சமீபத்தில் நடந்தது என்ன? "முஹம்மதுவின் அந்த வீடியோவைப் பற்றி" ஒரு முன்னாள் இஸ்லாமியரின் கருத்துக்கள்

ஆசிரியர்: கேல்ட்

உலகமனைத்திலும் உள்ள இஸ்லாமியர்கள் அதிக கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கோபம் எந்த அளவிற்கு எட்டியுள்ளதென்றால், எகிப்து, லிபியா மற்றும் யெமன் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கி மேலும், ஒரு  அமெரிக்க தூதரை கொன்றுள்ளார்கள், இதர தூதரக ஊழியர்களை காயப்படுத்தியுள்ளார்கள். யூடியூபில் வெளியான ஒரு வீடியோவினால் இஸ்லாமியர்களின் மனது புண்பட்டுள்ளது, இஸ்லாமின் நபியாகிய முஹம்மதுவை கேலி செய்வதாக அந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு முன்னாள் அரபி முஸ்லிமாவேன். இப்போது நான் இயேசுவை பின்பற்றுபவனாக இருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன். நீங்கள் என்னுடைய சாட்சியை  படிப்பீர்களானால், இஸ்லாமை, முஹம்மதுவை, குர்-ஆனை விமர்சிப்பதில் என்னுடைய பாணியை உங்களால் காணமுடியும்.  என்னுடைய விமர்சனங்கள் முக்கியமாக என்னுடைய இஸ்லாமிய அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும், மேலும் என் முன்னாள் மதமாகிய இஸ்லாமிலிருந்து நான் வந்தவன் ஆகையால், அதன் அடிப்படையில் என் விமர்சனங்கள் காணப்படும். என் விமர்சனங்கள் நான் "உண்மை" என்று கருதும் விஷயங்கள் மீது ஆதாரப்பட்டு இருக்கும். ஆகையால், நான் ஏன் இஸ்லாமை, முஹம்மதுவை குர்-ஆனை  புறக்கணித்தேன் என்ற கேள்விக்கே இடமில்லை.

நான் என் வாழ்வின் அனேக ஆண்டுகள் அரேபிய நாடுகளில் மற்றும் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தபடியினால், இஸ்லாமை புறக்கணித்த அனேகரை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவர்களில் இரண்டு வகையினரை நான் சந்தித்துள்ளேன். இந்த இரண்டு பிரிவினரின் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. 

இந்த பிரிவினரில் முதல் வகையினர், முன்னாள் முஸ்லிம்களாவார்கள். இவர்கள் தங்கள் இஸ்லாமிய புறக்கணிப்பை அதிக தீவிரமாக விமர்சிக்கின்றனர். இவர்கள் தெரிந்தே உண்மையை திருத்தி, உண்மையோடு கற்பனையையும் சேர்த்து விமர்சிப்பார்கள். இதன் மூலம் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இஸ்லாம்  ஒரு தீய மார்க்கம் என்பதை காட்ட முயற்சி எடுக்கிறார்கள்.

இரண்டாவது வகையினர், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்களாக மாறிய முன்னாள் முஸ்லிம்களாவார்கள். இவர்கள் தங்கள் இஸ்லாமிய தாய் நாடுகளில் அனேக பாடுகளுக்கும், தீவிர கொடுமைகளுக்கும், நேரடியாகவோ மறைமுகமாகவோ உள்ளானவர்கள். 

இந்த வகையான மத்திய கிழக்கு முன்னாள் முஸ்லிம்கள் (தற்போது கிறிஸ்தவர்கள்), இதர முன்னாள் முஸ்லிம்களை அழைத்து, 

"இஸ்லாம் எப்படிப்பட்ட தீய மார்க்கமாக இருக்கிறது" என்பதை வெளிக்காட்ட அனேக கூட்டங்களை போட்டு பேசுவார்கள். மேலும், தாங்கள் இஸ்லாமை ஏன் வெறுக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் "இவைகள் தான்" என்பதை மற்றவர்களுக்கு விளக்க இவர்கள் முயற்சி எடுக்கிறார்கள்.

