2016 பக்ரீத் – 7: அல்லாஹ்வின் குர்பானி, குர்பானி & குர்பானி

(2016 பக்ரீத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இந்த தொடுப்பில் படிக்கலாம்)

இந்த தொடரில் “குர்பானி” என்ற முக்கியமான சொற்றொடர் பற்றியும், இதற்கும் ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமப்பதற்கும் என்ன ஒற்றுமையுள்ளது என்பதைப் பற்றியும் சிறிது ஆய்வு செய்வோம்.

குர்பானி என்ற சொல்லிற்கு “தியாகம் செய்தல்” என்றும், ”எந்தச் செயலைக் கொண்டு ஒருவரை (அல்லாஹ்வை) நெருங்க முடியுமோ அச்செயல்” என்றும் பொருள் கூறுகிறார்கள்.

Qurbāni (Arabic: قربانى‎‎) (or أضحية Udhiyyah as referred to in Islamic Law) is the sacrifice of a livestock animal during Eid al-Adha. The word is related to the Hebrew qorbān "offering" and Syriac qurbānā "sacrifice", etymologised through the cognate Arabic triliteral as "a way or means of approaching someone" or "nearness". [1] விக்கிபீடியா

பொதுவாக பக்ரீத் பண்டிகையன்று பிராணிகளை பலியிடுவதை குர்பானி என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். குர்பானி பற்றிய அருமை பெருமைகளை முஸ்லிம்களிடம் கேட்டால், மணிக்கணக்கில் விளக்குவார்கள். குர்பானியாக பலியிடப்படும் பிராணியின் ஒவ்வொரு ரோமமும் (முடியும்), குர்பானி கொடுக்கும் நபருக்கு கியாமநாளில் நன்மைகளாக கருதப்படுமாம்.

1) அல்லாஹ்வை நெருங்க எப்படி குர்பானி உதவி புரியும்?

ஒருவரை நெருங்க எந்த செயல் உதவியாக இருக்குமோ, அதனை குர்பானி என்றுச் சொல்வார்கள். ஒரு மிருகத்தை அறுத்து, அதன் இரத்தத்தை பூமியில் ஓடச்செய்வது எப்படி ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நெருங்க உதவியாக இருக்கும்?

திர்மிதி மற்றும் இப்னு மாஜா என்ற ஹதீஸ் தொகுப்புகளில், கீழ்கண்ட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று அடியார்கள் செய்யும் அமல்களில் குர்பானியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதை விட அல்லாஹ்விற்கு மிகப்பிரியமான அமல் வேறொன்றும் இல்லை. நிச்சயமாக அவை கியாமநாளில் தங்களின் கொம்புகளுடனும், உரோமங்களுடனும், குளம்புகளுடனும் வரும்; நிச்சயமாக குர்பானிக் கொடுக்கப்படும் கால்நடைகளின் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன் அல்லாஹ்வின் அங்கீகாரத்தை அக்குர்பானி பெற்று விடுகிறது. எனவே அதனை மனமுவந்துச் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.

அறிவிப்பவர்-அன்னை ஆயிஷா(ரலி), திர்மிதி-180, இப்னு மாஜா-233 மூலம்

பக்ரீத் பண்டிகை நாளன்று, முஸ்லிம்கள் செய்யும் செயல்களில், அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்த செயல், குர்பானி பிராணியை அறுத்து இரத்தத்தை ஓட்டுவதாகுமாம். மேலும், அதே மேற்கண்ட கட்டுரையில், குர்பானிக்கு பதிலாக பணத்தை ஏழைகளுக்கு தானதர்மம் செய்தால் அது குற்றமிழைப்பதற்கு சமமாகுமாம். 

