200+ ஆண்டுகள் மனிதர்கள் தன் வஹியை கறைப்படுத்த அல்லாஹ் ஏன் அனுமதித்தான் (ஹதீஸ்களின் நிலை)?

முன்னுரை:

அல்லாஹ் தன் கட்டளைகளை முஹம்மதுவிற்கு அறிவித்தான், இதனை ஜிப்ரீல் என்ற தூதன் மூலம் தெரியப்படுத்தினான். இந்த நிகழ்வை வஹி என்றுச் சொல்வார்கள். இப்படி பெறப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளை குர்-ஆனில் வசனங்களாக பதிவு செய்தார் முஹம்மது. இது தான் இக்கட்டுரையை புரிந்துக்கொள்ள தேவையான குறைந்தபட்ச விவரங்கள்.

இஸ்லாமின் கோட்பாடுகளை அறிந்துக்கொள்ள இரண்டு மூலங்கள் (புத்தகங்கள்) உள்ளன, முதலாவது குர்-ஆன், இரண்டாவது ஹதீஸ் தொகுப்புக்கள்.

ஹதீஸ்கள் என்பது முஹம்மதுவின் பேச்சு, செயல் மற்றும் அவர் இட்ட கட்டளைகளின் தொகுப்புக்கள் ஆகும். இதுவும் அல்லாஹ்வின் வஹி தான் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். முஹம்மது சுயமாக எதையும்  பேசவில்லை, செய்யவில்லை, அல்லாஹ் என்ன சென்னாரோ அதன் படி தான் அவர் செயல்பட்டார்.  ஹதீஸ்களும் இஸ்லாமின் அஸ்திபாரமாக உள்ளது.

இதனை விளக்க கீழ்கண்ட வரைபடத்தை பார்க்கவும். 

(இக்கட்டுரையை சுலபமாக புரிந்துக்கொள்வதற்கு, 8 வரைபடங்கள்/அட்டவணைகள்  கொடுக்கப்பட்டுள்ளது).

1. வஹியின் வகைகள்

படம் 1: அல்லாஹ்வின் வஹியின் வகைகள்

முஹம்மது உயிரோடு இருக்கும் போது, தனக்கு இறக்கப்பட்ட குர்-ஆன் வசனங்களை (வஹியை) அவ்வப்பொது, தோல்களிலும், எலும்புகளிலும், இலைகளிலும் எழுதும் படி செய்தார். இருந்தாலும், முஸ்லிம்கள் அதிகமாக மனப்பாடம் செய்துக்கொள்வதையே அதிகமாக நம்பினர். முஹம்மது உயிரோடு இருக்கும் போது இன்று நம்மிடம் உள்ள (114 அத்தியாயங்கள் அடங்கிய) முழு குர்-ஆனையும் அவர் கண்களால் காணவில்லை.

ஆனால், முஹம்மது பெற்றுக்கொண்ட இதர வஹியை தன் பேச்சிலும், செயலிலும் காட்டினார். இவ்வஹி புத்தகமாக முஹம்மதுவின் காலத்தில் எழுதப்படவில்லை. முஹம்மதுவிற்கு பிறகு 200+ ஆண்டுகளுக்கு பிறகு தான் பேச்சு வழக்கில் உலாவிய கதைகளை (அல்லாஹ்வின் வஹியை) சில முஸ்லிம் அறிஞர்கள் தொகுத்து புத்தகமாக்கினார்கள், அவைகளைத் தான் நாம் ஹதீஸ்கள் என்கிறோம். ஒரு கதை 200 ஆண்டுகளுக்கு மேலாக வாய்வழியாக பரவினால் என்னவாகும்? அக்கதையின் உண்மைக்கரு சிதையும், பல பொய்கள் சேர்க்கப்படும்.

இவ்விவரங்களை இன்னும் தெளிவாக அடுத்த படம் விளக்கும்.

படம் 2: அல்லாஹ்வின் வஹி கறைபடுத்தப்பட்டது எப்படி?

