2016 பக்ரீத் – 6: அகீகா – ஒரு உயிருக்காக இன்னொரு உயிர் கொல்லப்படுவது ஏன்?

(2016 பக்ரீத் தொடரின் முந்தைய கட்டுரைகளை  படிக்க இங்கு சொடுக்கவும்).

இந்த கட்டுரையில், ஒரு உயிருக்காக இன்னொரு உயிர் பலிகொடுக்கப்படும் இஸ்லாமிய கோட்பாட்டைப் பற்றி சுருக்கமாக காண்போம். 

1) அகீகா என்றால் என்ன?

ஒரு இஸ்லாமிய தளம், அகீகா என்பதற்கு கீழ்கண்ட விளக்கத்தை தருகின்றது.

இதனை மொழி நடையில்: வெட்டுதல் அல்லது இரத்தத்தை ஓட்டுதல் எனப்படும்.

பரிபாசையில்: குழந்தை பிறந்து எழாவது நாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக அறுக்கப்படும் அல்லது அறுத்துக் கொடுக்கப்படும் ஆட்டுக்குச் சொல்லப்படும். [1]

இஸ்லாம் கல்வி தளம் கொடுக்கும் விளக்கம்:

குழந்தையும் அகீகாவும்:

அகீகா என்றால் குழந்தைக்காக ஆட்டை அறுத்து குர்பான் கொடுப்பதாகும்.

“குழந்தையானது அதன் அகீகாவுடன் அடைமானம் வைக்கப் பட்டுள்ளது.குழந்தை பிறந்து ஏழாவது நாளில் ஆடு அறுக்கப்படும், குழந்தைக்கு பெயர் சூட்டப் படும், அதன் தலை முடி களையப்படும்”. திர்மிதி 1442.

குழந்தைப் பிறந்து ஏழாவது நாளில் அகீகா கொடுக்க வேண்டும். ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளும்,பெண் குழந்தையாக இருந்தால் ஒரு ஆடும் கொடுக்க வேண்டும். ஏழாம் நாள் அகீகா கொடுக்க வசதியில்லா விட்டால், பிறகு கொடுக்க தேவை இல்லை. [2]

ஆன்லைன் பிஜே தளத்தின் விளக்கம்:

"ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடிஇறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப் (ரலி)

நூல்: நஸயீ 4149

இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அறுத்துப்பலியிட வேண்டும். அதே நாளில் குழந்தைக்குப் பெயரிட்டு, தலை முடியைக் களையவேண்டும். அகீகா தொடர்பாக வரக் கூடிய செய்திகளில் ஏழாவது நாள் கொடுக்க வேண்டும் என்று இடம் பெறும் செய்தி மட்டுமே ஆதாரப்பூர்வமாக உள்ளது.[3]

மேற்கண்ட விளக்கங்கள், அகீகா என்றால் என்னவென்பதை சுருக்கமாக விளக்கிவிட்டது, எனவே இதைப் பற்றி மேற்கொண்டு விளக்கத்தேவையில்லை.

2) ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானம்

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாம்.  எனவே, ஒரு ஆட்டை அறுத்து, அதன் இரத்தத்தை சிந்தவிட்டு, அந்த குழந்தையை மீட்கவேண்டும். இதன் அடிப்படையில் தான் அகீகா கொடுக்கப்படுகின்றது. 

  • ஒரு உயிருக்காக ஏன் ஒரு ஆடு பலியாகவேண்டும்? 
  • இந்த அகீகா மூலமாக அல்லாஹ் என்ன சொல்லவருகிறான்?

குழைந்தைக்காக ஒரு ஆட்டை பலியிடும் இந்த வழக்கம், முஹம்மதுவிற்கு முன்பாகவே அரேபியர்களிடம் இருந்தது, அதனை சிறிது மாற்றி முஹம்மது முஸ்லிம்களுக்கு கட்டளையாக கொடுத்துள்ளார். இந்த பழக்கம் இஸ்லாம் கொண்டுவந்த புதிய பழக்கமல்ல என்பது இதன் மூலம் அறியமுடிகின்றது.

பிறக்கும் குழந்தை அடைமானம் என்றுச் சொன்னால், யாரிடம் அந்த குழந்தை அடைமானம் வைக்கப்பட்டது? யாரிடமிருந்து அந்த குழந்தையை (அடைமானத்தை) மீட்கவேண்டும்? ஏன் மீட்கவேண்டும்? அந்த அடைமானத்தை மீட்க பணத்தை தானதர்மமாக அல்லாஹ்வின் பெயரில் கொடுத்தால், அது அந்த அடைமானத்தை மீட்க போதுமானதாக இருக்காதா? ஏன் ஒரு மிருகத்தை உயிருக்கு உயிர் என்ற பெயரில் அறுத்து, இரத்தம் ஓடவைக்கவேண்டும்?

