினார்?

முஹம்மதுவை நம்பாத மக்களாகிய யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் குறைஷிகள் முஹம்மதுவிடம் ‘அற்புதங்களை செய்துக் காட்டி, உங்கள் நபித்துவத்தை நிரூபித்துக்காட்டுங்கள் அப்போது நாங்கள் நம்புகிறோம்’ என்று பல முறை கேட்டாலும், முஹம்மதுவின் மூலமாக ஒரு அற்புதத்தையும் அல்லாஹ் செய்யவில்லை.  எல்லா நேரங்களிலும் அல்லாஹ் அற்புதங்கள் செய்யாமல் தட்டிக்கழித்துக்கொண்டே இருந்தார். கீழ்கண்ட வசனங்களை பாருங்கள்,  ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, அல்லாஹ் அற்புதங்கள் செய்ய மறுத்துள்ளார்:

முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர், அற்புதங்கள் செய்பவர் அல்ல

குர்-ஆன் 13:7. இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் “அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.  

குர்-ஆன் 11:12. (நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.

குர்-ஆன் 13:27. “இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா” என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்று

குர்-ஆன் 29:50. “அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

குர்-ஆன் 29:51. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் ரஹ்மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.  (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)

மேற்கண்டவிதமாக அற்புதங்கள் செய்ய மறுத்துக்கொண்டு இருக்கும் அல்லாஹ், ’பொது அறிவு கேள்விகள்’ கேட்கப்பட்டவுடன் பதில் அளிக்கிறார். இதிலிருந்து தெரிவதென்ன?  வகுப்பறைகளில் ஆசிரியர் ஒரு கேள்வியை கேட்கும்போது, அதற்கான பதில் நமக்குத் தெரிந்தால், உடனே நாம் கைகளை உயர்த்திக்காட்டுவோம், நம்மை ஆசிரியர் பார்க்கமாட்டாரா என்று துடிப்போம். ஆனால், அதே ஆசிரியர் நமக்குத் தெரியாத கேள்வியை கேட்கும் போது, கைகளை உயர்த்துவை விடுங்கள், அவருடைய கண்களில் நேரடியாக பார்ப்பதற்கு பதிலாக, அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டும், இதர மாணவர்களின் பின்னால் ஒளிந்துக்கொண்டும் இருப்போம்.   இதைப் போலவே, அற்புதங்கள் கேட்டபோதெல்லாம் மறுத்த அல்லாஹ், பொது அறிவு கேள்விகள் கேட்டபோது உடனே பதில் அளித்துள்ளார். இது முஹம்மதுவின் நபித்துவத்திற்கு முன்பாக யார் இருந்துள்ளார்கள் என்பதை உணரமுடிகின்றது. 

இது ஒரு புறம் இருக்கட்டும், யூதர்கள் கொடுத்த கேள்விகளை குறைஷிகள் கேட்டபோது, அல்லாஹ் உண்மையான இறைவனாக இருந்திருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்?

அ) முதலாவதாக, குறைஷிகளைப் பார்த்து, நீங்கள் யூதர்களிடமிருந்து கேள்விகள் கேட்டு வந்து, என் இறைத்தூதரிடம் கேட்டு இருக்கிறீர்கள் என்று தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கவேண்டும்.

ஆ) இரண்டாவதாக, யூதர்களுக்கும் இதர படித்தவர்களுக்கும் தெரிந்திருக்கின்ற இந்த கேள்விகளை என்னிடம் (அல்லாஹ்விடம்) கேட்பதினால் ஒரு பயனுமில்லை. முஹம்மதுவின் நபித்துவம் வெறும் ‘பொது அறிவு’ கேள்விகளுக்கு பதில் அளிப்பதினால் நிரூபிக்கப்படாது என்று சொல்லியிருக்கவேண்டும். ஒரு சாதாரண யூதனுக்கு அல்லது அரேபியாவிற்கு வெளியே வாழும் படித்த ஒருவனுக்கு தெரிந்த பொதுஅறிவு கேள்விகளுக்கான பதில்களை நான் சொன்னால், அது எனக்கு அவப்பெயர் இல்லையா! என்று சொல்லியிருந்திருக்கவேண்டும். அல்லாஹ்வின் ஞானமும், படித்த ஒரு மனிதனின் (அ) யூதனின் ஞானமும் ஒன்றா? என்று கேள்வி கேட்டு இருந்திருக்கவேண்டும்.  