மேற்கண்ட படத்தை கூர்ந்து கவனித்தால், அல்லாஹ்வின் இரண்டாவது வஹியானது, 200+ ஆண்டுகள் மனிதர்களின் கைகளினால் கறைப்பட்டுவிட்டது. இதற்கு ஆதாரம் உள்ளதா? என்ற கேள்வி எழும் போது, நாம் புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ்களை கவனிக்கவேண்டும்.

2) சன்னி பிரிவு முஸ்லிம்களின் 6 ஹதீஸ் தொகுப்புக்கள்:

இஸ்லாமிய சமுதாயம் பெரிய அளவில் இரண்டாக பிரிந்துள்ளது, ஒன்று சன்னி (சுன்னி) முஸ்லிம்கள், அடுத்தது ஷியா முஸ்லிம்கள்.

சன்னி முஸ்லிம்கள் தான் பெரும்பான்மை என்பதால், அவர்கள் நம்பும் புத்தகங்களை மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றது. ஷியா முஸ்லிம்களின் புத்தகங்களை நாம் அதிகமாக ஆய்வு செய்வதில்லை.

சன்னி முஸ்லிம் சமுதாயம் 6 வகையான ஹதீஸ்கள் அதிகார பூர்வமான ஹதீஸ்கள் என்று நம்புகிறார்கள். இவைகளில், முதலாவது புகாரி என்பவரால் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள், இரண்டாவதாக, முஸ்லிம் என்பவரால் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள். இப்படி, குர்-ஆனுக்கு அடுத்தபடியாக இவ்வதீஸ்கள் முஸ்லிம்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளன.

கீழ்கண்ட அட்டவணையில் இவ்வதீஸ்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன (புகாரி, முஸ்லிம், நஸயி, அபூதாவுத், திர்மிதி, இப்னு மாஜா).

படம் 3: சன்னி பிரிவினரின் அதிகாரபூர்வமான 6 ஹதீஸ் தொகுப்புக்கள்

முஹம்மதுவிற்கு பிறகு, 200 – 250 ஆண்டுகள்வரை, வாய் வழியாக முஹம்மது பற்றிய கதைகள் உலாவந்தபடியினால், அல்லாஹ்வின் வஹியில் பல புதிய பொய்யான விவரங்கள் மக்களின் வாய்வழியாக பரப்பப்பட்டது. 

உதாரணம்:

புகாரி:

புகாரி (கி.பி. 810 - 870) என்ற இஸ்லாமியர் ஹிஜ்ரி 194ல் பிறக்கிறார். பல ஆண்டுகள் பாடுபட்டு, பல இடங்களுக்குச் சென்று ஹதீஸ்களை சேகரித்தார். 

  • அவர் சேகரித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை: 6,00,000 (ஆறு லட்சம்).
  • இவைகளில் ஆதாரபூர்வமான, உண்மையான ஹதீஸ்கள் எவைகள் என்று அவர் ஆய்வு செய்து கண்டுபிடித்த எண்ணிக்கை: 7,397
  • அப்படியானால், மூதமுள்ள 5,92,603 ஹதீஸ்கள் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை, கறைப்படுத்தப்பட்டவை என்று அவர் ஒதுக்கிவிட்டார்.
  • இதனை சதவிகிதத்தின் படி பார்த்தால், அவர் சேகரித்தவைகளில் 1.23% தான் உண்மையானவை, 98.77% பொய்யானவையாகும்.

இதே போல, சன்னி முஸ்லிம்கள் நம்பும் ஆறு ஹதீஸ் தொகுப்புக்கள் பற்றி மேற்கண்ட அட்டவணையில் நான் பதித்துள்ளேன். 