இப்படி பல கேள்விகளை நாம் முஸ்லிம்களிடம் கேட்கவேண்டியுள்ளது. 

3) ஆபிரகாமின் மகனை பலி மூலம் மீட்டுக்கொண்டதும், அகீகாவும் ஒன்றா?

இந்த பக்ரீத் தொடரின் முதலாவது பாகத்தில், ஆபிரகாமின் மகனை மீட்கும் படி, அல்லாஹ் ஒரு ஆட்டை பகரமாக பலியிட்டார் என்பதைக் கண்டோம். இதனை குர்-ஆன் 37:102-107வரையிள்ள வசனங்களில் காணலாம். 

குர்-ஆன் 37:102-107

37:102. பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.” 37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது.

37:104. நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம். 37:105. “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.

37:106. “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”37:107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.(முஹம்மது ஜான் தமிழாக்கம்).

இங்கு 107ம் வசனத்தை கவனித்தால், அகீகாவைப் போன்று, அல்லாஹ் ஆபிரகாமின் மகனை (அடைமானத்தை) மீட்க ஒரு ஆட்டை பகரமாக கொடுத்தார் என்பதை காணமுடியும். 

இறைவனை திருப்திபடுத்த, மனிதர்கள் நற்செயல்களைச் செய்யவேண்டும் என்றுச் சொல்வது, ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இறைவனை திருப்திபடுத்த மனிதன் ஏன் ஒரு மிருகத்தை கொலை செய்யவேண்டும்? அதன் இரத்தத்தை சிந்த வேண்டும்?  பிறக்கும் குழந்தைகள் ஏன் அடைமானமாக அல்லாஹ்வால் கருதப்படுகின்றது? ஆபிரகாமின் மகனை ஏன் அல்லாஹ் மீட்கவேண்டும்? அதற்காக ஏன் ஒரு ஆட்டை பலியிடவேண்டும்? போன்ற கேள்விகளுக்கு முஸ்லிம்களால் பதில் சொல்லமுடிவதில்லை.

”எங்கள் நபி அகீகா கொடுக்கச்சொன்னார் நாங்கள் செய்கிறோம்” என்ற பதில், நாம் கேட்ட கேள்விக்கான பதிலாக அமையவில்லை. பலியிடும் படி உங்கள் நபி சொல்லட்டும், அல்லது அல்லாஹ் சொல்லட்டும், கேள்வி என்னவென்றால், “ஏன் மிருகம் பலியிடப்படவேண்டும்?” என்பதாகும், யார் கட்டளையிட்டார்கள் என்பதல்ல.

  • ஆபேல் அல்லாஹ்விற்கு ஒரு மிருகத்தை காணிக்கையாக பலியிட்டான் - ஏன்? 
  • ஆபிரகாமின் மகனை மீட்க, ஒரு மிருகம் பலியிடப்பட்டது - ஏன்? 
  • பிறக்கும் குழந்தையை அடைமானத்திலிருந்து மீட்க ஆடுகள் பலியிடப்படுகின்றன- ஏன்?

ஒரு உயிரை மீட்க இன்னொரு உயிர் பலியிடப்படுகின்றது என்பதைப் பார்க்கிறோம், ஏன் இப்படி? என்பது தான் கேள்வி. மனிதன் அல்லாஹ்விற்கு கீழ்படிந்து தொழுதுக்கொள்வது போதாதா? நல்ல செயல்களைச் செய்வது போதாதா? மற்றவர்களிடம் நீதி நேர்மையாக நடந்துக்கொள்வது போதாதா? தங்கள் வாழ்க்கையை பரிசுத்தமாக காத்துக்கொள்வது போதாதா? ஏன் ஒரு மிருகத்தின் இரத்தம் அல்லாஹ்விற்காக சிந்தப்படவேண்டும்?

இக்கேள்விகளுக்கு பதில் இஸ்லாமில் இல்லை. ஒருவேளை, முந்தைய வேதங்களில் இக்கேள்விகளுக்கான பதில் காணப்படுமா?

4) யூத வேதங்களில் ’அகீகா’ அல்லது பிள்ளையை மீட்க செலுத்தப்படும் பலி

இந்த தொடர் கட்டுரைகளில் நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பைபிளில் பதில் உள்ளது. ஆனால், தற்போது நாம் பைபிளிலிருந்து ‘அகீகா’விற்கு ஒத்து இருக்கின்ற, ஒரு விஷயத்தை மட்டும் இங்கு காண்போம் [4]. மற்ற பலிகள் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால் இதர கட்டுரைகளில் காண்போம். 