இ) மூன்றாவதாக, நான் பதில்களை கொடுக்கிறேன், ஆனால், அதன் பிறகு நீங்கள் முஹம்மதுவை நபி என்று நம்புவோம் என்று ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டால் பதில்களைத தருகிறேன் என்று குறைஷிகளிடம் சவால் விட்டு, ஒப்பந்தம் செய்துக்கொண்டு பதில் சொல்லியிருந்திருக்கவேண்டும். அல்லது இக்கேள்விகளுக்கான பதில்களைச் சொல்வதைக் காட்டிலும், ஒரு அற்புதத்தை செய்துக்காட்டியிருந்திருக்கலாம். 

ஆனால்,இப்படியெல்லாம் செய்யாமல், இக்கேள்விகளுக்கு பதில்களைக் கொடுத்து, அல்லாஹ் தனக்கு யூதர்களிடம் அவப்பெயரை உண்டாக்கிக்கொண்டார். யூதர்களின் மாயவலையில் சிக்கிக்கொண்டார் அல்லாஹ்.  நாம் ஆழ்ந்து சிந்தித்தால், இந்த நிகழ்ச்சி அல்லாஹ்வின் இயலாமையையும் அறியாமையையும் வெளிக்காட்டியுள்ளதை அறியலாம். 

5) நபித்துவ அத்தாட்சி எப்படி இருக்கவேண்டும்?

இவ்வளவு பெரிய மார்க்கத்திற்காக நியமிக்கப்பட்ட முஹம்மதுவின் நபித்துவம் எப்படி நிரூபிக்கப்பட்டு இருந்திருக்கவேண்டும்? இரண்டு பொதுஅறிவு கேள்வி பதில்களால் அதை நிரூபிக்க முயன்று இருப்பது கீழ்தரமானது.  ’குர்-ஆன் தான்’ என் அற்புதம் என்றுச் சொல்வதினாலும் எந்த பயனுமில்லை (நல்ல இலக்கிய படைப்பு எப்போதும் தெய்வீகத்தை வெளிக்காட்டுவதாக அமையாது, மேலும் குர்-ஆன் ஒரு நல்ல இலக்கியம் என்று முஸ்லிம்கள் தவிர இதர மக்கள் அங்கீகரிக்கமாட்டார்கள் என்பது வேறு விஷயம்). 

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில குறைஷிகளுக்கு, நிலவை பிளந்துக்காட்டியும் பயனில்லை (உண்மையில் நிலவை முஹம்மது பிளந்துக்காட்டவில்லை என்பதை என் முந்தைய கட்டுரையில் குர்-ஆனின் அடிப்படையில் விளக்கினேன்). ஒருவேளை நிலவு பிளவுப்பட்டதைப் பார்ப்பவர்கள் ‘இவர் மாஜிக் செய்துவிட்டார்’ என்றுச் சொல்லக்கூடும்.  

உண்மையில் நபித்துவம் எப்படி நிரூபிக்கப்பட்டு இருந்திருக்கவேண்டும்? சிறிய அற்புதமாக இருந்தாலும், அது நிரந்தரமாக அல்லது பல்லாண்டு காலம் பயன் அளிக்கும் ஒன்றாக இருக்கவேண்டும். அதாவது முஹம்மது குறைஷிகளில் இருந்த ஒரு பிறவி குருடனுக்கு பார்வை கிடைக்கும் படி அற்புதம் செய்திருந்தால்? ஒரு முடவனை நடக்கும் படி செய்திருந்தால்? ஒரு ஊமையை பேசச்செய்திருந்தால்? கடைசியாக, மரித்த ஒரு சடலத்திற்கு உயிர் கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

பார்வை அடைந்த அந்த நபர் உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம், வருடங்களெல்லாம் அல்லாஹ்வின் நபிக்கு சாட்சியாக இருந்திருப்பான் அல்லவா?  குறைஷிகளின் வாய்கள் அடைக்கப்பட்டு இருந்திருக்குமல்லவா?  ஒரு ஊமையன் பேசியிருந்திருந்தால், அவன் மரிக்கும் வரை பேசும் ஒவ்வொரு வார்த்தையும் முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிக்கும் அத்தாட்சியாக இருந்திருக்கும் அல்லவா?  இயேசுவின் அற்புதங்களை கண்டவர்கள், ஏதோ மேஜிக் செய்து இவர் எங்கள் கண்களை கட்டிவிட்டார் என்று சொல்லமுடியாது. ஏனென்றால், இயேசுவால் சுகமாக்கப்பட்டவன் கண்கள் திறக்கப்பட்டவன் யூதர்களுக்க்கு முன்பு நிற்கும் போது, அவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அற்புதங்கள் என்பவைகள் ஒரு நபிக்கு முக்கியம், அதே நேரத்தில் அது ஒரு நாள் மட்டுமல்ல, பல ஆண்டுகள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் அற்புதமாக இருக்கவேண்டும். 