இஸ்லாமுக்கு எதிராக போராட்டம் செய்யும் இந்த வகையான முன்னாள் முஸ்லிம்களை நான் கவனித்து பார்த்துள்ளேன். தாங்கள் சொல்லும் விவரங்களில் உண்மை உள்ளதா என்பதை பார்த்து செயல்பட இவர்கள் தவறிவிடுகின்றனர். இவர்களை பொறுத்தமட்டில், இஸ்லாமுக்கு, முஹம்மதுவிற்கு குர்-ஆனுக்கு எதிராக விமர்சனம் செய்தால் அதுவே போதும் என்று நினைத்து விடுகின்றனர்[1].

ஆன்சரிங் இஸ்லாம்  என்ற தளத்தில் ஆழ்ந்த இஸ்லாமிய விமர்சனம் செய்யப்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த தளத்தில் கட்டுரைகளை எழுதும் நாங்கள் அனைவரும், எங்கள் கண்களை உண்மையின் பக்கம் சாய்த்து, நாங்கள் முன் வைக்கும் விமர்சனங்களை நிருபிக்கமுடியுமா என்பதை கவனத்தில் கொண்டு விமர்சிக்கிறோம். உண்மை என்று நிருபிக்க முடிந்த விவரங்களை மட்டுமே நாங்கள் எழுதுகின்றோம். நாங்கள் உண்மைக்கு வெளியே சென்று விமர்சிப்பதில்லை, மேலும் எங்கள் விவரங்களில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவைகளை சரி செய்துக்கொள்கிறோம்.  இந்த தளம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, அனேக தவறான விவரங்களை எங்கள் தளத்திலிருந்து நீக்கியுள்ளோம், மேலும் தவறுகளை சரிபடுத்தியுள்ளோம். உண்மையில் அனேக நேரங்களில், நான் இந்த தளத்தின் உள்வட்ட தள நிர்வாகிகள் குழுவில் இருந்துக்கொண்டு, எங்களிடம் பதிக்க வரும் புதிய கட்டுரைகளை சரி பார்த்துள்ளேன், மேலும் ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளையும் படித்துப்பார்த்து, சொல்லப்பட்ட விவரங்கள் உண்மையானவையா என்று சோதித்துள்ளேன். முக்கியமாக முஹம்மது, இஸ்லாம் போன்ற விவரங்கள் பற்றி எழுதும் போது, ஒரு சிறிய தவறான குற்றச்சாட்டு கூட நாங்கள் தெரியாமல் இவர்கள் மீது சுமத்திவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். உண்மையையே சொல்லவேண்டும் என்று எங்களை ஒப்புக்கொடுத்துள்ளோம், தவறான சொந்த விமர்சனங்களை அல்ல.

கடந்த 17 ஆண்டுகளாக இணைய தளத்தில் நான் செய்த உரையாடல்களின் மூலம் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், நாம் உண்மையை நேசித்து அதனை அன்போடு இஸ்லாமியர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதாகும். நாம் உண்மையாக இஸ்லாமியர்களை நேசிக்கவேண்டும், மேலும் அவர்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்று மனதார விரும்பவேண்டும். உண்மையோடும், அன்போடும் அவர்களின் மற்றும் நம்முடைய நம்பிக்கைப் பற்றிய உரையாடல்கள் தான் இப்போதைய தேவையாக உள்ளது.  நாம் முகஸ்துதி செய்யவேண்டிய அவசியமில்லை, இஸ்லாமுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, வீண் விளம்பரங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை. கடந்த காலங்களில் அறியாமையினால் நானும் இப்படிப்பட்ட உபயோகமற்ற உரையாடல்களில் ஈடுபட்டு இருந்தால், அதற்காக இப்போது நான் மனம் வருந்துகிறேன். ஏனென்றால், ஆரம்ப காலங்களில் நான் முதிர்ச்சி அடையாதவனாக இருந்துள்ளேன், அல்லது இஸ்லாமியர்களை நேசிப்பதை விட்டுவிட்டு அதிக கோபம் அடைந்தவனாக இருந்துள்ளேன்.