(குறிப்பு: திர்மிதி மற்றும் இப்னு மாஜா என்பவர்கள், எத்தனை ஹதீஸ்களை தொகுத்தார்கள் என்ற எண்ணிக்கை எனக்கு கிடைக்கவில்லை என்பதால், மேற்கண்ட அட்டவணையில் நான் 4,00,000 (நான்கு லட்சம்) என்று ஒரு சராசரி எண்ணிக்கை கொடுத்துள்ளேன். எனக்கு சரியான எண்ணிக்கை கிடைத்தால், அதனை இந்த அட்டவணையில்/இக்கட்டுரையில் மாற்றுவேன். வாசகர்களுக்கு இவ்விவரம் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும்).

இதனை மேலும் விளக்க, ஒரு பட்டை வரைப்படத்தை கீழே கொடுத்துள்ளேன்.

படம் 4: சன்னி பிரிவினரின் அதிகாரபூர்வமான 6 ஹதீஸ் தொகுப்புக்கள் (பட்டை வரைப்படம்)

(புகாரி, முஸ்லிம் எண்களை மற்றும் சதவிகிதத்தை மட்டுமே மேற்கண்ட படத்தில் குறிப்பிட்டுள்ளேன்)

இவைகளிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், 200-250 ஆண்டுகளில், அல்லாஹ்வின் வஹியில் 98% பொய்கள் கலந்துவிட்டன என்பதாகும், அதிகபட்சமாக 2% தான் உண்மையான வஹியாக உள்ளது.

3) ஹதீஸ் தொகுப்பாளர்களின் காலவரிசை ஹிஜ்ரி 200+ ஆண்டுகளா?

இக்கட்டுரையில் பதிக்கப்படும் அனைத்து விவரங்களும் இஸ்லாமியர்கள் கொடுத்தவை தான். முஸ்லிம்கள் தங்கள் புத்தகங்களில், தளங்களில் பதிக்கப்பட்ட விவரங்களை இங்கு பதித்துள்ளேன். மேலும் விக்கீபீடியா போன்ற தளத்திலிருந்தும் நான் விவரங்களை சேகரித்துள்ளேன், அவைகளின் தொடுப்புக்களை அடிக்குறிப்பில் கொடுத்துள்ளேன்.

முஹம்மதுவிற்கும், புகாரி முஸ்லீம் போன்ற ஹதீஸ்களை தொகுத்தவர்களுக்கும் இடையே எத்தனை ஆண்டுகள் இடைவெளி உள்ளது? குறைந்தபட்சமாக 200 ஆண்டுகள் இடைவெளி உள்ளது என்று இஸ்லாமிய சரித்திரம் சொல்கிறது.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட தளத்தை பார்வையிடவும். இந்த தளத்தில் அனைத்து முஸ்லிம் அறிஞர்களின் காலவரிசை கொடுக்கப்பட்டுள்ளது.

தளம்: muslimscholars.info

இந்த இடைவெளியை புரிந்துக்கொள்ள கீழ்கண்ட வரை படங்கள் உதவும்.

படம் 5: ஹதீஸ் தொகுப்பாளர்களின் கால வரிசை (கி.பி வருட கணக்கில்)

கி.பி. 570 - முஹம்மது பிறக்கிறார்.

கி.பி. 610 - தம்மை ஒரு நபியாக பிரகடனம் செய்கிறார்

கி.பி. 632 - முஹம்மது காலமாகிறார், வஹியும் நிறுத்தப்படுகின்றது.

கி.பி. 810 - புகாரி ஹதீஸ் தொகுப்பை சேகரித்த புகாரி பிறந்தார். அதாவது முஹம்மதுவிற்கு முதல் வஹி வந்த ஆண்டிலிருந்து கணக்கிட்டால் 200 ஆண்டுகள் (கி.பி. 610- 810). பிறந்த குழந்தை புகாரி ஹதீஸ்களை சேகரிக்கவில்லை. அவர் வாலிபனாகி, பல ஆண்டுகள் அக்கால நாடுகளைச் சுற்றித்திரிந்து தொகுத்தார். இந்த படத்தில் நான் ஹதீஸ் தொகுப்பாளர்களின் பிறந்த ஆண்டை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

கி.பி. 817 - அபூ தாவுத் பிறக்கிறார்.