குர்பானிக்கு பகரமாக சதகா:

குர்பானிக்கு கடமையானவர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் இவைகளை அறுத்து இரத்தத்தை ஓட்டுவது அவசியமாகும். இதற்கு மாறாக குர்பானி மிருகங்களில் விலையை சதகாவாக, தானதர்மமாக ஏழைகளுக்கு கொடுத்தால் குர்பானி கடமை நிறைவேறாது. இப்படிச் செய்பவர் குற்றமிழைத்தவராக ஆகிவிடுவார். மூலம்

“குர்பானியின் சட்டங்கள்” என்ற புத்தகத்தில் கீழ்கண்ட விதமாக கூறப்பட்டுள்ளது:

அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்கங்களை அதிக ஆர்வத்துடன் செய்து வருகிறோம். அல்லாஹ்விடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் இது போன்ற வணக்கங்களில் குர்பானியும் ஒன்றாகும்.

மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் முஸ்லிம்களிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும்:

அ) ஒரு மிருகத்தின் மரணம் எப்படி முஸ்லிம்களை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும்? குர்-ஆன் 22:37ன்படி, இறையச்சம் தான் அல்லாஹ்வைச் சேரும் என்றால், ஒரு மிருகத்தை ஏன் கொல்லவேண்டும்?

ஆ) நற்செயல்கள் நம்மை இறைவனிடம் நெருங்கச் செய்யும் என்றுச் சொன்னால், அதில் அர்த்தமிருக்கிறது. ஆனால், ஒரு மிருகத்தை கொலை செய்து, அதன் இரத்தத்தை பூமியில் ஓடச்செய்வது எப்படி நம்மை இறைவனிடம் நெருங்கச் செய்யும்?

இ) திர்மிதி மற்றும் இப்னு மாஜா ஹதிஸ்களின் படி, பக்ரீத் பண்டிகையன்று முஸ்லிம்கள் செய்யும் செயல்களில், அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானது குர்பானி ஆகுமாம். ஏன் இப்படி?

ஈ) ஒரு மிருகத்தின் இரத்தம் பூமியில் சிந்தப்படுவதில் அல்லாஹ்விற்கு ஏன் இவ்வளவு பிரியம்? இலட்சக்கணக்கான மிருகங்கள் பக்ரீத் அன்று பலியிடப்படுகின்றது, இரத்தம் ஆறாய் ஓடுகின்றது. இதில் என்ன அல்லாஹ்விற்கு பிடித்தமான செயல் வந்துவிடுகின்றது? மிருகங்களின் இரத்தம் பூமியில் சிந்தப்படுவதில் ஏதாவது முக்கியமான இஸ்லாமிய இறையியல் தத்துவம் அடங்கியுள்ளதா?

உ) அல்லாஹ்வை நெருங்க ஒரு ஆடு/மாடு/ஒட்டகம் பலியிடப்படவேண்டுமா? 

ஊ) ஒரு ஆட்டிற்கு நிகரான பணத்தை, ஏழைகளுக்கு தானதர்மம் செய்வதைக் காட்டிலும், அந்த ஆட்டை கொலை செய்வது தான் அல்லாஹ்விற்கு பிடித்தமான ஒன்றா? ஏன்?

அல்லாஹ் சொன்னான் ஆகையால், நாங்கள் செய்கிறோம் என்றுச்சொல்வதோ, ஆபிரகாமின் செயலை நினைவு கூறும்படி செய்கிறோம் என்றுச் சொல்வதோ மேற்கண்ட கேள்விகளுக்கு சரியான பதிலாக அமையாது. குர்பானியின் அருமை பெருமைகளை பார்க்கும் போது, மேற்கண்ட சாதாரண காரணம் நிச்சயமாக இருக்கமுடியாது.

2) பழுதற்ற பிராணியே குர்பானிக்கு ஏற்றது

குர்பானி கொடுக்கும் பிராணி, பழுதற்றதாக இருக்கவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டுள்ளார். 

குர்பானியின் சட்டங்கள் என்ற புத்தகத்தில் கீழ்கண்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பிராணிகளின் தன்மைகள்

குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)

நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

அல்லாஹ்வை நெருங்க ஏன் ஒரு பிராணி பலியிடப்படவேண்டும் என்ற கேள்வி ஒரு புறமிருக்க, அந்த பிராணி பிழையற்றதாக இருக்கவேண்டும் என்பது முஹம்மது போட்ட நிபந்தனையாகும். இறைவனுக்கு நாம் சமர்ப்பிக்கும் எதுவும் பிழையற்றதாகவும், நேர்த்தியானதாகவும் இருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஏன் ஒரு மிருகம் பிழையற்றதாக இருக்கவேண்டும்?  என்பது தான் கேள்வி.