"முஸ்லிம்களின் அறியாமை" என்ற பெயரில் முஹம்மதுவை பரியாசம் செய்யும் வீடியோவில் அனேக நிருபிக்கப்படாத விஷயங்களும், சரித்திர தவறுகளும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பற்றி காணப்படுகிறது. தனிப்பட்ட முறையில் நான் கூறவேண்டுமென்றால், இந்த வீடியோவை தயாரித்தவர்கள் சத்தியத்தை அவர்கள் நேசிக்கிறார்கள் என்பதற்காகவோ, அல்லது முஸ்லிம்களை நேசிக்கிறார்கள் என்பதற்காகவோ தயாரிக்கவில்லை.  அதற்கு பதிலாக இஸ்லாமிய நபிக்கு எதிரான தங்களின் தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணமே இதற்கு முக்கிய காரணமாக காணப்படுகிறது. 

ஒரு உண்மையான கிறிஸ்தவன் ஒருவரையும் வெறுக்கக்கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளான். நாம் முஸ்லிம்களை நேசிக்கவேண்டும். அவர்களை நேசிக்கவில்லையானால், அவர்களை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுங்கள். வெறுப்பின் உணர்வோடு உண்மையை சத்தமாக சொல்லவேண்டாம்.  உண்மையை அமைதியாகவும் அன்பாகவும் சொல்ல உங்களால் சொல்லமுடியாவிட்டால், நீங்கள் சும்மா இருந்துவிடுங்கள், இஸ்லாமியர்களுக்கு அன்போடும் சாந்தத்தோடும் சத்தியத்தை சொல்பவர்கள் சொல்ல வழிவிடுங்கள்.  எபேசியர் 4:15 நமக்கு ஞாபகப்படுத்தும் விவரம் இது தான்: "அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்".

கடைசியாக, எனக்கு இறைவன் ஒரு ஆவிக்குரிய குடும்பத்தையும், வாழ்வையும் கொடுத்து இருந்தாலும், இன்னும் என்னுடைய இதர சொந்தக்காரர்கள் இந்நாள் வரைக்கும் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள். ஆகையால், இந்த வீடியோவின் மூலம் அவர்கள் அடைந்த மன வேதனையை, அவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தையும் நான் உணரமுடிகிறது, அதற்காக இஸ்லாமியர்களுக்காக நான் மனம் வருந்துகிறேன்.  ஆகையால், இந்த வீடியோவை நான் புறக்கணிக்கிறேன், ஏனென்றால், இஸ்லாமிய நபியாகிய முஹம்மது பற்றிய உண்மைகளை இந்த வீடியோ பிரதிபலிக்கவில்லை. அதே சமயத்தில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதல்களை நான் கண்டனம் செய்கிறேன்.  தாக்குதல்கள் தவிர இதர வகையான பதில்களையும் இஸ்லாமியர்கள் கொடுத்து இருக்கலாம், அதைவிட்டுவிட்டு வன்முறையில் ஈடுபடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.  நம்முடைய தவறான செய்லகள் பற்றிய உண்மையான மனஸ்தாபத்தை இறைவன் நமக்கு கொடுப்பாராக.

எல்லா இஸ்லாமியர்களும் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் ஆசையாக இருக்கிறது, "தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.  எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.   விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்." (ரோமர் 10:2-4)

பின்குறிப்புகள்:

1) இதே கருத்தை இஸ்லாமியர்களிடமும் கேட்கப்படுகிறது, அதாவது பைபிள் மற்றும் கிறிஸ்தவத்திற்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்பும் இஸ்லாமியர்களும் இதனை கருத்தில் கொள்ளவேண்டும். ஆனால், இந்த கட்டுரையில் உட்கருத்து இதைப் பற்றியது அல்ல.

ஆங்கில மூலம்:  What Just Happened? A Former Muslim's Thoughts on the "Muhammad Video"

மூலம்: http://isakoran.blogspot.in/2012/10/blog-post.html

கேல்டு அவர்களின் கட்டுரைகள் பக்கம்