கி.பி. 821 - முஸ்லிம் பிறக்கிறார்.

கி.பி. 824 - திர்மிதி மற்றும் இப்னு மாஜா பிறக்கிறார்கள்.

கி.பி. 829 - நஸயி பிறக்கிறார்.

இவர்கள் பிறந்து, இஸ்லாமை கற்றுக்கொண்டு, வாலிபர்களாகி ஊர் ஊராக சுற்றி ஹதீஸ்களை சேகரித்து, தொகுத்த போது, முஹம்மதுக்கு பிறகு 200-250 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகள் அல்லாஹ்வின் வஹியில், 98% பொய்கள் கலந்துவிட்டன.

கி.பி. என்ற வருட கணக்கில் இருப்பதினால், சில  முஸ்லிம்கள் மேற்கண்ட படத்தை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள், எனவே அவர்களுக்காக, அதே படத்தை ஹிஜ்ரி கணக்கில் கீழே தருகிறேன்.

படம் 6: ஹதீஸ் தொகுப்பாளர்களின் கால வரிசை (ஹிஜ்ரி வருட கணக்கில்)

முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த ஆண்டு ஹிஜ்ரி என்று அழைப்படுகிறது. ஹிஜ்ரி -12ல் முஹம்மது நபியாகிறார், ஹிஜ்ரி 11ல் மதினாவில் காலமாகிறார். அதன் பிறகு, ஹிஜ்ரி 194ல் புகாரி பிறக்கிறார். அவர் வாலிபனாகி, பல ஆண்டுகள் உழைத்து, அதன் பிறகு ஹதீஸ்களை தொகுத்தார். இப்போது கணக்கு சரியாக விளங்குகிறதா?

ஒவ்வொரு ஹதீஸ் தொகுப்பாளர்களின் பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

படம் 7: ஹதீஸ் தொகுப்பாளர்களின் பிறப்பு/இறப்பு ஆண்டு அட்டவணை

4) இப்னு இஷாக் (85 AH/704 CE -150 AH/767 CE) - சஹீஹ் ஹதீஸ்களின் முன்னோடி

இதுவரை கண்ட பட்டியல்கள் மற்றும் வரைபடங்களை பார்க்கும்போது, ஏன் 200+ ஆண்டுகள் அல்லாஹ்வின் வஹியை ஒருவரும் எழுத்துவடியில் கொண்டுவரவில்லை. புகாரிக்கு முன்பாக யாரும் இந்த வேலையைச் செய்யவில்லையா? என்ற கேள்வி எழும். உண்மையில், பலர் இந்த வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள்.

இப்னு இஷாக் - முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரம்

முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை முதன் முதலாக தொகுத்து எழுதிய இப்னு இஷாக் என்பவர், ஹிஜ்ரி 85ல் பிறந்தவர். இவருடைய சரித்திரம் தான் சஹீஹ் ஹதீஸ்களை விட முந்தையது. ஆனால், முஸ்லிம்கள் இவரது சரித்திரத்தை ஆதார பூர்வமானதாக கருதமாட்டார்கள், ஏனென்றால், சில தர்மசங்கடமான விவரங்கள், இந்த சரித்திரத்தில் இருப்பதினால் தான் (உதாரணத்திற்கு, சாத்தானின் வசனங்களை முஹம்மது அல்லாஹ்வின் வஹியாக சொன்ன நிகழ்ச்சியைச் சொல்லலாம்).

படம் 8: இப்னு இஷாக்கின் மற்றும் ஹதீஸ்களின் காலவரிசை

ஹிஜ்ரி 100க்குள் இப்னு இஷாக்கின்  பிறப்பு, ஹிஜ்ரி  200க்குள்  புகாரியின் பிறப்பு. முஸ்லிம்கள் இப்னு இஷாக்கின் சரித்திரத்தை ஆதாரமாக எடுத்துக் கொண்டு இருந்திருந்தால், இன்னொரு 100 ஆண்டுகளில் நுழைந்த பொய்களை தவிர்த்து இருந்திருக்கலாம். 