நாம் இதுவரை குர்பானி பற்றி இரண்டு முக்கியமான விவரங்களை கண்டுள்ளோம். முதலாவதாக, குர்பானியைக் கொண்டு மக்கள் அல்லாஹ்வை நெருங்க முடியும், இரண்டாவதாக, அந்த குர்பானி பிராணியானது பழுதற்ற ஒன்றாக இருக்கவேண்டும். 

3) பாவநிவார பலியும், பழுதற்ற பிராணியும்

இறைவனுக்கு ஏன் நாம் மிருகங்களை பலியிடவேண்டும்? என்ற கேள்வியை முஸ்லிம்களிடம் கேட்டால், அதற்கான பதில் கிடைக்காது. ஏனென்றால், குர்-ஆனோ, ஹதீஸ்களோ இக்கேள்விக்கான பதிலை தருவதில்லை. எனவே, முந்தைய வேதமாகிய தவ்ராத்தை சிறிது ஆய்வு செய்து பார்த்தால், இதற்கான பதில் முழுவதுமாக கிடைக்கும். 

தவ்ராத்தில் லேவியராகமம் புத்தகத்தின் 4 மற்றும் 5வது அத்தியாயத்தில் எப்படி இஸ்ரவேலர்கள் பாவநிவாரண பலியை செலுத்த வேண்டுமென்று  மோசேயின் மூலமாக தேவன் கட்டளையிட்டுள்ளார். மேலும் அந்த பலியிடப்படும் பிராணி எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

லேவி 4:1  பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 

லேவி 4:2  நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது. (முழு அத்தியாங்களை படித்துப் பார்க்கவும்)

மனிதன் இறைவனுக்கு எதிரான பாவம் செய்யும் போது, அவன் இறைவனோடு நெருங்கும் உரிமையை இழக்கின்றான். எனவே, அவன் மறுபடியும் இறைவனோடு நெருங்கவேண்டுமென்றால், அவனது ஸ்தானத்தில் இன்னொருவர் இரத்தம் சிந்தவேண்டும். ஆகையால், ஒரு பழுதற்ற பிராணியை தெரிவு செய்து, பலியாக கொடுக்கும் படி இறைவன் கட்டளையிட்டார். 

4) நிஜமிருக்க நிழலை பின் தொடர்வது ஏன்?

மிருகங்களின் பலியும் இரத்தமும் பாவங்களை நீக்கினால், ஏன் இயேசு மறுபடியும் குர்பானி (பலி) ஆக வேண்டும்?

மனிதன் தான் செய்யும் பாவங்களை போக்கிக்கொள்ள, பிராணிகளை பலியிடுவதை ஒரு நிழலாட்டமாக தேவன் பழைய ஏற்பாட்டில் சுட்டிக்காட்டினார். ஆனால், அதன் நிஜத்தை நாம் இயேசுவில் காணமுடியும்.

பழைய ஏற்பாட்டில், எந்த ஒரு இடத்திலும், பிராணிகளின் பலிகளினால் பாவங்கள் முழுவதுமாக “நீக்கப்படும்” என்றுச் சொல்லப்படவில்லை. பழைய ஏற்பாட்டில் பாவநிவாரணம் என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்ட எபிரேய பதம் “Kaphar”, இதன் அர்த்தம் “மூடுவது (Covering)” என்பதாகும், ”முழுவதுமாக நீக்குவது” என்று அர்த்தமாகாது [2]. இதே வார்த்தையைத் தான் நோவா ஒரு பேழையை செய்து, அதை கீலினால் பூசு (மூடு) என்று தேவன் கட்டளையிட்டதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

லேவி 4:20  பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக் காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி (எபிரேயம்: Kaphar) செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