1) யூதர்களில் முதலாவதாக பிறக்கும் ஆண்பிள்ளைகளும், மிருக ஜீவன்களில் முதலாவதாக பிறப்பவைகளும் கர்த்தருக்கு சொந்தமானவர்கள். எனவே அவர்களை மீட்டுக்கொள்ளவேண்டும். 

2) ஏன் இந்த கட்டளையென்று பார்த்தால், இஸ்ரேல் மக்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வருவதற்கு, பார்வோனிடம் காட்டப்பட்ட கடைசி அற்புதம், எகிப்தில் இருக்கும் அனைத்தின் தலைப்பிள்ளைகள் சங்கரிக்கப்பட்டதாகும். ஆனால், யூதர்களின் தலைப்பிள்ளைகளை, மிருக ஜீவன்களின் தலைப்பிள்ளைகளை கர்த்தர் தனக்கென்று ஏற்படுத்திக்கொண்டு அவர்களை காப்பாற்றினார்.

3) இதன் ஞாபகமாக, யூதர்கள் தங்கள் ஆண் தலைப்பிள்ளைகளை பிறந்த எட்டாம் நாளிலே, ஒரு ஆட்டைக்கொண்டு மீட்டுக்கொள்ளவேண்டும். 

4) ஒரு உயிருக்காக இன்னொரு உயிர் பலியிட்டு, அந்த பிள்ளையை கர்த்தரிடமிருந்து மீட்டுக்கொள்ளவேண்டும்.

முடிவுரை:

பைபிளில் பலிகள் செலுத்துவது பற்றி அனேக விவரங்கள் உள்ளன. பாவ நிவாரண பலி, சர்வாங்க தகனபலி என்று பல பலிகள் பற்றி பைபிள் குறிப்பிடுகின்றது. கிறிஸ்தவ இறையியலின் படி, இவைகள் அனைத்தும் இயேசுவைக் குறிக்கும். ஆனால், இயேசுவின் தியாக பலியை (குர்பானியை) மறுக்கும் முஸ்லிம்கள், சில பலிகளை இன்னும் அறியாமையில் செலுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு உயிரை அடைமானத்திலிருந்து (அகீகா) மீட்டுக்கொள்ள இன்னொரு உயிரை(ஆடுகளை) பலியிடுகிறார்கள். அல்லாஹ் கூட ஆபிரகாமின் மகனை மீட்டுக்கொள்ள (யாரிடமிருந்து?), ஒரு ஆட்டை பலியிட்டு, அது ஒரு மகத்தான பலி என்று குர்-ஆனில் சொல்லிக்காட்டுகின்றான். மிருகங்களின் இரத்தமும், மாமிசமும்  அல்லாஹ்வைச் சேராது என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டு, இன்னொரு புறம் மிருகங்களின் இரத்தம் சிந்தப்பட இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இது இஸ்லாமின் முரண்பாடு என்பதா? அல்லது அறியாமையென்பதா? இயேசுக் கிறிஸ்து சமாரிய பெண்ணிடம் அன்று சொன்னது போல, இன்று முஸ்லிம்களிடம்  சொல்லவேண்டி வருகிறது: 

நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுது கொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. (யோவான் 4:22)

எல்லா முஸ்லிம்களுக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அடுத்த தொடரில் சந்திப்போம்…


அடிக்குறிப்புக்கள்:

[1] aasirsalafi.blogspot.in/2012/03/01.html

[2] www.islamkalvi.com

[3] www.onlinepj.com/egathuvam/2006-ega/ega_mar_2006

[4] தலைப்பிள்ளைகளை மீட்டுக்கொள்வது ஏன்?   

அ) பார்வோனுக்கு தண்டனை

யாத்திராகமம் 11:4  அப்பொழுது மோசே: கர்த்தர் நடுராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப்போவேன். 

யாத் 11:5  அப்பொழுது சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் ஏந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி,

ஆ) கர்த்தருக்கு பரிசுத்தமாகும் முதற்பிறப்பு

யாத் 13:1  கர்த்தர் மோசேயை நோக்கி: 

யாத் 13:2  இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.

இ) ஏன் இதனை செய்யவேண்டும்? எதிர் கால சந்ததியின் கேள்வியும், யூதர்கள் சொல்லவேண்டிய பதிலும்

யாத் 13:11  மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது, 

யாத் 13:12  கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள். 

யாத் 13:13  கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக.

யாத் 13:14  பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். 

யாத் 13:15  எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள்வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். 

யாத் 13:16  கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான். 


பக்ரீத் கட்டுரைகள் பக்கம்

ரமளான் கட்டுரைகள் பக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்