(குறிப்பு:இப்னு இஷாக்கின் சரித்திரம், புத்தகமாக நம்மிடம் இப்போது இல்லை, ஆனால், அவரது மாணவர்களாகிய இப்னு இஷாம், மற்றும் தபரி போன்றவர்கள், அவரது புத்தகத்திலிருந்து பல மேற்கோள்களை சுட்டிக் காட்டியுள்ளார்கள். அவைகளை வைத்துத் தான், இப்னு இஷாக்கின் சரித்திர விவரங்கள் கிடைத்துள்ளன.)

5. அல்லாஹ்வின் வஹி பற்றிய கேள்விகள்:

இதுவரை ஹதீஸ்கள் பற்றிய காலவரிசையைக் கண்டோம். அல்லாஹ்வின் ஒரு வஹியை முஹம்மது (வஹியைப் பெற்றவர்) உயிரோடு இருக்கும் போது, எழுத்துவடிவில் ஓரளவிற்கு கொண்டு வந்தார். ஆனால், அல்லாஹ்வின் இன்னொடு வஹியை எழுத்து வடிவில் கொண்டு வர முஹம்மது தவறிவிட்டார். முஹம்மது தவறினார் என்றுச் சொல்வதை விட, அல்லாஹ்வே தவறினார் என்றுச் சொல்லலாம். முஹம்மதுவின் கடைசி முச்சு, வஹியின் கடைசி சுவாசக்காற்று ஒன்றாக நின்றுவிட்டது. அதன் பிறகு, 200+ ஆண்டுகள் கழித்து தான், எழுத்து வடிவில் கொண்டு வர மக்கள் (முஸ்லிம்கள்) உழைத்தார்கள். புகாரி, முஸ்லிம் ஹதீஸ்கள் தொடங்கி, சன்னி முஸ்லிம்கள் சஹீஹ் என்று கருதும் ஆறு ஹதீஸ்களும் குர்-ஆனுக்கு, அல்லாஹ்வின் வஹிக்கு 250 ஆண்டுகள் பிந்தையது ஆகும்.

கேள்வி 1: அல்லாஹ் ஏன் தன் வஹியை 250 ஆண்டுகள் மக்கள் கறைப்படுத்த அனுமதித்தார்? 

கேள்வி 2: புகாரி தொகுத்த ஹதீஸ்கள் 6,00,000 (ஆறு லட்சம்), இவைகளில் உண்மையானது என்று கண்டுபிடித்தது 7,397, அதாவது 1.23% சதவிகிதம். மீதியுள்ள 5,92,603 ஹதீஸ்கள் பொய்யானவை, அல்லாஹ்வின் வஹியோடு கலந்துவிட்டவை? இந்த நிலைக்கு யார் காரணம்? அல்லாஹ்!

கேள்வி 3: புகாரி உண்மை என்று அடையாளப்படுத்திய 7,397 ஹதீஸ்களாவது உண்மையானவை என்று இன்றுள்ள முஸ்லிம் அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? என்று கேட்டால், இல்லை என்று பதில் வருகிறது. நம் தமிழ் நாட்டில், டிஎன்டிஜே (TNTJ) என்ற இஸ்லாமிய அமைப்பு, இவைகளில் 50+ ஹதீஸ்கள் பொய்யானவை என்றுச் சொல்கிறது. முஸ்லிம்களுக்கு ஏன் இந்த அக்னிப் பரிட்சை? இதற்கு யார் காரணம்? அல்லாஹ் தான்!