பல நூற்றாண்டுகளாக பல்லாயிரக்கணக்கான பிராணிகள் யூத ஆசாரியர்களால் பலியாக்கப்பட்டு, இரத்தம் சிந்தப்பட்டது, இது நம்முடைய பாவத்தின் வீரியத்தை தெரியப்படுத்துகிறது. இந்த மிருகங்களின் இரத்தம் பாவங்களை ”மூடும்” திரைபோன்று செயல்படுகின்றதே தவிர அவைகள், நம் பாவங்களை ”முழுவதுமாக நீக்குவதில்லை”. இதைத்தான் எபிரேயர் 10:4,10-12 வசனங்கள் தெளிவாகச் சொல்கிறது, மேலும், யார் மூலமாக பாவங்கள் உண்மையாக நீக்கப்படும் என்பதையும் சொல்கிறது. 

எபிரேயர் 10:4  அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.

10:10  இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். 

10:11  அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்தி(periaireo) செய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். 

10:12  இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,

இயேசுக் கிறிஸ்து ஒரே தரம் குர்பானியாகி(பலியாகி), எல்லோருடைய பாவங்களை நீக்கினார் என்பது தான் நிஜம், பிராணிகளின் குர்பானி வெறும் நிழல் தான்.

எபிரேய 10:11ம் வசனத்தில் “நிவர்த்தி” என்ற வார்த்தை கிரேக்க மூல மொழியில்  “Periaireo” என்று வருகிறது. இதன் அர்த்தம் ”மூடுவது – Covering” என்று அல்லாமல்,  “முழுவதுவாக நீக்குவது” என்பதாக வருகிறது [3]. ஆக, பழைய ஏற்பாட்டில் பிராணிகளின் பலிகளினால் உண்டாகும் பாவநிவர்த்தி என்பது, வெறும் பாவத்தை மூடுவதாக அமைகிறது, ஆனால், இயேசுவின் மூலமாக வரும் பாவநிவர்த்தி என்பது, “பாவத்தை முழுவதுமாக நீக்குவது” ஆகும்.

முடிவுரை:

பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டது போல, பிராணிகளின் பலிகளும் இரத்தம் சிந்துதலும், மனிதர்களின் பாவங்களை வெறும் மூடுகிறது, அவைகளை நீக்குவதில்லை. பிராணிகளின் இரத்தம் ஆறாய் ஓடுவதைக் காணும் போது, நம் பாவங்களின் விளைவை நாம் அறிந்துக்கொள்ளலாம். நாம் எவ்வளவு கீழ்தரமாக பாவங்கள் செய்து இறைவனின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறோம். இறைவன் சுயமாக நம்மை மன்னிக்க ஒரு வழியைக் கொடுத்தால் தவிர,  நாம் செய்யும் நற்செயல்கள், நம் பாவங்களை நீக்கவும், இறைவனோடு நாம் நல்லுறவு பெறவும் போதுமானதாக இல்லை. எனவே தான், இறைவன் இயேசுவாக பூமியில் வந்து, அனைவருக்காகவும் ஒரே தரம் பலியாகி, நம் சுமைகளை நீக்கி, நம்மை தம்மிடம் சேர்த்துக்கொண்டார். இதனை புரிந்துக்கொள்ளாமல், முஸ்லிம்கள் இன்னும் குர்பானி என்ற பெயரில் பிராணிகளை பலியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 

அடிக்குறிப்புக்கள்:

[1] Qurbani -  https://en.wikipedia.org/wiki/Qurbani 

[2] எபிரேயம் - Kaphar

H3722

כּפר

kâphar

kaw-far'

A primitive root; to cover (specifically with bitumen); figuratively to expiate or condone, to placate or cancel: - appease, make (an) atonement, cleanse, disannul, forgive, be merciful, pacify, pardon, to pitch, purge (away), put off, (make) reconcile (-liation).

[3] கிரேக்கம் - Periaireo

G4014

περιαιρέω

periaireō

per-ee-ahee-reh'-o

From G4012 and G138 (including its alternate); to remove all around, that is, unveil, cast off (anchor); figuratively to expiate: - take away (up).


பக்ரீத் கட்டுரைகள் பக்கம்

ரமளான் கட்டுரைகள் பக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்