இயேசு மறுரூப மலையில் சீடர்களுக்கு முன்பாக அற்புதமாக காட்சி அளித்து மோசேயுடன் பேசியது அற்புதமாக இருந்தாலும், அது சீடர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று, இதனால் சீடர்களின் நம்பிக்கை வளரும், ஆனால், இதர மக்களுக்கு எந்த பயனுமில்லை. 

முஹம்மது பல அற்புதங்களைச் செய்ததாக ஹதீஸ்கள் சொல்கின்றன என்று சில முஸ்லிம்கள் சொல்லக்கூடும். ஆனால், இப்படி நம்புபவர்கள் குர்-ஆனை மறுதலிக்கிறார்கள் என்று அர்த்தமாகின்றது, அதாவது குர்-ஆனின் படி முஹம்மது வெறும் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார். ஆனால், அந்த ஹதீஸ்கள் குர்-ஆனுக்கு எதிராக சாட்சி இடுகின்றது என்று பொருள்படுகின்றது, மேலும் ஹதீஸ்களில் பொய்களும் கலந்திருக்கின்றது என்று முஸ்லிம்களுக்கும் தெரியும். கடைசியாக, ஹதீஸ்களில் காணப்படும் பெரும்பான்மையான ஹதீஸ்கள் எதிரிகளுக்கு முன்பாக செய்யப்பட்ட அற்புதங்கள் அல்ல, அவைகள் ஏற்கனவே முஸ்லிம்களாக இருப்பவர்களிடம் செய்யப்பட்டவைகள். எனவே வெளி உலகத்துக்கு, இதர மக்களுக்கு  இதனால் பயனில்லை.

முடிவுரை: இதுவரை கண்ட விவரங்களின் படி, தன் நபியின் நம்பகத்தன்மையை நிரூபிக்க அல்லாஹ் ‘பொது அறிவு’ கேள்விகளை தெரிந்தெடுத்து அவைகளுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளார் என்பதை அறியமுடிகின்றது. பல முறை அற்புதங்களை கேட்டாலும் ‘நான் செய்யமாட்டேன்’ என்று பிடிவாதம் பிடித்துள்ளார். அரேபியாவிற்கு வெளியே வாழும் சாதாரணமாக படித்தவர்களுக்கும், யூதர்களுக்கும் தெரிந்திருந்த பதிலை வானத்திலிருந்து ஜிப்ரீலை அனுப்பி அல்லாஹ் பதில் கொடுத்தது நகைப்பிற்கு உரியது.  மேலும், அவர் கொடுத்த பதிலில் காணப்படும் சரித்திர பிழைகள், கட்டுக்கதைகள் போன்றவை அல்லாஹ்வின் நம்பகத்தன்மையை இன்னும் குறைத்துவிடுகின்றது. அந்த மூன்று பதில்கள் முஹம்மதுவின் நபித்துவத்திற்கு எதிராக சாட்சி இடுகின்றது. ஒரு குக்கிராமத்தில் படிப்பறிவில்லாதவனாக வாழும் ஒரு பாமரன் தன் ஞானத்திற்கு எட்டாத சில பொது அறிவு கேள்விகளுக்கு பதில்களை அளித்துவிட்டால், அவரை நபியாக முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்று கேள்வி பதில் சொல்லப்படாமல் நிற்கிறது. 

அடுத்த கட்டுரையில் அல்லாஹ் அளித்த அந்த மூன்று பதில்கள் ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

மேலதிக விளக்கங்கள்:

சில முஸ்லிம்கள் என்னிடம் இப்படியாக கேட்கலாம்: 

‘சரி, யூதர்களுக்கும் படித்தவர்களுக்கும் தெரிந்த பதிலையே முஹம்மது சொன்னதாகவே இருக்கட்டும். ஆனால், படிப்பறிவில்லாதவர், மற்றவர்களிடம்  பாடம் கற்காதவராகிய முஹம்மது எப்படி அந்த சரித்திர விவரங்களுக்கு பதிலை அளித்திருக்கமுடியும்?” 