கேள்வி 4: முஹம்மது உயிரோடு இருக்கும் போதே, இஸ்லாமிய சட்டங்களை (இன்று ஹதீஸ்களில் காணும் விவரங்களை) ஒரு கோர்வையாக எழுத்துவடிவில் எழுதும் படி செய்யச்செய்து, முஹம்மது அதனை சரி பார்த்து இருந்திருந்தால்! முஸ்லிம்களின் நிலை எங்கேயோ இருந்திருக்கும்! ஆனால், அல்லாஹ் இதனை செய்யவில்லை, இப்படி செய்யவேண்டுமென்று முஹம்மதுவிற்கும் தோன்றவில்லை!

முடிவுரை:

மனிதர்களின் கரங்களால், சரியாகச் சொல்லவேண்டுமென்றால் ”மனிதர்களின் வாய்களால்”, இன்னும் சரியாகச்சொன்னால், மனித கற்பனை வளத்தினால் கறைப்பட்ட வஹியின் மீதா முஸ்லிம்களின் நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம் சார்ந்திருக்கிறது?  ஆம். இது தான் உண்மை! 

அல்லாஹ்வின் வஹியாகிய  குர்-ஆனிலிருந்து எடுக்கும் இஸ்லாமிய சட்டங்களைக் காட்டிலும், அல்லாஹ்வின் வஹி ஹதீஸ்களிலிருந்து எடுக்கும் சட்டங்களின் எண்ணிக்கை அதிகம். ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும் என்ற சட்டம் தொடங்கி, ஹஜ் எப்படி செய்யவேண்டும்? என்ற விவரம் வரை அல்லாஹ்வின் வஹியாகிய ஹதீஸ்கள் தான் முஸ்லிம்களின் அஸ்திபாரங்கள். மலஜலம் கழித்தால் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்விதொடங்கி, மரணம் நம்மை ஆட்கொண்டால் என்ன செய்யவேண்டும் போன்ற விவரங்கள் வரை ஹதீஸ்களை நம்பித்தான் முஸ்லிம்கள் வாழவேண்டியுள்ளது. இப்படிப்பட்ட ஹதீஸ்களில் 98% பொய்கள் கலந்தன என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கே அடுக்காது.

இந்த ஹதீஸ்கள் இஸ்லாமுக்கு 250 ஆண்டுகள் கழித்து, எழுத்துவடிவில் கொண்டுவரப்பட்டது, அதற்குள் அவைகளில் எவைகளையெல்லாம் சேர்க்கமுடியுமோ அவைகள் எல்லாம் சேர்த்தாகிவிட்டது. இன்றும் ஹதீஸ்களில் பொய்கள் கலந்துள்ளது என்றுச் சொல்லும் முஸ்லிம்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

இக்குழப்பங்களுக்கெல்லாம் காரணம் அல்லாஹ் என்றுச் சொன்னால், உங்களில் யாராவது இதனை மறுக்கமுடியுமா? வாய்வழியாக ஒரு செய்தி 200 ஆண்டுகள் உலகில் உலா வந்தால், அச்செய்திக்கு பத்தினித்தன்மை இருக்குமா? ஆம், அது பரிசுத்தமாகவே இருக்கும் என்று சொல்பவர்கள், புகாரி ஒதுக்கிவிட்ட 98.77% ஹதீஸ்களுக்கு என்ன பெயரைச் சூட்டப்போகிறார்கள்?

அடிக்குறிப்புக்கள்:

[1] muslimscholars.info

[2] en.wikipedia.org/wiki/Sahih_al-Bukhari

[3] புகாரி (நூல்) - ta.wikipedia.org/s/5hwu

[4] ஹதீஸ் - ta.wikipedia.org/s/3uo

[5] List of hadith collections - en.wikipedia.org/wiki/List_of_hadith_collections

[6] en.wikipedia.org/wiki/Kutub_al-Sittah

[7] en.wikipedia.org/wiki/Sahih_al-Bukhari

[8] en.wikipedia.org/wiki/Sahih_Muslim


இதர தலைப்புக்கள்

குர்-ஆன் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்