முதலாவதாக, முஹம்மது படிப்பறிவில்லாதவர் என்றுச் சொல்வது 100% உண்மையில்லை. குறைந்த பட்சம் கூட்டிகூட்டி எழுதவும், படிக்கவும் தெரியாதவர் எப்படி வெற்றிகரமான ஒரு சிறந்த வியாபாரியாக இருந்தார்? என்ற கேள்வி எழுகின்றது. இவரது வியாபார திறமையைப் பார்த்து தான் கதிஜா அவர்கள் இவரை நம்பி தம் வியாபாரத்தை ஒப்படைத்தார். எழுதப்படும் சில வார்த்தைகளைப் படித்து, எழுதப்படும் எண்களை படிக்கத் தெரியாதவர் எப்படி வியாபாரம் செய்யமுடியும்? முஹம்மதுவிற்கு குறைந்தபட்சம் எழுதவும், படிக்கவும் தெரியும் என்பதற்கு இஸ்லாமிலிருந்து ஆதாரங்கள் உள்ளன. 

இரண்டாவதாக, பல ஆண்டுகள் இதர நாடுகளுக்கு முக்கியமாக, சிரியா போன்ற பகுதிக்குச் சென்று, வியாபாரம் புரிந்தவர் பல கதைகளையும், யூத கிறிஸ்தவ வேத நிகழ்ச்சிகளையும் வாய்வழியே முஹம்மது கற்று அறிந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. குர்-ஆனில் காணப்படும் பல நிகழ்ச்சிகளை கவனித்தால், பல கட்டுக்கதைகள், பொய்யான கதைகள் நிரம்ப இருப்பதை காணமுடியும். 

கடைசியாக, கேள்விகள் கேட்கப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு பதில்கள் வருகின்றன. அதுவும் கட்டுக்கதைகள் அடங்கிய பதில்கள் வருகின்றன. இந்த 15 நாட்களில் அவருக்கு எப்படி இவ்விவரங்கள் கிடைத்தன? என்பதை சந்தேகிக்க நம் எல்லோருக்கும் உரிமை உண்டு, ஏனென்றால், அந்த பதில்கள் அனைத்தும் கட்டுக்கதைகளாகும். அதனைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். மேலும், பொது அறிவு கேள்விகள் தான் முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிக்கும் அத்தாட்சிகள் என்று முஸ்லிம்கள் சொன்னால்,  அவர்கள் மிகப்பெரிய பிரச்சனையில் விழுவார்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அடிக்குறிப்புக்கள்:

[1] குறைஷிகளின் மாறுபட்ட பரீட்சை,  பாரா அவர்கள் எழுதியவைகள்:

ஆகவே, சற்றே மாறுபட்ட விதத்தில் முகம்மதை இன்னொரு விதமாகவும் பரீட்சித்து, அவர் ஒரு பொய்யர்தான் என்பதை நிரூபிப்பது என்று முடிவு செய்தார்கள்.இங்கேதான் அவர்களுக்கு யூதர்களின் நினைவு வந்தது. படித்த யூதர்கள். பண்டிதர்களான யூதர்கள். அறிவிற் சிறந்த யூதர்கள். யூத ரபிக்கள் (Rabbi).  . . . அத்தகைய யூத மதகுருமார்களை அணுகி, தங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வு கேட்பது என்று முடிவு செய்தார்கள், மெக்கா நகரத்து குறைஷிகள். (நிலமெல்லாம் இரத்தம் தொடர் 15. அந்த மூன்று வினாக்கள்).

[2] யூத ரபிக்கள் உதவி செய்ய முன்வருதல்:

ஆனால் அன்றைக்கு மெக்காவில் யூதர்கள் அதிகம் இல்லை. யூத குருமார்கள் ஒருவர்கூட இல்லை. ஆகவே, யத்ரிப் நகரில் (மெதினா நகரின் பண்டையகாலப் பெயர் இதுதான்.) வசித்துவந்த சில யூத ரபிக்களைச் சந்திக்க ஆள் அனுப்பினார்கள்.பிரச்னை இதுதான். முகம்மது ஓர் இறைத்தூதர்தானா? அவர் சொல்லுவதையெல்லாம் நம்பி, ஏற்பதற்கில்லை. மந்திரவாதியோ என்று சந்தேகப்படுகிறோம். என்ன செய்து அவரை பரீட்சித்தால் சரியாக இருக்கும்? ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் அரபுகளின் நம்பிக்கைகளை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். அடிப்படையே தகர்ந்துவிடும் போலிருக்கிறது. அரபுகளின் வழிபாட்டு உருவங்களை அவர் மதிப்பதில்லை. உருவமற்ற ஒரே இறைவன் என்றொரு புதிய கருத்தை முன்வைத்து மக்களை ஈர்க்கிறார். அவர் உண்மையா, போலியா என்று எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும். இதற்கு யூத குருமார்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.மெக்கா நகரத்து வணிகர்களின் இந்தக் கோரிக்கை, யத்ரிபில் வசித்துவந்த யூத குருமார்களின் சபைக்குப் போய்ச் சேர்ந்தது. அவர்கள், மெக்காவாசிகள் முகம்மது குறித்துச் சொன்ன ஒவ்வொரு தகவலையும் கூர்மையாக கவனித்துக் கேட்டார்கள். தமக்குள் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார்கள். இறுதியில், முகம்மதுவைப் பரிசோதிக்க மூன்று வினாக்களை அவரிடம் கேட்கச் சொல்லி அரபுகளிடம் சொல்லி அனுப்பினார்கள்."இதுதான் பரீட்சை. இவைதான் கேள்விகள். இதற்கு மேலான கேள்விகள் என்று எதுவுமில்லை. இந்த மூன்று கேள்விகளுக்கும் அந்த முகம்மது என்ன பதில் தருகிறார் என்று கேட்டு வந்து சொல்லுங்கள். அவர் சொல்லும் பதில்கள் சரியானவையாக இருக்குமானால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் இறைத்தூதர்தான் என்று நீங்கள் நம்பலாம். பதில்கள் சரியில்லை என்றால், அவர் பித்தலாட்டக்காரர்தான் என்பதில் சந்தேகமில்லை"" என்று சொன்னார்கள்.யூத மதகுருமார்கள் எழுப்பிய அந்த மூன்று வினாக்களுக்கு சத்தியமாக எந்த அரேபியருக்கும் விடை தெரிய நியாயமில்லை. முகம்மது ஒரு அரேபியர். எழுதப்படிக்கத் தெரியாதவர். யாரிடமும் பாடம் கேட்டவரும் அல்லர். எனவே யூத குருமார்களுக்கு மட்டுமே விடை தெரிந்த அந்த வினாக்களுக்கு அவர் எப்படி பதில் சொல்லுகிறார் பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள் குறைஷிகள். (நிலமெல்லாம் இரத்தம் தொடர் 15. அந்த மூன்று வினாக்கள்).

[3] அந்த மூன்று வினாக்கள் எவைகள்?

ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? கிழக்கு, மேற்கு திசையெங்கும் பயணம் செய்து இரு எல்லைகளையும் தொட்ட பயணி யார்? அவரது சிறப்பு என்ன? ஆன்மா என்பது என்ன? (நிலமெல்லாம் இரத்தம் தொடர் 16. அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி).

[4] அந்த மூன்று கேள்விகளின் தன்மை மற்றும் ஆழம்:

யூத மதகுருமார்களின் இந்த மூன்று வினாக்களுக்கு முகம்மது நபி என்ன பதில் சொன்னார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கேள்விகளிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? மேலோட்டமாகப் பார்த்தால் முதல் இரு வினாக்களும் வெறும் சொற்களால் இட்டு நிரப்பப்பட்டவை போலத் தெரிகிறதல்லவா? உள்ளர்த்தங்கள் ஏதுமின்றி, வெறுமனே வம்புக்குக் கேட்கப்பட்டதுபோல!உண்மையில் யூத மதகுருமார்களுக்கு வம்பு நோக்கம் ஏதுமில்லை. அர்த்தங்கள் பொருந்திய இந்த வினாக்களுக்கான விடைகளை அவர்கள் நிச்சயம் அறிவார்கள். சர்வநிச்சயமாக முகம்மதுவுக்கு விடைகள் தெரிந்திருக்காதென்று அவர்கள் நம்பியதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்.ஏனெனில், முதல் இரு வினாக்களுமே சரித்திரம் தொடர்பானவை. முகம்மது நபியின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு இது சரித்திர வினா என்றால், இக்கேள்விகளின் வயதை யூகித்துப் பார்க்கலாம். ஆதிகாலத்தில் பாதிக்காலம் அது. அதற்கும் முன்னால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சங்கதிகளை உள்ளடக்கிய வினாக்கள் அவை. அப்புறம், இருக்கவே இருக்கிறது ஆன்மா. இன்றைக்கு வரை அது என்ன என்கிற வினாவும், அதற்கான விடைதேடும் ஞானியரும் இருக்கவே செய்கிறார்கள்.ஆகவே, எப்படியும் முகம்மது உண்மையான இறைத்தூதர்தானா என்பது இக்கேள்விகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதிலிருந்து தெரிந்துவிடும் என்று குறைஷிகளுக்கு நம்பிக்கை சொல்லி அனுப்பிவைத்தார்கள், யூத ரபிக்கள் (நிலமெல்லாம் இரத்தம் தொடர் 16. அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி)


2016 ரமளான் - நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்

உமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்